வெள்ளி, 19 ஜனவரி, 2018

ஆண்டாள் முகமூடி அணிந்து வைரமுத்துவை தாக்குவது .. இந்துத்வா சதியே

நக்கீரன் : ஆண்டாள் தமிழ் மரபில் மலர்ந்தவர். பக்தி இலக்கியத்தில் உச்சம் தொட்டவர். அவரைப் பற்றிப் பேசும் தகுதி மதவெறியர்களுக்கு இல்லை’என்கிறார்கள் தமிழ்க் கவிஞர்கள்.
கவிஞர் வைரமுத்துவை மையமாக வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கும் தீப்பந்தம்... இங்கு மக்களாட்சிதான் நடக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. வைரமுத்துவுக்கு எதிராக இந்துத்வா அமைப்புகளின் போராட்டங்கள் ஒரு பக்கம் பதட்டப் பரபரப்பைப் பற்றவைக்க... இன்னொரு பக்கம் வைரமுத்து மீது வழக்குகள் பதிவாகிக்கொண்டேயிருக்கின்றன.
இது இலக்கியவாதிகள், கவிஞர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இவ்வளவு பதட்டப் பரபரப்பிற்கும் காரணம், வைரமுத்துவை வைத்து பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளரான ஹெச்.ராஜா உரசிப்போட்ட தீக்குச்சிதான்.தினமணி நாளிதழ் மற்றும் ராம்கோ குழுமம் சார்பில் ராஜபாளையம் திருமலை திருப்பதி தேவஸ்தான மண்டபத்தில்  நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில்... ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில், ஆண்டாளுக்கு தனது கவித்துவத் தமிழால் ஆராதனை செய்த வைரமுத்து, அந்த ஆய்வுரையில், ஆண்டாள் குறித்து அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுபாஷ்சந்திர மாலிக் என்பவர் வெளியிட்ட ஒரு தகவலையும் குறிப்பிட்டார். ஆய்வுரையில் பல கோணங்களிலான கருத்துகள் இடம்பெறுவது மரபு.
அதற்கு முன்பும் பின்பும் ஆண்டாளின் தமிழ் குறித்துத் தனக்கே உரிய பாவனையோடு வைரமுத்து சிறப்பாக எடுத்துரைத்ததை, ஆன்மிகவாதிகளும் பொதுமக்களும் கைதட்டி ரசித்தனர். ஆனால், அந்த ஆய்வுக்குறிப்பை மட்டும் உருவி எடுத்துக்கொண்ட ஹெச்.ராஜா, 8-ந் தேதி சூளைமேட்டில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில்... "ஆண்டாளை வைரமுத்து கொச்சைப்படுத்திவிட்டார்” என்று கூறி, பத்திரிகைகளில் எழுதமுடியாத அளவிற்கு மிகவும் கீழ்த்தரமாக வைரமுத்தை விமர்சித்தார். அவரது அத்துமீறிய பேச்சு முகநூல், வாட்ஸ்-அப், டுவிட்டர், யு-டியூப் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக நெருப்பாய்ப் பரவ... வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன.

இது தமிழ்க் கவிஞர்களையும், தமிழறிஞர்களையும், தமிழ் உணர்வுள்ள அரசியல் கட்சியினரையும் கொதிப்படைய வைத்திருக்கிறது.

இத்தனைக்கும் வைரமுத்து டுவிட்டரில் ‘ஆண்டாள் விவகாரத்தில் எவரையும் புண்படுத்துவது நோக்கமன்று. புண்பட்டிருந்தால் வருந்துகிறேன். ஆண்டாள் பற்றிய என் கருத்துகள் எல்லாம் அவரின் பெருமைகளைப் பேசுகின்றன. ஆண்டாள் குறித்து அமெரிக்காவின் இண்டியானா பல்கலை ஆய்வு நூலில் கூறிய வரியை மேற்கோள் காட்டினேன். பல்கலையின் கருத்து எனது கருத்து அல்ல. ஆளுமைகளை மேம்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமைப்படுத்துவதல்ல’ என்று தன்னிலை விளக்கத்தையும் வருத்தத்தையும் தெரிவித்தார். தினமணியும் வருத்தம் தெரிவித்திருந்தது. ஆனாலும் வைரமுத்துவுக்கு எதிரான விமர்சனத் தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

வைரமுத்து குறிவைத்துத் தாக்கப்படுவதைப் பார்த்த தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் “ஒருசிலர் தங்களின் சுயநலனுக்காகவும், விளம்பர வெளிச்சத்திற்காகவும் அமைதி தவழும் தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்திலும், தரம்தாழ்ந்த வகையிலும் தமிழ்மண்ணின் கவிஞர் வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயகத்தில் கருத்துக்கு மாற்றுக்கருத்து மட்டும் இருக்கமுடியுமே தவிர, அநாகரிகத்திற்கும் வரம்புமீறலுக்கும் நிச்சயம் தமிழகத்தில் இடமில்லை” என்று எச்சரித்தார். இதேபோல், கனிமொழி, வைகோ, சுப.வீ., சீமான், வ.கௌதமன், தமிழன் பிரசன்னா, நடிகர் விவேக், மன்சூர் அலிகான் என பலரும் ஹெச்.ராஜாவுக்குக் கண்டனம் தெரிவித்தனர். 

ராஜாவுக்குப் பதிலடி கொடுத்த இயக்குநர் பாரதிராஜாவோ, ‘நீ பேசியது அநாகரிகத்தின் உச்சம். உன்னைப் போன்ற மனிதர்களால்தான் இந்தியா துண்டாடப்படப்போகிறது என்ற அச்சம் எனக்கு வருகிறது. நாங்கள் ஆயுதங்களை மறந்துவிட்டோமே ஒழிய, தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் இழக்கவில்லை. எச்சரிக்கை... மறுபடியும் எங்களை ஆயுதம் ஏந்தும் குற்றத்திற்கு ஆளாக்கிவிடாதே’என்றெல்லாம் காட்டம் காட்டியிருக்கிறார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ‘கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டிய அந்த ஆய்வு வெளியாகி 40 ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை காலம் அமைதியாக இருந்துவிட்டு, கவிஞருக்கு எதிராக போராட்டம் நடத்துவது அமைதிப் பூங்காவான தமிழகத்தைக் கலவரக் காடாக்கும் முயற்சி’ என கண்டித்தார்.

நம்மிடம் பேசிய தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் ‘இறைவனை நாயகனாகவும் தன்னை நாயகியாகவும் பாவித்துப் பாடுவதும் அதற்கேற்ப ஆடுவதும் இலக்கிய உத்தி. கண்ணன் என் காதலன் எனப் பாடிய பாரதி, பெண் அல்லர். இதைப்போன்று ஆடவர் பாடிய பாடல் பெயர் தெரியாமல் இறைவன் உள்ளத்தை ஆண்டவள் என்ற பெயரில் ஆண்டாள் என அழைக்கப்பட்டிருக்கலாம்’என ஆண்டாள் பெண்தானா என்கிற ஐயத்தை ராஜாஜியைப் போலவே எழுப்புவதோடு... ‘அவள் பெண்ணாகவே இருந்தாலும் அக்காலத்தில் தேவதாசி என்பது இறைப்பணி ஆற்றும் அன்பர்களைக் குறிப்பதே. ஒரு தவறை எதிர்க்க மற்றொரு தவறைக் கையாள்வது தவறாகும். பா.ஜ.க, இந்துத்துவ வெறியோடு இதனைப் பெரும் கலவரமாக மாற்ற முயல்வது, ஆண்டாளைப் பற்றிய தவறான விவாதத்திற்கே வழிவகுக்கும். எனவே, வன்முறைப் பேச்சுகளைக் கட்டவிழ்த்துவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'’என்கிறார் அழுத்தமாக.

கவிஞர் ஜெயபாஸ்கரனோ, ‘ஆண்டாள் மிகப்பெரிய ஆளுமை. இறை இலக்கியத்துக்குக் கிடைத்திருக்கிற மிகப்பெரிய கொடை. அவரை உயர்த்திப் பேசிய கவிஞர் வைரமுத்துவிடமிருந்து, அவரறியாமல் உதிர்ந்த ஒரு கடுகுக்காக, அவரை ஆயிரம் தேங்காய்களால் தாக்குவது எந்த வகையில் நியாயம். ஆண்டாளின் தமிழைப் படிக்காத, ஆண்டாளை இதுநாள்வரை முன்னெடுக்காத, ஆண்டாளைப் பற்றி எந்தசபையிலும் இதுவரை விரிவுரை நிகழ்த்தாதவர்கள், ஆண்டாளுக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாதவர்கள் இப்போது ஆண்டளுக்காக வரிந்துகட்டுவது வேடிக்கை.  ஆண்டாளுக்காகக் குரல் கொடுப்பதுபோல், மதவெறி நெருப்பைப் பற்றவைக்கப் பார்க்கிறார்கள். இதை ஒருபோதும் ஏற்கமுடியாது’என்கிறார் எரிச்சலாக.

மார்க்சிய இலக்கிய ஆய்வாளரான கோவை ஞானியோ ‘ஏற்கெனவே கவியரசர் வைரமுத்துவும் தினமணி ஆசிரியர் வைத்தியநாதனும் வருத்தம் தெரிவித்ததோடு, இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கவேண்டும். ஒரு நாகரிகச் சமுதாயம் இப்படித்தான் செயல்படமுடியும். இதற்கு மாறாக, இன்னும் ஒருமுறை வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்பது என்ன முறை என்று தெரியவில்லை. இதுகுறித்து திராவிட இயக்கத்தார் மட்டுமல்ல தமிழ் ஆய்வாளர்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும். மதவெறியர்கள் கொலைகாரர்கள் ஆயிற்றே என்று அஞ்ச வேண்டியதில்லை’என்கிறார் நிமிர்வோடு.

முதுபெரும் கவிஞரும் முனைவருமான ஆலந்தூர் மோகனரங்கன் நம்மிடம், ‘ஆண்டாளைச் சிறப்பித்து  கவிஞர் வைரமுத்து பேசிய பேச்சை, சாமர்த்தியமாக அவருக்கு எதிராகத் திசைதிருப்புவது சரியா? ஆண்டாளை உயர்த்தியதற்குத் தண்டனை அவமானமா? வைரமுத்து ஆய்வுக் குறிப்பைத்தானே  சொன்னார்.  அது சரியில்லை என்றால், அந்த ஆய்வாளர் மீதுதானே கோபப்படவேண்டும். அவருக்குத்தானே விளக்கம் தரவேண்டும். அதை விட்டுவிட்டு, யாருடைய கருத்துக்கோ வைரமுத்துவைத் தாக்குவதும், மிரட்டுவதும் சம்பந்தப்பட்டவர்களின் தந்திரத்தையும், மன வக்கிரத்தையும்தான் காட்டுகிறது. ஆண்டாள் சமஸ்கிருதக் கவிஞரல்ல. தமிழ்க் கவிஞர். அவரைப் பற்றி தமிழ் விரோதிகளும் இந்துத்வவாதிகளும் பேசக்கூடாது. ஆண்டாள் எங்கள் தமிழ் மரபில் மலர்ந்தவர். மதவெறிக் கும்பலுக்குச் சம்பந்தமில்லாதவர்’ என்கிறார் தெளிவாக.

கவிஞர் சென்னிமலை தண்டபாணி நம்மிடம், ‘ஆண்டாள், தமிழை ஆண்டாள் என்று கவிஞர் சொன்னாலும் வேண்டாத பாம்பு ஏன் விஷத்தைக் கக்குகிறது? வெல்லும் சொல்லைக் கொல்லும் சொல் வெல்ல முடியுமா? பறவை அதன் போக்கில் பறந்து செல்கிறது. எச்சில் இலை ஏன் எரிந்து பொசுங்குகிறது’ என கவிதை மொழியில் சாட்டையைச் சொடுக்குகிறார்.

திராவிட இயக்கங்களைக் குறிவைத்தும் மத நல்லிணக்கத்தை உருக்குலைக்கும் நோக்கிலும் இந்துத்துவா சக்திகள், வன்முறை அரசியலைக் கையிலெடுக்கத் துடிப்பதையே... ஹெச்.ராஜா பற்றவைத்திருக்கும் நெருப்பு அடையாளப்படுத்துகிறது. 

கவிஞர் வைரமுத்து செய்துவருவது தமிழ் இலக்கியத்திற்கு பெருமை சேர்க்கும் செயல். அதனை திசைதிருப்பி மதவெறியை விதைப்பது ஆபத்தானது.

- தமிழ்நாடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக