புதன், 10 ஜனவரி, 2018

தமிழிசையின் விலகல் கடிதத்தை அமித் ஷா ஏற்கவில்லை ... பொன்.ராதா குடைச்சல்

மின்னம்பலம் :தமிழக பாஜக தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்ற தகவல் கடந்த இரண்டு நாட்களாகவே வைரலாக பரவி வருகிறது. ஆனால், இதுவரை பிஜேபி தரப்பில் இருந்தோ, தமிழிசை தரப்பில் இருந்தோ எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இல்லை. மறுப்பும் இல்லை. என்ன நடந்தது என பிஜேபி வட்டாரத்தில் விசாரித்தோம்.
‘ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழிசை ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார். நோட்டாவைவிட குறைவான வாக்குகளை ஆர்.கே.நகரில் வாங்கியிருந்தாலும் அதையும் சமாளித்துக் கொண்டு மீடியாவில் பேசி வந்தார். ஆனால், தமிழக பாஜகவில் நடக்கும் உட்கட்சி அரசியலை சமாளிக்க முடியாமல்தான் தமிழிசை ரொம்பவே திணற ஆரம்பித்துவிட்டாராம். தமிழிசைக்கும், மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் இடையில் ஆரம்பத்தில் இருந்தே சில மன வருத்தங்கள் இருந்து வருகிறது. தமிழிசை தரப்பில் இருந்து எந்த தகவல் சொன்னாலும் அதை பொன்னார் ஆட்கள் கேட்பதே இல்லையாம்.
ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்பாக தமிழிசைக்கு தொடர்ந்து செல்பேசி வாயிலாக மிரட்டல்கள் வந்தபடியே இருந்திருக்கிறது. சமூக வலைத்தளங்களில் அருவறுக்கத்தக்க வகையில் ஏராளமான மீம்ஸ்கள் வந்தபடி இருந்தன. இது தொடர்பாக தமிழிசை புகாரும் கொடுத்திருந்தார். ஆனால், தமிழிசைக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் எல்லாமே நெட் கால் என்பதால் அதை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸாரும் திணறினர். தமிழிசையிடம் செல்பேசி எண்ணை மாற்றச் சொல்லி காவல் துறையினர் அறிவுறுத்தினர்.
ஆனால் அவரோ, ‘கண்டுபிடிச்சா பிடிங்க.. இல்லைன்னா விடுங்க.. என்னோட நெம்பரையெல்லாம் மாத்த முடியாது. இது நான் 15 வருஷமா பயன்படுத்துற நெம்பர்...’ என சொல்லிவிட்டாராம். அதன் பிறகு காவல் துறை தொடர்ந்து அவரது எண்ணை கண்காணித்தபடி இருந்திருக்கிறது. அப்படி தமிழிசைக்கு வந்த அழைப்பில் ஒன்று, நாகர்கோயில் பகுதியில் இருந்து வந்திருக்கிறது. அந்த எண்ணுக்கு சொந்தக்காரர் பிஜேபி பிரமுகர் என்பது தெரிந்து, காவல் துறை அதிகாரி இந்த விஷயத்தை தமிழிசையிடம் சொல்லி இருக்கிறார். ‘நடவடிக்கை எதுவும் வேண்டாம்..’ என சொல்லிவிட்ட தமிழிசை, அந்த நபர் பற்றி விசாரித்து இருக்கிறார்.
அந்த நாகர்கோவில் நபர், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நெருக்கமானவர் என்பது தெரிய வந்திருக்கிறது. அவரைத் தொடர்பு கொண்டு பேசிய தமிழிசை, ‘நம்ம கட்சியில இருந்துகிட்டு, இப்படி செய்யுறது நாகரிகமா? போலீஸ்ல இப்போ சொன்னால், அடுத்த நிமிஷம் உள்லே போய்டுவீங்க..’ என எச்சரித்திருக்கிறார். அந்தப் பிரமுகரோ பயந்துவிட்டாராம். தமிழிசையிடம் மன்னிப்பு கேட்டதுடன், அவருதான் உங்களுக்கு குடைச்சல் கொடுத்துட்டே இருக்கச் சொன்னாரு... என்று ஒருவரின் பெயரை சொல்லி இருக்கிறார். டென்ஷனாகி போனை வைத்துவிட்டாராம் தமிழிசை.
அதன் பிறகு வந்த ஆர்.கே.நகர் தேர்தலிலும், தமிழிசை பிரசாரத்துக்குப் போன இடங்களில் எல்லாம் பொன்னார் ஆதாரவாளகள் அவரை கிண்டல் செய்வது போலவே பேசியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் பிஜேபிக்கு எதிராகவும் கூட, சில இடங்களில் பிரசாரம் செய்தார்களாம். இதெல்லாம் தமிழிசையை ரொம்பவே டென்ஷன் ஆக்கி இருக்கிறது.
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு அமித்ஷாவிடம் தமிழிசை பேசினாராம். ‘நான் எப்படின்னு உங்க எல்லோருக்கும் தெரியும். ஆனால், தமிழ்நாட்டுல நம்ம கட்சியில் இருக்கும் சிலருக்கு என்னைப் பிடிக்கலை. அதனால எனக்கு அவ்வளவு தொல்லை கொடுத்துட்டு இருக்காங்க. அதுக்கு கட்சியையும் பலிகடா ஆக்கிட்டு இருக்காங்க. ஆர்.கே.நகரில் நாம் கட்சி படு தோல்வி அடைய காரணமே நம்ம கட்சியில் இருக்கும் சிலர்தான். நான் என்ன சொன்னாலும் யாரையும் நீங்க விசாரிக்க மாட்டீங்க. அப்புறம் எதுக்கு நான் தலைவராக இருக்கணும். நீங்க எல்லோரும் சொன்னதால்தானே நான் தலைவராக இருக்கேன். தமிழகத்துல நான் கட்சியை வளர்க்கணும்னு நினைக்கிறேன். ஆனால், நம்ம கட்சியில் இருக்கும் சிலரே கட்சியை அழிக்கணும்னு நினைக்கிறாங்க. நீங்க யாரை வேணும்னாலும் நம்புங்க.. என்னை விட்டுடுங்க..’ என சொன்னதாக தகவல். அதன் பிறகு டெல்லிக்கு ராஜினாமா கடிதத்தையும் அனுப்பிவிட்டாராம் தமிழிசை.
ஆனால், அமித்ஷாவோ அந்தக் கடிதத்தை ஏற்றுக்கொள்ளவில்லையாம். ‘அதெல்லாம் இருக்கட்டும்.. நான் பார்த்துக்குறேன். நீங்க அமைதியாக இருங்க..’ என தமிழிசையை சமாதானப்படுத்திக் கொண்டு இருக்கிறாரம் அமித்ஷா. ஆனால், தமிழிசை இதுவரை சமாதானம் ஆகவில்லை என்றே சொல்கிறார்கள். “

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக