செவ்வாய், 9 ஜனவரி, 2018

வைகோ எச்சரிக்கை :நியூட்ரினோ திட்டத்தைத் தொடங்கினால்?

நியூட்ரினோ திட்டத்தைத் தொடங்கினால்?மின்னம்பலம் :சட்டவிரோதமாக நியூட்ரினோ திட்டத்தை தொடங்க நினைத்தால் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவோம் என்று வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நியூட்ரினோ திட்டத்தை சிறப்புத் திட்டமாக கருதி சட்டத்துக்குப் புறம்பாக "சுற்றுச்சூழல்" அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தயாராக இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இதற்குக் கண்டனம் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று ( ஜனவரி 9) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள பொட்டிபுரத்தில் அமைய இருந்த நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரிய போராட்டங்களை நடத்தி வந்தனர்.
தமிழகம் போராடிப்பெற்ற முல்லைப்பெரியாறு அணை உள்ளிட்ட 12 நீர்நிலைகளுக்கு அருகே இந்தத் திட்டத்தை அமைக்க முயற்சிக்கின்றார்கள்" என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, நியூட்ரினோ திட்டத்தை " சிறப்புத் திட்டமாக"(one of) பிரிவு "B" திட்டமாக அறிவித்து, எல்லாத் தடைகளையும் நீக்கி, "சுற்றுச்சூழல்" அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தயாராக இருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இவ்வாறு செய்வது சட்டத்திற்குப் புறம்பான செயல் ஆகும். சட்டத்தை மதித்துக் கடைப்பிடிக்க வேண்டிய மத்திய அரசே, சட்டத்தைக் காலில் போட்டு மிதிக்க முயற்சிக்கின்றது" என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தத் தவறான போக்கைக் மத்திய அரசு கைவிட வேண்டும், மத்திய அரசின் அழுத்தத்திற்குப் பணிந்து "திட்ட நிறுவுதல்" அனுமதியைத் தமிழக அரசு வழங்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ள வைகோ, நியூட்ரினோவுக்கு எதிராக மக்கள் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றார்கள், இந்த நிலையில் மத்திய அரசு மக்களின் உணர்வுகளை மதிக்காமல் திட்டத்திற்கு அனுமதிவழங்கி பணிகளைத் தொடங்கினால், மத்திய அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டுவோம் போராட்டக் களத்தில் இறங்குவோம்"என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக