ஞாயிறு, 7 ஜனவரி, 2018

சீன சோலார் தகடுகளுக்கு இறக்குமதி வரி!

சீன சோலார் தகடுகளுக்கு இறக்குமதி வரி!மின்னம்பலம் : சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் தகடுகளுக்கான வரி விகிதத்தை 7.5 சதவிகிதமாக நிர்ணயிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இந்தியா சோலார் மின் நிலையத்துக்குத் தேவையான சில பொருட்களைக் குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வரி நிர்ணயிக்கவில்லை. ஆனால் மோட்டார் போன்றவற்றிற்கு தற்போது வரி நிர்ணயிக்கத் திட்டமிட்டுள்ளது என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக மின்ட் ஊடகம் தெரிவித்துள்ளது. சோலார் பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக ஆலோசிக்குமாறும் நிதியமைச்சகம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் துறைக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
2022ஆம் ஆண்டுக்குள் இந்தியா 100 கிகா வாட் அளவிலான சோலார் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. சோலார் நிலையத்துக்குத் தேவையான பொருட்கள் பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை; வெளிநாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாகச் சீனாவிலிருந்து அதிகளவில் சோலார் தகடுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. மிகக் குறைந்த விலையில் சீனாவில் சோலார் தகடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
"இந்தியாவில் பல்வேறு சோலார் திட்டங்கள் நிலுவையில் இருக்கின்றன. அதிக அளவிலான இறக்குமதி வரி விதிக்கப்பட்டு சுமார் 900 கண்டெய்னர்களில் சோலார் தகடுகள் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன" என்று புளூம்பெர்க் நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் தகடுகளுக்கான வரியை 7.5 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக