சனி, 13 ஜனவரி, 2018

பென்னி குயிக்கின் கல்லறை அகற்றப்படக்கூடாது: இங்கிலாந்து தேவாலய அமைப்பிடம் வைகோ வலியுறுத்தல்

tamilthehindu :பென்னி குயிக், இங்கிலாந்து தேவாலாய குழுவினருடன் வைகோ;படம்: சிறப்பு ஏற்பாடு தென் மாவட்ட மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஆங்கில பொறியாளர் ஜான் பென்னி குயிக். கடவுள் படத்தினூடே பென்னி குயிக் படத்தையும் வைத்து கும்பிடும் வழக்கம் இன்றும் தென்மாவட்ட மக்களிடம் உண்டு.
காரணம் பென்னி குயிக் அரும்பாடு பட்டு கட்டிய முல்லை பெரியாறு அணை தென்மாவட்ட விவசாய மக்களின் துயர் தீர்த்து வரும் அணையாகும். அணைக்கட்ட அதிக செலவு பிடித்த நேரத்தில் ஆங்கில் அரசு பின் வாங்கிய நேரத்தில் விடாபிடியாக தன் சொத்துக்களை விற்று, மக்களை திரட்டி அணையை கட்டி முடித்தவர் பென்னி குயிக்.

அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் அவரது கல்லறையை இன்றும் அம்மாவட்டத்து மக்கள் பூஜித்து வருகிறார்கள். இந்நிலையில் பென்னிகுயிக் மறைந்து 107 ஆண்டுகள் ஆன நிலையில் நூறாண்டுக்கு மேல் கல்லறை இருக்க இங்கிலாந்து தேவாலய சட்டத்தில் இடம் இல்லை என்பதால் கல்லறையை அகற்ற அங்குள்ள தேவாலய அமைப்பினர் முடிவெடுத்தனர்.
அது கூடாது மக்கள் அபிமானம் பெற்றவர் பென்னி குயிக் என அங்குள்ள மேயரை சந்தித்து உத்தமபாளைய மாணவர் முறையிட்டதன் பேரில் நான்கு பேர் கொண்ட குழுவை இங்கிலாந்து தேவாலய அமைப்பு தமிழகத்துக்கு அனுப்பி உள்ளது. அதில் இரண்டு பேர் மதுரை விமான நிலையத்துக்கு வந்தனர். அவர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், அப்பகுதி மக்கள் திரளாக திரண்டு வரவேற்றனர்.
இங்கிலாந்து தேவாலய அமைப்பினரை வரவேற்று வைகோ பேசியதாவது:
“முல்லை பெரியாறு அணையை கட்டியவர் ஜான் பென்னி குயிக். அவருக்கு இங்கு கல்லறை உள்ளது. அவர் மறைந்து நூறாண்டுகள் கடந்து விட்டது. நூறாண்டுகள் கடந்தால் கல்லறையை எடுத்துவிட வேண்டும், அல்லது இங்கிலாந்துராணியின் நேரடி கண்ட்ரோலுக்கு போனால் எடுக்கத்தேவை இல்லை.
ஆனால் மக்கள் அபிமானம் பெற்ற பென்னி குயிக்கின் கல்லறை இங்கு இருக்க வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் விருப்பம். இதே கருத்தை வலியுறுத்தி இங்கிலாந்தில் படித்து வரும் உத்தம பாளையத்தை சேர்ந்த மாணவர் சந்தனபீரோலி அங்குள்ள அரசின் முக்கியஸ்தர்களை, மேயரை சந்தித்துள்ளார். பென்னி குயிக்கின் கல்லறையை அகற்ற கூடாது என்று கூறியுள்ளார்.
பென்னிக்குயிக்கின் சேவை அவர் மீது இங்குள்ள மக்களின் நம்பிக்கை அடிப்படையில் அவரது கல்லறை இங்கே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், அவர்களுக்கு விளக்கிய அடிப்படையில் சர்ச் ஆஃப் இங்கிலாந்திலிருந்து நான்கு பேர் வந்துள்ளனர். அவர்கள் குழுவில் மேலும் இரண்டு பேர் கொச்சிக்கு சென்றுள்ளனர். அவர்கள் இங்கு வந்து அவரது கல்லறையை பார்வையிடுகிறார்கள், அவர் கட்டிய அணை மற்றும் அங்குள்ள மக்களை சந்தித்து அவர் ஆற்றிய சேவை பற்றி கேட்டறிய உள்ளனர்.
மக்கள் எப்படி பென்னி குயிக்கை விரும்புகிறார்கள் என்பதை நேரடியாக அறிய உள்ளனர். அவர் இங்குள்ள ஐந்து தென் மாவட்டங்களை காத்தவர் பென்னி குயிக். மிகச்சிறந்த அணையை கட்டியவர், மிகச்சிறந்த கட்டுமானம் அது. உங்களை வரவேற்க இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், மக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் வந்துள்ளனர். காரணம் நீங்கள் இங்கிலாந்து சர்ச் அமைப்பிலிருந்து வந்துள்ளீர்கள்.
உங்களிடம் எங்களுடைய அன்பான வேண்டுகோள் பென்னி குயிக்கின் சமாதி அகற்றப்படக்கூடாது, அதை நீங்கள் இங்கிலாந்து ராணியிடம் வைக்க வேண்டும். ஜான் பென்னிகுயிக் பிறந்த நாள் வருகிறது. இதே நாளில் பொங்கல் பண்டிகையும் வந்துள்ளது. இங்குள்ள தமிழ் மக்கள் சார்பாக உங்களை வரவேற்கிறேன்.
பொங்கல் பண்டிகை உழவோடும், மக்களோடும் மண்ணோடும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் இரண்டர கலந்த தேசிய பண்டிகை, இந்த நேரத்தில் நீங்கள் இங்கு வந்துள்ளதை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.”
இவ்வாறு வைகோ பேசினார்.
அப்போது பேசிய இங்கிலாந்து சர்ச் அமைப்பை சேர்ந்த குழுவினர் கூறியதாவது:
“ஜான் பென்னிக்குயிக்குக்கு இங்கிலாந்தில் சிலை அமைக்க சந்தன பீரோலி என்கிற அங்கு படித்து வரும் உத்தம பாளையத்தை சேர்ந்த மாணவர் முயற்சி எடுத்துள்ளார். அந்த கல்லறையை அகற்றாமல் அது நீண்ட்காலமாக அங்கேயே இருப்பதற்கு நாங்கள் நிச்சயமாக இருக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம், அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.”
இவ்வாறு இங்கிலாந்து குழுவினர் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக