சனி, 6 ஜனவரி, 2018

ஜூடோ ரத்தினம் ... உடம்பில் பல காயங்கள், அந்த ரணம் இன்னும் ஆறல

நக்கீரன் :சினிமாவில் பெரும் சண்டைக் கலைஞர். 1200 படங்களுக்குமேல் ஃபைட் மாஸ்டராக பணியாற்றியவர், இந்தியா முழுமைக்கும் அவரது சண்டைக்காட்சிகள் பேசப்பட்டன. சிவாஜி, என்.டி.ஆர், ராஜ்குமார், கமல், ரஜினி என பலப்பல ஹீரோக்களை சண்டை போடவைத்தவர். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், "தன்னால் மறக்க முடியாத சண்டைக் காட்சி' என இன்றளவும் குறிப்பிடுவது "முரட்டுக்காளை' திரைப்படத்தில் வரும் ரயில் சண்டைக்காட்சி. ஜப்பானின் சண்டையான ஜுடோ கலையை இந்திய சினிமாவில் புகுத்தியவர் மாஸ்டர் ரத்தினம். அதன்பின்பே ஜுடோ ரத்தினமானார்.
;அந்த ஜுடோ ரத்தினம் சினிமாவை விட்டு ஒதுங்கி வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் வசிப்பதாகக் கேள்விப்பட்டு அவரை சந்தித்தபோது... ""நான் ஒரு முடமானவன். என்னிடம் பேச வந்திருக்கீங்களே'' என சிரித்தபடி வரவேற்றார். அவர் வீடுமுழுக்க அவர் வாங்கிய பதக்கங்கள் நிரம்பியிருந்தன. அவரிடம் பேசியபோது, ""என் குடும்பம் நெசவுத்தொழில் செய்த குடும்பம். எனக்கு 2-வதுக்கு மேல படிப்பு வரல. குடியாத்தத்தில் பிரபலமான திருமகள் நூல் மில்லில் வேலைக்கு ஆள் எடுத்தாங்க. 18 வயதான நான் அந்த மில்லுக்கு வேலைக்கு போனப்ப, நான் ரொம்ப ஒல்லியா இருக்கேன்னு வேலைக்கு எடுக்கல. மேனேஜரோட கால்ல விழுந்து "வேலைக்கு எடுத்துக்குங்க, கஷ்டமான குடும்பம்'னு சொல்லி சேர்ந்தேன்.
உடம்ப தேத்தறதுக்கான வேலைகளில் இறங்கினேன். தென்னிந்திய பாக்ஸிங் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த பரமசிவம் நாடாரிடம், பாக்சிங், கத்திச்சண்டை, சிலம்பாட்டமும், மைசூர் உடல்அழகன் ராமு சாரிடம் பளு தூக்கறதும், தங்கவேல் சாரிடம் யோகாசனம்னு 20 வயதிற்குள் எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். என் உடல் வலிமையைப் பார்த்துட்டு மேனேஜர் வர்கீஸ் பாராட்டினார். நான் கம்யூனிஸ்ட், மில் முதலாளி முதல்வராயிருந்த காமராஜருக்கு நெருக்கமான காங்கிரஸ் பிரமுகர். மில்லின் கேண்டீன் சங்க தலைவர் தேர்தலில் முதலாளி நிறுத்திய வேட்பாளரை எதிர்த்து வெற்றி பெற்றேன். அந்த வெறுப்பில் "டீ க்ளாஸ் உடைஞ்சிடிச்சி'னு சொல்லி வேலையைவிட்டு நீக்கிட்டார்.

கம்யூனிஸ்ட் பிரமுகரான வி.கே.கோதண்டன் தோழர் மூலமா 1959-ல் கதாசிரியர் முகவை.ராஜமாணிக்கத்திடம் அறிமுகம் ஆனேன். அவர் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான முக்தா.சீனிவாசனிடம் அறிமுகப்படுத்தினார். அவர் "தாமரைகுளம்' படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் நடிக்க வாய்ப்பு வழங்கினார். அதுதான் என்னோட முதல் படம். அதன்பின் சின்ன சின்ன வேடங்களில் நடிச்சிக்கிட்டிருந்தேன். 1964-ல் வெளிவந்த மனோரமா கதாநாயகியா நடிச்ச "கொஞ்சும் குமரி' படத்தில் மனோரமாவின் தம்பியாவும், ஃபைட் மாஸ்டராவும் அறிமுகமானேன். "முரட்டுக்காளை' படத்தில் ரயில்மேல் நடைபெறும் சண்டைக் காட்சியை எந்தவித பாதுகாப்பும் இல்லாத நிலையில் எடுத்தேன். அந்த சண்டைக் காட்சி என்னை புகழின் உயரத்துக்கு கொண்டும்போனது.

1972-ல் மிசா சட்டம் வந்தப்ப "சினிமாவில் சண்டைக்காட்சி இருக்கக்கூடாது'ன்னு உத்தரவு போட்டதால் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம மிட்டாய்கடை வச்சேன். மிசா சட்டம் போனபின் மீண்டும் திரைப்படங்களில் சண்டைக்காட்சி இடம்பெறத் தொடங்கியது. 1973-ல் "ருத்ரநாகம்' பயிற்சி எடுத்து பட்டம் வாங்கினேன். சினிமாவில் நாகம் மாதிரி சண்டை போடுவதைக் கொண்டு வந்தேன். அது பல படங்களில் பேசப்பட்டது. வித்தியாசமான சண்டைக் காட்சிகள் அமைத்ததால் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலின்னு 1200 படங்களுக்கு மேல் மாஸ்டரா பணிபுரிஞ்சேன். என்னோட டீம்களின் வித்தியாசமான சண்டைக் காட்சிகளைப் பார்த்துட்டு பாகிஸ்தானில் இருந்து ஒரு படத்தில் மாஸ்டரா பணிபுரியக் கேட்டாங்க. அவுங்கள தமிழ்நாட்டுக்கு வரவச்சி சண்டைக் காட்சிகளை எடுத்து அனுப்புனேன்.

கடைசியா இயக்குநர் சுந்தர்.சி ரொம்ப கேட்டுக்கிட்டதால் "தலைநகரம்' படத்தில் வயதான ரவுடி கேரக்டரில் நடிச்சேன். நடக்க முடியாம முடமானதால் சினிமாவை விட்டு ஒதுங்கிட்டேன். சண்டைக் காட்சிகளில் பெரிய ஹீரோக்களுக்கு டூப்பு போட்டு நடிச்சதில் கால் எலும்புகள் உடைஞ்சது. உடம்பில் பல காயங்கள், அந்த ரணம் இன்னும் ஆறல. அதனால் சண்டைக் கலைஞர்கள் தங்களது உடலை முக்கியமா பார்த்துக்கணும். இல்லைன்னா, என்னைப்போல் ரொம்ப துயரப்பட வேண்டிவரும்.

என் மனைவிகள் இருவரும் இறந்துட்டாங்க. மகன்கள், மகள்கள் சென்னையில் நல்லபடியா இருக்கறதால் நான் சொந்த ஊருக்கே திரும்பி வந்து தனிமையில் வாழறேன்'' என கண்கலங்கி பேசுவதை நிறுத்தியவர்... மீண்டும்,

""இப்போ வரும் சண்டைக் காட்சிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரும் கைதட்டி ரசிக்கும் அளவுக்கு இல்லை. வன்முறையும், ரத்தமும்தான் அதிகமாயிருக்கு. ஹீரோ அடிச்சா பத்து பேர் பறக்கற மாதிரியும், பத்து குட்டிக்கரணம் அடிக்கிற மாதிரி காட்சிகளைப் பார்க்கும்போது அருவருப்பாயிருக்கு. இந்தியின் பெரிய நடிகர் ஜிதேந்திரா ஏ.வி.எம். நிறுவனத்தின் படம் ஒன்றில் நடிச்சார். கோழை கதாநாயகன் சண்டை போடுவதுபோல் காட்சி அமைச்சேன். அந்தக் காட்சியில் நடிக்கும்போது ஜிதேந்திரா கோபமாகி "நான் இப்படிச் சண்டை போடமாட்டேன்'னு இரண்டுமுறை சொன்னார்.
 இதைப் பார்த்த ஏவி.எம்.குமரன் சார், "ஒழுங்கா மாஸ்டர் சொல்றமாதிரி நடிக்கச்சொல்லுங்க. இல்லைன்னா ஹீரோவை மாத்திடுவேன்'னார். இதுதான் ஒரு கலைஞனுக்கான மரியாதை'' என்றவர்...>""எந்த வேலையாக இருந்தாலும் அர்ப்பணிப்போடு செய்யணும் அப்போதுதான் அதில் வெற்றிபெற முடியும்'' என்றார் அழுத்தமாக.&;">-து. ராஜா<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக