திங்கள், 8 ஜனவரி, 2018

பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் லஞ்சத்தை சட்டபூர்வமாக்க வசதி,,,

-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
தேர்தல் பத்திரங்கள் குறித்து
முதன்முறையாக 2017-18 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபோது ஐயுறவுடன் நாம் என்ன ஊகித்தோமோ அது தற்போது நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான திட்டத்தின் விவரங்களைக் கோடிட்டுக் காட்டியிருப்பதிலிருந்து உறுதியாகி இருக்கிறது. இந்தத் திட்டமானது, கார்ப்பரேட்டுகள் ஆளும் கட்சிக்குப் பெரிய அளவில் நிதி அளிப்பதற்கு, சட்டபூர்வமாக வசதி செய்து தருவதைத்தவிர வேறு ஒன்றும் அல்ல என்பதேயாகும்.
இந்தத்திட்டம் குறித்து நிதியமைச்சர் கூற்றின்படி, தேர்தல் பத்திரங்கள் பிராமிசரி நோட் போன்று ஒரு கொணர்பவர் கருவியாக (bearer instrument-ஆக) இருந்திடும். பாரத ஸ்டேட் வங்கியின் தேர்வு செய்யப்பட்ட கிளைகள் தேர்தல் பத்திரங்களை வெளியிடும். அவற்றை முறையான வங்கிக் கணக்குகள் மூலம் வாங்கிக் கொள்ளலாம். பத்திரங்கள் 1000 ரூபாய், 10 ஆயிரம் ரூபாய், 1 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய், 1 கோடி ரூபாய் என்கிற முறையில் இருந்திடும். பத்திரங்கள் அதற்கான பாரத ஸ்டேட் வங்கியின் அதற்காக ஒதுக்கப்பட்ட கிளைகளில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் பத்து நாட்களுக்குக் கிடைத்திடும்.


பத்திரங்களுக்கு 15 நாட்களுக்கான உயிர் உண்டு. அதற்குள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிக்கு அதனைக் கொடுத்துவிட வேண்டும். அந்தக் கட்சிகள் தங்களுடைய வங்கிக் கணக்கு மூலமாக அதனைப் பணமாக மாற்றிக் கொள்ள முடியும்.    யாரிடமிருந்து அந்தப் பத்திரம் வாங்கப்பட்டது என்கிற உண்மையை அதை வாங்கிய அரசியல் கட்சி வெளிப்படுத்த வேண்டியதில்லை.

இவ்வாறான தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதை மேலும் வெளிப்படைத்தன்மையுடனும், துப்புரவான முறையிலும் கொண்டுவந்திடும் என்று நிதியமைச்சர் கூறுகிறார். என்னே வஞ்சகமான வார்த்தைகள்! உண்மைக்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் உண்டா? வெளிப்படைத்தன்மைதான் உங்கள் லட்சியம் என்றால், தேர்தல் பத்திரத்தைக் கொடுப்பவர் யார் என்பதையும், எந்தக் கட்சி அதை வாங்கிக்கொண்டிருக்கிறது என்பதையும் மக்களுக்கு வெளிப்படுத்திட வேண்டும். இல்லையா?

இவ்வாறு தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் கொண்டுவந்திருக்கும் முறையானது ஆளும் கட்சிக்கு கார்ப்பரேட்டுகள் நிதி அளிப்பதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறது, இலஞ்சத்தையும், ஊழலையும் சட்டபூர்வமாக்கிட வழிதிறந்து விட்டிருக்கிறது. கம்பெனிகள் ஆளும் கட்சிக்கு அபரிமிதமான முறையில் நன்கொடைகள் அளிப்பது, அவை தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்வதற்கான ஊக்க மருந்தாக செயல்படும். ஏற்கனவே சென்ற நிதித்திருத்தச் சட்டமுன்வடிவின்மூலம், கம்பெனி சட்டத்திற்கு ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம், கம்பெனிகள் முந்தைய மூன்று ஆண்டுகளில் கிடைத்த நிகரலாபத்தில் சராசரியாக 7 சதவீதம் வரைதான்  அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கமுடியும் என்றிருந்த உச்சவரம்பு நீக்கப்பட்டுவிட்டது. மேலும், அந்தத் திருத்தத்தின் மூலம், கம்பெனிகள் எந்த அரசியல் கட்சிக்கு நிதி அளித்துள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்கிற தேவையையும் கைகழுவிவிட்டது.  

இவ்வாறு, ஒரு கம்பெனி ஓர் அரசியல் கட்சிக்கு வரையறை எதுவுமில்லாமல் நன்கொடைகள் அளித்திட முடியும். மேலும், தேர்தல் பத்திர அமைப்பு மூலம் எந்தக் கட்சி அந்தப் பத்திரத்தைப் பெற்றிருக்கிறது என்பதையும் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இதுவரை பல்வேறு விதங்களில் ஆட்சியாளர்களிடம் சலுகைகள் பெறுவதற்காக லஞ்சம்கொடுத்துவந்த நிறுவனங்கள், இனி மிக எளிதானமுறையில் தேர்தல் பத்திரங்களை அளிப்பதன் மூலம் அவற்றைச் செய்திடும்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிப்பது என்பது இந்தத் திட்டத்தின்படி மிகப் பெரிய தேசிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மூலமாக நடந்திடும். தேர்தல் பத்திரங்களை வாங்கும் நிறுவனம், அதனைப் பெற்ற அரசியல் கட்சி ஆகியவற்றின் அடையாளங்கள், பொது மக்கள் பார்வைக்கு வராமல் போனாலும், பாரத ஸ்டேட் வங்கியின் மூலமாக அந்தத் தகவல்களை ஆட்சியாளர்கள் அறிந்து கொள்ள முடியும். எனவே எந்த வொரு நிறுவனமும் அல்லது அதிக அளவு நன்கொடை கொடுப்பவரும், எதிர்க்கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பதன் மூலமாக, ஆளும் கட்சியின் கோபத்திற்கு ஆளாவதற்குத் துணிய மாட்டார்கள்.  

அநாமதேயமான பத்திரங்கள் மூலம் பெறப்படும் நன்கொடைகள் லஞ்சத்தை சட்டபூர்வமாக்கிடவே வசதி செய்து கொடுத்திடும். தற்சமயம் அரசாங்கத்திடமிருந்து ஒப்பந்தம் ஒன்றை வாங்க முயலும் ஒரு நிறுவனம், அதனைப் பெறுவதற்காக மேசைக்கு அடியில் சட்டவிரோதமாக லஞ்சத்தைக் கொடுத்து வருகிறது. இதுபோன்று இனி செய்யத் தேவையில்லை. தேர்தல் பத்திரங்கள் மூலமாக சட்டபூர்வமாகவே இனிவருங்காலங்களில் அது தன் வேலைகளைச் செய்துகொள்ளலாம்.  உதாரணமாக, ஒரு நிறுவனம் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு, 10 சதவீதம் கமிஷன் தர வேண்டியிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்நிறுவனமானது 100 கோடி ரூபாய்க்கான தேர்தல் பத்திரங்களை வாங்கி ஆளும் கட்சிக்குக் கொடுத்து தன் வேலையை முடித்துக் கொள்ளும். இத்தகைய நன்கொடைகள் குறித்து பொதுமக்கள் எதுவும் தெரிந்து கொள்ள முடியாது. அதேபோன்று புலனாய்வு அமைப்புகளும் அந்த நிறுவனத்தை இது தொடர்பாக கேள்வி எதுவும் கேட்டிடவும் முடியாது.

அதுமட்டுமல்ல, இனிவருங்காலங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் கூட தேர்தல் பத்திரங்கள் மூலமாக இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு, மக்களுக்குத் தெரியாமல், நன்கொடைகள் அளிப்பதற்கு, தேர்தல் பத்திரத் திட்டம் வசதி செய்து கொடுத்திருக்கிறது. ஏற்கனவே, 2016ஆம் ஆண்டு நிதிச் சட்டமுன்வடிவின்கீழ், அந்நிய நிறுவனங்கள் பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டத்திற்கு ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தது.   அதன்படி, அந்நிய நிறுவனங்களின் துணை அமைப்புகளாக இந்தியாவில் இயங்கிடும் நிறுவனங்களால், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் அளிக்கப்பட்டால், அவற்றை இந்திய நிறுவனங்கள் அளித்ததாகவே கருதிட வேண்டும் என்று கொண்டுவந்தது. இந்தத்திருத்தத்தின் மூலம், வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் கொடுப்பது சட்டரீதியானதாக மாற்றப்பட்டிருக்கிறது.

இவ்வாறு ஆட்சியாளர்கள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், வருமான வரிச் சட்டம் போன்றவற்றில் கொண்டுவந்த திருத்தங்கள் அனைத்துமே, நிதிச் சட்டமுன்வடிவு மூலமாகவே மேற்கொள்ளப்பட்டன.  இதனால் இந்தத்திருத்தங்கள் தொடர்பாக மாநிலங்களவையின் விவாதத்திற்கோ, பரிசீலனைக்கோ அல்லது வாக்கெடுப்புக்கோ தேவையில்லாமல் செய்துவிட்டார்கள்.

மோடி அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து மிகவும் நாணங்கெட்ட முறையில் இவ்வாறு நன்கொடைகள் வாங்குவதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகள் உறுதிபட எதிர்க்கப்பட வேண்டியவைகளாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் பத்திரத் திட்டத்தை ஏற்காது. அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி கொடுப்பதை கட்சி தொடர்ந்து உறுதிபட எதிர்த்து வந்திருக்கிறது. தேர்தல் சீர்திருத்தங்களின் ஒரு முக்கியமான அம்சம், அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி கொடுப்பதைத் தடைசெய்திட வேண்டும் என்பதாகும். மாறாக, கார்ப்பரேட்டுகள் அரசாங்கத்திற்கு வெளிப்படையாக நன்கொடைகள் கொடுக்க அனுமதிக்கப்பட வேண்டும். அவற்றை அரசாங்கம் தேர்தல் செலவினங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இப்போதுள்ள சட்டத்தின் ஷரத்துக்களின்படி, 20 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு அதிகமாக அரசியல் கட்சிகள் நன்கொடைகள் பெற்றால், அத்தகைய நன்கொடைகளை அளிப்பவர்களின் அடையாளங்கள், முகவரி,  பான் கார்டு (PAN card ) எண் போன்ற விவரங்களுடன்  பதிவு  செய்யப்பட  வேண்டும் என்றே விரும்புகிறது. தேர்தல் பத்திரத் திட்டத்தின் கீழுள்ள ஷரத்துக்களின்படி இதை மீறுவதற்கு அனுமதித்திடக் கூடாது.

(ஜனவரி 3, 2018)

(தமிழில்: ச.வீரமணி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக