திங்கள், 22 ஜனவரி, 2018

வெற்றிவேலு :தினகரன் கட்சியில் சேர மாட்டேன்! தங்கத்தமிழ்செல்வனை தொடர்ந்து ..

தினகரன் கட்சியில் சேர மாட்டேன்!மின்னம்பலம்:  தினகரன் கட்சி ஆரம்பித்தால் அதில் சேர மாட்டேன் என்று தங்க.தமிழ்ச்செல்வனைத் தொடர்ந்து தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலும் கூறியுள்ளார்.
கடந்த 16ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ஒன்றரை கோடி தொண்டர்களில் 90 சதவிகிதம் பேர் எங்களுடன் இருக்கும் காரணத்தால் நாங்கள் பெயரில்லாமல் செயல்பட முடியாது. எனவே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் அறிவிப்பேன் என்று கூறினார். இதையடுத்து தினகரன் தனிக்கட்சி தொடங்கப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை தினகரன் மறுத்துவிட்டார். இதுகுறித்து பேசிய தங்க. தமிழ்ச்செல்வன், தினகரன் கட்சி ஆரம்பித்தால் அதில் சேரமாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 22) ஜெயலலிதா வீடியோ விவகாரம் தொடர்பான வழக்கில் ஆஜராக தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் தரப்பிலிருந்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, "தற்போதைய சூழலில் தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் அதில் சேரமாட்டோம். வெளியில் இருந்து அவருக்கு ஆதரவாகப் பணி செய்வோம். நாங்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தினகரன் கட்சியில் இணைந்தால் பதவி பறிபோகும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று வெற்றிவேல் கூறினார்.
மேலும் "பாஜகவுடன் இணக்கமாக செல்வதால்தான் எடப்பாடி அரசுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் உள்ளது. பாஜக தனியாக கட்சியை வளர்த்தால் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் ரஜினி, கமல், ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரை நம்பித் தேர்தலில் போட்டியிட்டால், பாஜகவோடு சேர்ந்து அதனை ஆதரிப்பவர்களும் காலியாகிவிடுவார்கள்" என்றும் விமர்சனம் செய்துள்ளார்.
இதற்கிடையே புதுவையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, தினகரன் தனிக்கட்சி தொடங்க மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக