திங்கள், 1 ஜனவரி, 2018

நீலகிரியை மொட்டை அடிக்கும் வனச்சரகர் சீனிவாசன் ... கொடநாட்டு எஸ்டேட் மரங்களும் ...

நக்கீரன :"மலைப்பகுதியையே, வனத்துறையினர் மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள்'’-என ஏகத்துக்கும் குமுறுகிறார்கள், நீலகிரி மலைசார்ந்த இயற்கை ஆர்வலர்கள். நம்மிடம் இதுகுறித்து மனம் திறந்து பேச ஆரம்பித்த அவர்கள்... ""இந்த நீலகிரி மாவட்ட வடக்கு வனக் கோட்டப் பகுதியில், கோத்தகிரி வனச் சரகராய் இருப்பவர் சீனிவாசன். இவர்தான் மரங்களை வெட்டிக் கடத்தும் கும்பலுக்கு "காட்ஃபாதர்.' இவரது தைரியத்தில் கோத்தகிரியைச் சேர்ந்த பாலன், வி.பி.நாராயணன், விஸ்வநாதன், சந்திரசேகரன் ஆகிய நால்வர் கும்பல்தான் மரத்தை எல்லாம் தில்லாக வெட்டிக் கடத்துகிறது''’என எடுத்த எடுப்பிலேயே புகாரை வாசித்தவர்கள், இந்தக் கும்பலின் திருவிளையாடல்களை விவரிக்கத் தொடங்கினர்.

 ""இங்கு தேயிலைக்கு ஊடுபயிராக இருக்கும் சில்வர் ஓக் மரங்களை, எந்த அனுமதியுமின்றி வெட்டித் தள்ளுகின்றார்கள். இதற்காக மாவட்ட நிர்வாகம், வனத்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளிடம் இருந்து அவர்கள் அனுமதி வாங்குவதே இல்லை. ரேஞ்சர் சீனிவாசனை போலவே... வனச்சரகர்களான குன்னூர் பெரியசாமி, பெட்டட்டி கணேசன்..
. இந்தத் "திருப்பணி'க்கு உடந்தையாக இருக்கிறார்கள். பில்லூர், மஞ்சூர், சின்னக்கொறை ஆகிய பகுதிகளில் உள்ள காடுகளில் உள்ள மரங்களும் வெட்டப்பட்டு, இரவோடு இரவாக லாரிகளில் ஏற்றி வெள்ளியங்காடு வழியாக மேட்டுப்பாளையத்திற்கு கொண்டு போய்விடுகிறார்கள்.

நல்லபடியாய் லாரிகளை அனுப்பி வைக்கும் வேலையை ரேஞ்சர்கள் பெரியசாமியும், கணேசனும் செவ்வனே செய்கிறார்கள். அதேபோல கொடநாடு காட்சி முனையில் இருக்கும் சீகை மரங்கள் அகலமாகவும், பெரிதாகவும் வளரக்கூடியவை. எந்தவித டெண்டர் அறிவிப்புகளும் கொடுக்காமல், இரவு நேரங்களில் அந்த மரங்களையும் வெட்டி லாரிகளில் ஏற்றி, அவற்றுக்குப் பாதுகாப்பாக, சீனிவாசன் பாரெஸ்ட் வண்டியையே அனுப்புகிறார்.

கொடநாட்டில் இருந்து கோத்தகிரி வழியாக வரும் லாரிகளில் முதல் லாரி குஞ்சப்பனை செக் போஸ்டில் ஒரு டோக்கனை கொடுத்துவிட்டு மேட்டுப்பாளையத்திற்கு செல்லத் துவங்கியபின் சாரை சாரையாய் லாரிகள் எந்தவித சோதனையுமின்றி கீழே இறங்கிப்போக அனுமதிக்கப்படுகின்றன''’ என்கிறவர்கள்... ""ஜெயலலிதா இருந்தவரை கர்சன் எஸ்டேட்டுக்குள் எந்த வனஅதிகாரியாலும் உள்ளே நுழைய முடியாத சூழல் இருந்தது. ஆனால் இப்போது ரேஞ்சர் சீனிவாசன் கர்சன் எஸ்டேட்டுக்குள் நுழைந்து அதற்கு பின்னால் பல ஏக்கரில் இருக்கும் வனத்துறை நிலத்தின் மரங்களை பொலி போட்டுக் கொண்டிருக்கிறார்.

இதை நாங்களோ, பொது மக்களோ தடுத்தால், கோத்தகிரி பாரெஸ்ட் கெஸ்ட் ஹவுசிற்கும், குஞ்சப்பனை கெஸ்ட் ஹவுசிற்கும் இதையெல்லாம் எரிப்பதற்காகத்தான் கொண்டு போகிறோம் என்று பொய்சொல்கிறார். இதேபோல், கோத்தகிரி லாங்க்வுட் சோலை, 116 ஹெக்டேர் அளவில் பரந்து கிடக்கும் சோலையாகும். இங்கு பல்லுயிர் மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகளும் மரங்களும் இருக்கின்றன. அங்கே சூரிய வெளிச்சம்கூட நுழையமுடியாது. பாதுகாக்கப் பட்ட இந்த லாங்க்வுட் சோலையின் விலையுயர்ந்த மூலிகைச்செடிகளை, தான் சொல்லும் தன்னார்வ அமைப்புகளுக்கு இலவசமாக கொடுப்பதாகச் சொல்லிவிட்டு, அவற்றை விற்றுவிடுகிறார் சீனிவாசன்.

 இம்மலையின் கீழ்ப்பகுதியான மேட்டுப்பாளையத்தில்தான் பெரிய பெரிய மர ஆலைகளும் அறுப்பு மில்களும் இருக்கின்றன. அந்த மில்கள் மரக்கடத்தல் செய்கிற அந்த நால்வர் கும்பலுக்கு சொந்தமானவை. அந்த மில்களுக்கு மரங்களைக் கொண்டு போகும்போது லாரிகள் எவ்வளவு.? என்கிற கணக்கை டோக்கனில் எழுதி செக்போஸ்டில் கொடுத்துவிடுகிறார்கள்.
அந்தக் கணக்கை சரிபார்த்துவிட்டு வாரந்தோறும் சனிக்கிழமை மாலை கோத்தகிரிக்கு செக்போஸ்ட் காவலாளிகள் நான்கைந்து பேர் வந்துவிடுவார்கள். நால்வர் கும்பலில் ஒருவராய் இருக்கும் வி.பி.நாராயணனின் மர அறுவை மில் ஒன்று கோத்தகிரியில் இருக்கிறது. அங்கே சென்று அவர்கள் லாரிக்கு 5,000, 6000 ரூபாய் என லஞ்சத்தொகையாக வாங்குகிறார்கள். அதாவது கோத்தகிரி வழியைப் போல மீதமுள்ள இரண்டு வழிகளில் கீழே கடத்தப்படும் லாரிகள் கணக்கை சேர்த்தால் வாரத்திற்கு 600 லாரிகளுக்குமேல் வரும்.

வாரத்திற்கு 30 லட்ச ரூபாய்க்கு மேல் லஞ்சப் பணத்தை வாங்கி இந்த மும்மூர்த்திகள்’டீம், தங்களுக்கு மேல்உள்ள அதிகாரிகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு, மிச்சத்தை முழுங்கிவிடுகிறார்கள். இதையெல்லாம் மாவட்ட நிர்வாகம் வரை நாங்கள் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை நக்கீரன்தான் அம்பலப்படுத்த வேண்டும்''’என்றார்கள் இயற்கை ஆர்வலர்கள்.

 இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம்பெற, கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசனையும், பெட்டட்டி வனசரகர் கணேசனையும் தொடர்ந்து தொடர்புகொண்ட போதும்... அவர்களின் அலைபேசி "நாட் ரீச்சபிள்' என்றே சொல்லிக்கொண்டிருந்தது. குன்னூர் ரேஞ்சர் பெரியசாமியைத் தொடர்புகொண்டபோது...’""சொல்லப்படும் புகார்களில் எந்த உண்மையும் இல்லை. நாங்கள் எதுக்கு மரக்கடத்தலுக்கு உதவ வேண்டும்?'' என்று குற்றச்சாட்டுகளை மறுத்தார். நீலகிரியின் வேலிகள் மரங்களை மேய்ந்துகொண்டிருக்கின்றன. -அருள்குமார்<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக