வெள்ளி, 19 ஜனவரி, 2018

ஆண்டாள் .. வைரமுத்து மீது போலீஸ் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை ... முகாந்திரம் இல்லை ..

tamilthehindu :ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்துவிற்கு எதிராக சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆண்டாள் பற்றி சர்ச்சைக்குரிய கட்டுரை எழுதியதாக கவிஞர் வைரமுத்து மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை கொளத்தூர் காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தனியார் நாளிதழில் கடந்த 8-ம் தேதி தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து கட்டுரை எழுதியுள்ளார். அதில் ஆண்டாள் குறித்து கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இதனையடுத்து வைரமுத்து கருத்துக்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கவிஞர் வைரமுத்து மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்கும் பதிவு செய்யபட்டது.

வைரமுத்து கட்டுரை குறித்து சமுதாய நல்லிணக்க பேரவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வைரமுத்து மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தமக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கவும் வழக்கை ரத்து செய்யவும் கோரி வைரமுத்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ஆண்டாள் குறித்த கருத்து தன்னுடைய கருத்து அல்ல எனவும், அமெரிக்க எழுத்தாளர் கருத்தை தாம் சுட்டிகாட்டி இருந்தேன். கடவுள் ஆண்டாள் குறித்துதான் எந்த தவறான கருத்துகளையும் குறிப்பிடவில்லை மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவோ அல்லது கலாச்சார சீர்கேடுகளை ஏற்படுத்தும் விதத்திலோ அல்லது அது போன்ற நோக்கிலும் நான் அந்த கருத்து தெரிவிக்கவில்லை.
எனது கருத்தை முழுமையாக அறியாமல் புகார் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. எனவே எனக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கவும் வழக்கை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது வைரமுத்து சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எந்த விதமான கருத்தையும் மனுதரார் தெரிவிக்காத நிலையில் அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் தனியார் நாளிதழில் வைரமுத்து எழுதிய கட்டுரை படிக்கப்பட்டது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி, ''இதில் வைரமுத்து மேற்கோள் காட்டிச் சொல்கிறார். இதை எப்படி அவரது வார்த்தை என்று எடுத்துக்கொள்ள முடியும், இதில் அவர் மீது குற்றவியல் வழக்கு தொடர என்ன முகாந்திரம் உள்ளது.
எனக்குத் தெரிந்து வைரமுத்து ஆண்டாள் பற்றி கூறிய கருத்தில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை'' என்றார். மேலும், நீதிபதி வழக்கை மதியம் 2.15 மணிக்கு ஒத்திவைத்தார். வழக்கு மீண்டும் மதியம் விசாரணை தொடங்கியது.
காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனு தொடர்பாக தங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும், வழக்கு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்ப்பதாக தெரிவித்தார்.
அப்போது நீதிபதி செய்தித்தாளில் வெளிவந்த கருத்து மனுதரார் கருத்து என்று எப்படி கூற முடியும். அவர் சில குறிப்புகளை சுட்டிக்காட்டியுள்ளார் இதற்கு எப்படி மனுதரார் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார்.
பின்னர் அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதபதி ரமேஷ், சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிப்பதாகவும், மனு தொடர்பாக காவல் ஆய்வாளர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதபதி வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக