சனி, 20 ஜனவரி, 2018

ஆ.ராசா ! BBC: The 2G Saga Unfolds எனது தரப்பு வாதங்களை முன்வைக்கும் உரிமையை ஊடகங்களாலும் எனக்கு மறுக்கப்பட்டது

சமீபத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
அந்த வழக்கு குறித்து 'தி 2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்' (The 2G Saga Unfolds) என்ற ஆங்கிலப் புத்தகத்தை அவர் எழுதியுள்ளார். அதையொட்டி பத்திரிகையாளர்களுடன் அவர் நடத்திய உரையாடலில் அவர் பேசியவற்றைத் தொகுத்து வழங்குகிறோம். சிறையில் எடுத்த முடிவு : "புலனாய்வு செய்த நிறுவனம், உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் மட்டுமல்லாமல் ஊடகங்களில்கூட எனது தரப்பு நியாயங்களை முன்வைக்கும் இயற்கை நீதி எனக்கு மறுக்கப்பட்டது."
"எனக்கு வழங்கப்படவேண்டிய இயற்கை நீதி வழங்கப்படாததால், நான் ஒரு கொடூர அரசியல்வாதி என்பதை சித்தரிக்கப்பட்டதை மறுக்கவே ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று சிறையில் இருக்கும்போது தீர்மானித்தேன்அதற்காக ஆவணங்கள் சேகரித்தேன். சிறையில் இருந்து வெளிவந்த பிறகு கூடுதலாக சில ஆவணங்களையும் சேகரித்து சென்ற ஆண்டே அந்தப் புத்தகத்தை எழுதி முடித்தேன்."
"தீர்ப்புக்கு சில நாட்களுக்கு முன்பு பதிப்பகத்தாரை அழைத்து தீர்ப்பு என்னவாக இருந்தாலும், என் தரப்பு நியாங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறினேன்."

'வினோத் ராய் நாட்டையே ஏமாற்றினார்'

"இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு நல்லாட்சி நடத்திக்கொண்டிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வீழ்த்தவேண்டும் என்று ஒரு சதி நடந்திருக்க வேண்டும் அந்த சதிக்கு முன்னாள் தலைமை கணக்காயர் வினோத் ராய் அவரது அறிக்கை மூலமாக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்."

'உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் தவறு இருக்கலாம்'

"வினோத் ராய் அளித்த அறிக்கையின் அடிப்படையில் 122 அலைக்கற்றை உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அப்படியென்றால், அந்த அறிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த அந்த உத்தரவும் தவறா என்ற கேள்விக்கு, "அதை அப்படிதான் எடுத்துக்கொள்ள வேண்டும். நீதிமன்றத்தை நான் மதிக்கிறேன். உச்ச நீதிமன்றமே இறுதியானது. ஆனால், உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளில் தவறு இருக்கலாம்.
 மீண்டும் ரத்து செய்யப்பட்ட உரிமங்களை பெற நீதிமன்றத்தை நாடுவது குறித்து அந்த நிறுவனங்களே முடிவு செய்ய வேண்டும். நியாயமாக அவர்களுக்கு மீண்டும் உரிமம் வழங்கப்பட வேண்டும்."

சிதம்பரம் மீது வருத்தம்

"அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உண்மையை வெளியில் கொண்டுவரவில்லையா என்ற கேள்விக்கு, நிதி அமைச்சரின் ஆலோசனைகளை கேட்காமல் தாம் மீறி செயல்பட்டதாக கூறப்பட்டதற்கு, நிதி அமைச்சரிடம் சென்று வாக்குமூலம் வாங்குங்கள் என்று நான் சி.பி.ஐ இடம் கோரினேன். ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை. சிதம்பரமும் அது குறித்து வாய் திறக்கவில்லை. அதுதான் எனக்கு வருத்தமாக இருந்தது. அவர்கள் காட்டிய மௌனமே அவர்கள் அரசை காலி செய்தது. "
"ஏர்டெல், ஏர்செல், வோடபோன், ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 'செல்லுலர் ஆபரேட்டர்ஸ் அஸோஸியேஷன் ஆப் இந்தியா' என்ற அமைப்பை உருவாக்கிக்கொண்டு, தொழிலில் அவர்களின் ஏகபோகத்தை நிறுவ பல சித்து விளையாட்டுகளில் ஈடுபட்டனர்."
நான் புதிய உரிமங்கள் கொடுக்கக்கூடாது என்று அந்த நிறுவனங்கள் தொலைத்தொடர்பு தீர்ப்பாயத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் கோரிக்கை மறுக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் சென்றனர். அங்கு அவர்கள் போட்டியை விரும்பாமல் செயல்படுவதாக அபராதம் விதிக்கப்பட்டது. அங்கெல்லாம், தோற்றுப் போனபின்புதான் அவர்கள் பிரதமர் அலுவலகம் சென்று ஒரு கையெழுத்து இடப்படாத கடிதத்தை கொடுத்தனர்." "உச்ச நீதிமன்றத்தில் கூறிய அதே வாதங்களையே அந்த கடிதத்திலும் முன்வைத்தனர். அதை நம்பி அப்போதைய பிரதமர் எனக்கு கடிதமெழுதினார். அதற்கு நான் அளித்த பதில் உண்மையென்று இந்த தீர்ப்பு மூலம் உறுதியாகியுள்ளது."
"ஆனால், ஒரு கையெழுதுகூட இல்லாத கடிதத்தை நம்பி "தகுந்த நடவடிக்கை எடுக்கவும், நடவடிக்கை எடுக்கும் முன் என்னிடம் பேசவும்" என்று பிரதமரை எழுத வைத்த வித்தை எது என்று எனக்குத் தெரியவில்லை."

மன்னன் தவறிழைத்தால் என்ன செய்வது?

வினோத் ராய் அளித்த அறிக்கையால்தான் அவர் கைது செய்யப்பட்டார் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளீர்களா என்ற கேள்விக்கு, "இந்திய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் அவர் தேசத்தை ஏமாற்றியதற்காக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அவர் அரசியல் சட்டப் பதவி வகித்தவர் என்பதால் தடை வரும். அவருக்கு சில விலக்குகள் உள்ளன."
"அரசியல் சட்டம், "மன்னன் தவறிழைக்க மாட்டான் என்கிறது. ஆனால், மன்னன் தவறிழைத்தால் என்ன செய்வது என்று அரசியலமைப்பு கூறவில்லை. எனவே இது குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படவேண்டும், அப்படி அமைக்கப்பட்டால் அது நாட்டுக்கு நல்லது என்று திமுக தலைமையிடம் விளக்கியபின், குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதவுள்ளேன்," என்று ராசா கூறினார்.
"திமுக தலைவர் மற்றும் செயல் தலைவருடன் கலந்தாலோசித்து வழக்கு தொடர்வது குறித்து முடிவு செய்வேன்."
"காங்கிரஸ் - திமுக அரசியல் உறவுகளுக்கும் இந்த புத்தகத்துக்கும் தொடர்பில்லை. பொது நலன் கருதி 1%க்கும் குறைவான தகவல்களை வெளியிடவில்லை. "

"எந்த தொலைக்காட்சிக்கும் தங்கள் விரும்புவதை செய்தி வெளியிட உரிமை உண்டு. நான் கோபித்துக்கொள்வதென்றால் எல்லா ஊடகங்களையும் நான் கோபித்துக்கொள்ள வேண்டும். ஊடகங்களுக்கும் வேறு வழியில்லை. அரசியல் சாசன பதவியில் இருக்கும் ஒருவர் (வினோத் ராய்) பொய் சொல்வாரென்று யாரும் நினைக்கவில்லை."
"அவர் ஒரு பொய்யர், வஞ்சகர், தன் சுயநலம் அல்லது வேறு காரணங்களுக்காக ஆவணங்களை திருத்தி வாசிக்கக்கூடிய அற்பத்தனம் உடையவர் என்பதை இந்த புத்தகத்தில் நிரூபித்துள்ளேன்."
அரசுக்கு பணம் தேவைப்படுகிறது. ஆனால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை தாங்களே நிர்ணயம் செய்துகொண்டு அபரிமிதமான லாபம் ஈட்டுகின்றனர். அதனால், புதிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான நுழைவுக்கட்டணத்தை அதிகரிக்காமல், ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்கான அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணத்தை அதிகரிக்கலாம் என்று நான், நிதியமைச்சர், பிரதமர் ஆகியோர் முடிவு செய்தோம்."

தள்ளி வைக்கப்பட்ட கூட்டம்

"அதற்காக தொலைத்தொடர்பு ஆணையத்தைக் கூட்ட முடிவு செய்தோம். ஆனால், புதிய அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் இருந்த அலுவல்கள் காரணமாக, அந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்துக்கு முன்பே அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெற வேண்டுமென்றே கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதாக சி.ஏ.ஜி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவை இரண்டுக்கும் தொடர்பில்லை. ஒதுக்கீடு செய்வதற்கான ஏலம் நடைபெறுவது புதிய நிறுவனங்களுக்காக, பயன்பாட்டுக் கட்டணம் உயர்த்தப்படுவது ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்காக என்று தொலைத்தொடர்புத் துறை செயலர் இரண்டு முறை எழுத்துபூர்வமாக விளக்கம் அளித்துள்ளார்."

இந்த விளக்கம் அளித்தபின்பும், நுழைவுக்கட்டணம் இருந்தால் இந்த உரிமங்களை வழங்க தொலைத்தொடர்பு ஆணையம் ஒப்புக்கொள்ளாது என்பதால் வேண்டுமென்றே திட்டமிட்டு திருட்டு தனமாக கூட்டம் தள்ளி வைக்கப்பட்டதாக கூறுவது பெரிய அயோக்கியத்தனம், பொய். கீழமை நீதிமன்றத்தில் அந்த ஆவணங்கள் அளிக்கப்பட்டபோது நீதிபதியும், வழக்கறிஞர்களும் சிரித்தனர்."

முன்கூட்டியே நிதி திரட்டி வரைவோலை

"ஒதுக்கீடு செய்வதற்கான அறிவிப்பு வருவதற்கு முன்பே சில நிறுவனங்கள் வரைவோலை எடுத்தது குறித்த அருண் ஜேட்லி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராசா, செப்டம்பர் 25 (2008க்கு) முன் விண்ணப்பித்த நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் என்று முடிவு செய்தது செய்திகளில் வெளியானது. தங்கள் விண்ணப்பங்கள் சரியாக உள்ளதா என்பதை அதிகாரிகள் எழுத்துபூர்வமாகவே தெரிவித்தனர். அதனால், அந்த கால வரையறைக்குள் விண்ணப்பித்த நிறுவனங்கள் முன்கூட்டியே நிதி திரட்டி வரைவோலை எடுத்துள்ளனர்," என்று ராசா கூறியுள்ளார்.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் புதிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்திருந்தது. அதைப் புரிந்துகொள்ளாமல் பேசுகின்றனர், என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக