புதன், 31 ஜனவரி, 2018

புதிய வாக்கி டாக்கி வாங்கிய ஊழல் .... டி ஜி பி மீது நடவடிக்கை எடுக்க கோரி ..

நக்கீரன் :டிஜிபி மீது நடவடிக்கை எடுக்ககோரி வழக்கு
 காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்குவதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக டிஜிபி மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில் முருகன் தாக்கல் செய்துள்ள மனுவில்
காவல்துறையினரின் தகவல் தொடர்புக்காக வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து 11 வினாக்களை எழுப்பி தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியிருந்தார் என்றும் அதில்  காவல்துறைக்கு வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டபோது, மோட்டோரோலா சொல்யூசன்ஸ் என்ற ஒரு நிறுவனம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளிகளை கோரியிருந்தது.  மோட்டோரோலா சொல்யூசன்ஸ் நிறுவனத்திற்கு 83.45 கோடிக்கான ஒப்பந்தத்தை காவல்துறை தலைமை இயக்குனர் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

2017-18 ஆம் ஆண்டில் காவல்துறையை நவீனமாக்கும் திட்டத்தின்படி 47.56 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதை  கொண்டு 10 ஆயிரம் வாக்கி-டாக்கிகள் வாங்கப்பட வேண்டும். ஆனால், அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மாறாக மொத்தம் 83.45 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் வெறும் 4000 வாக்கி-டாக்கிகளுக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. அனுமதிக்கப்பட்ட தொகைக்கும் கூடுதலாக ஒப்பந்த வழங்கியது மிகப்பெரிய விதிமீறலாகும். அதுமட்டுமின்றி பெருமளவில் ஊழலும் நடைபெற்றுள்ளது.
தமிழக அரசு ஒதுக்கிய 47.56 கோடியில்  வாக்கி டாக்கிகள் அதாவது ஒரு வாக்கி-டாக்கி 47,560 என்ற விலையில் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு வாக்கி- டாக்கியின் விலை .47,560 என்பதே வெளிச்சந்தை விலையை விட மிக மிக அதிகம் ஆகும்.
ஆனால், அதைவிட மிகவும் அதிகமாக ஒரு வாக்கி டாக்கி 2.08 லட்சம் என்ற விலைக்கு வாங்கப் பட்டிருக்கிறது.
ஆனால்,83.45 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ள நிறுவனத்திற்கு, ஒப்பந்தம் பெறுவதற்கான அடிப்படைத் தகுதியான தகவல் தொடர்பு கருவிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான உரிமம் கூட இல்லை. அந்த உரிமத்தை 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் வாங்கித் தருவதாக அந்த நிறுவனம் உத்தரவாதம் அளித்ததை ஏற்று இந்த ஒப்பந்தத்தை காவல்துறை வழங்கியிருக்கிறது.
இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது,எனவே இது குறித்து டிஜிபி மீது நடவடிக்கை எடுக்ககோரி தலைமை செயலாளருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை
எனவே டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
– சி.ஜீவா பாரதி
nakkeeran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக