புதன், 10 ஜனவரி, 2018

ராமகோபாலன் கனிமொழி, வைரமுத்துவுக்கு கண்டனம் ! இந்து மதத்தை இழிவு படுத்துவதை...

tamilthehindu :வைரமுத்து, ராமகோபாலன்   –  கோப்புப் படம்

ஆழ்வார்களில் ஒருவராகிய ஆண்டாளைப்பற்றி அவதூறாகப் பேசியதாக கவிஞர் வைரமுத்துவுக்கு இந்துமுன்னணி தலைவர் ராமகோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”பாவை நோன்பு மாதமாகிய மார்கழி மாதத்தில், திருப்பாவை இயற்றிய, ஆழ்வார்களில் ஒருவராகிய ஆண்டாள் நாச்சியாரை கொண்டாட ராஜபாளையம் திருக்கோயிலில் விழா நடைபெற்றது. இவ்விழாவானது, பாரம்பரியமிக்க தனியார் நாளிதழ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி. இதில் கலந்துகொண்டு பேசிய, வைரமுத்து, ஆண்டாள் பற்றி அவதூறாகப் பேசியது பக்தர்களின் மனங்களை புண்படுத்தும் செயல். இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. வயிற்றுப் பிழைப்பிற்காக தமிழ் மொழியைப் பேசித் திரியும் வைரமுத்துவிற்கு, ஆண்டாள் நாச்சியாரைப் பற்றி பேச தகுதி உண்டா? நிச்சயம் கிடையாது. இதுபோன்ற அவதூறான கருத்தினைப் பேசிட எது இவருக்கு துணை நிற்கிறது, எது காரணம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இப்படி இவர் பேசிய இடம் திராவிட கழகத்தின் கூட்டமும் இல்லை, அது நாத்திக மேடையும் இல்லை. அப்படியிருக்க இதுபோன்ற பண்பாட்டு மேடையில் இவரைப் பேச அழைத்து வந்தவர்களுக்கு கிடைத்த பரிசு தான் இவர் கூறிய கருத்து.

தமிழகத்தில் மட்டுமல்ல, இம்மாதத்தில் உலகம் முழுவதும் தமிழ் சமுதாயம் ஆண்டாளின் திருப்பாவை விழா கொண்டாடப்பட்டு வருவதை காண்கிறோம். ஔவையாரும், ஆண்டாளும் தமிழ் சமுதாயத்திற்கு செய்துள்ள சேவைக்கு, உலகம் உள்ள அளவும் தமிழர்களாகிய நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
இதுபோன்ற நச்சு கருத்துகளுக்கு பதிலடி கிடைக்கும். வைரமுத்து, தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இல்லையேல் அவரது கருத்திற்கு உரிய பதிலை அவருக்கு புரியும் மொழியில் மக்கள் அளிக்கவும் தயங்க மாட்டார்கள் என்பதை நினைவூட்டுகிறோம். ”
இவ்வாறு ராமகோபாலன் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று திருச்சியில் திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி பேசியதற்கும் ராமகோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பதி வெங்கடாசலபதி குறித்த கனிமொழியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராமகோபாலன், ”கனிமொழி அரசியல்வாதியாக இருக்கட்டும், இல்லையேல் பகுத்தறிவு என்ற பெயரில் இந்து விரோத கருத்துகளைப் பரப்பும் செயலை செய்யட்டும். இந்து விரோத கருத்தை கூறிக்கொண்டு செயல்படுவது, அவர், தான் ஏற்றுக்கொண்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவி பிரமாணத்திற்கு எதிரானது என்பதைப் புரிந்துகொள்ளட்டும்.
திமுக தொண்டர்கள் ஒன்று அவர்களது இந்து விரோத செயல்பாட்டை மாற்றுங்கள், இல்லையேல் தன்மானத்தோடு, சுயமரியாதையோடு திமுகவைவிட்டு வெளியேறுங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக