வியாழன், 18 ஜனவரி, 2018

மருத்துவம் படிக்க உக்ரேன் சீனா பிலிப்பைன்ஸ் .... டாக்டராகலாம் ,,,, குஜராதுக்கோ டில்லிகோ போனால் ?

Anpu Mani :நான் இருப்பது விழுப்புரம் மாவட்டத்தின் ஒரு ஊரகப் பகுதி. எங்கள் பகுதியில் உள்ள பல சிற்றூர்களில் இருந்து பல மாணவர்கள் மாணவிகள் , முதல் தலைமுறை பட்டதாரிகள் உள்ளூர் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத நிலையில் உக்ரைன் நாடு அதனைச் சுற்றியுள்ள நாடுகளில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இது மட்டுமின்றி சீனா, பிலிப்பைன்சு நாடுகளில் MBBS படிக்கச் சேர்ந்துள்ளனர் .
முதல் முறையாக கடவுச் சீட்டு பெற்று முதன் முதலாக வெளிநாட்டு க்கு சென்று மருத்துவக் கல்வி பயில்கின்றனர்.
ஒரு மாத்த்திற்கு முன்பு உக்ரைனில் இருந்து வந்த மாணவர் ஒருவரை சந்தித்தேன். வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு கல்வி , உணவு,உடை, தங்குமிடம் பற்றி பேச்சு கடந்து சென்றது. இறுதியாக ஒன்று கேட்டேன். அந்த தம்பியிடம்.
இன ஒதுக்குதல் , இன ஒடுக்குதல் நம் மாணவர்கள் மீது நடைபெறுகிறதா?
நிறத்தின் அடிப்படையில், மதத்தின் அடிப்படையில் வேறுபாடு காட்டப் படுகிறதா என்பதைப் பற்றி எல்லாம் கேட்டேன். அப்படி ஏதும் வேறுபாடு களை நாங்கள் சந்திக்கவில்லை. எங்களுக்கு அன்றாட நடைமுறைகள் எளிதாக மகிழ்வாக போகிறது. நாங்கள் படித்து முடித்துவிட்டு வெற்றிகரமாக நம் ஊருக்குத் திரும்புவோம். என்றார் அம்மாணவர் நம்பிக்கையோடு. அந்த முகம் தெரியாத நாடுகளில் வேறு மதம் , இன மக்கள் வாழும் நாட்டில் நமது மாணவர்கள் வெற்றிகரமாக படித்து வருகின்றனர்.


ஆனால், தமிழகத்தில் இருந்து தில்லிக்கோ குசராத்திற்கோ மருத்துவப் பட்டமேற்படிப்பு படிக்கச் சென்றால் நமது தமிழக மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை. தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்றாலும் மாணவர் உயிருக்கு உத்தரவாதமில்லை.
இன , மொழி, மத, சாதி ரீதியாக, மாநில ரீதியாக நமது மாணவர்கள் ஒதுக்குதலை ஒடுக்குதலை நாள் தோறும் சந்தித்து வருகின்றனர்.
இதுவரை டாக்டர்சரவணன் , டாக்டர் சரத்பிரபு, முத்துக் கிருஷ்ணன் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
டாக்டர் மாரிராசு தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளார்.
இவையெல்லாம் எதனைக் காட்டுகிறது.?
நமக்கு மிகவும் அந்நியமான ஒரு நாட்டில் நமது மாணவர்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர்.
ஆனால் தாய்நாட்டின் தலைநகரில் தமிழக மாணவர்களுக்கு படிக்க , உயிரோடிருக்க பாதுகாப்பு இல்லை.
ஆனால், தமிழ்நாட்டில் அனைத்து மாநில மாணவர்கள் மற்றும் மக்கள் அமைதியாக படிக்கின்றனர், தொழில் செய்கின்றனர். ஆனால் நமக்கு வடபுலத்தில் பாதுகாப்போ நிம்மதியோ இருக்கிறதா?
எனக்கு என்னைச் சுற்றியுள்ள நண்பர்களுக்கு ஒரு சந்தேகம் எழுகிறது.
நாம் இந்நாட்டின் குடிமக்கள் தானே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக