சனி, 13 ஜனவரி, 2018

5,௦௦௦ கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பு ! சசிகலா மன்னார்குடி மாபியாவின் கதை .

தினமலர் :சசிகலாவின் மன்னார்குடி சொந்தங்கள், 5,000 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. சசி உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களது போலி நிறுவனங்கள் என, 200க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, அவர்கள் வாங்கிக் குவித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும், கணக்கில் வராத சொத்து, பணம், நகை மற்றும் முதலீடுகள் என, தோண்ட தோண்ட பூதம் கிளம்புவதால், வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னாள் முதல்வர், ஜெயலலிதா மறைவுக்குப் பின், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி ஆகியோர், வரித்துறை சோதனையில் சிக்கியதை பார்த்து பீதியடைந்த சசிகலா குடும்பத்தினர், 25 ஆண்டுகளாக, தாங்கள் குவித்த பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை, நம்பிக்கையான இடங்களில் பதுக்கினர்.


அவர்களை ரகசியமாக, பல மாதங்களாக கண்காணித்து வந்த, வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு, சசிகலாவின் கும்பலில் உள்ள, 'ஸ்லீப்பர் செல்' உதவியுடன், நண்பர்கள், உறவினர்கள், புரோக்கர்கள், வேலையாட்கள் பெயரிலான முதலீடுகள் உள்ளிட்ட, பல விபரங்களை திரட்டினர்.

'மிடாஸ்' ஆலை:

அதன் அடிப்படையில், 2017 நவ., 9 முதல், 13 வரை, தமிழகம் முழுவதும், ஒரே நேரத்தில்,
215 இடங்களில் சோதனை நடத்தினர். அதில், சென்னையில் அதிகபட்சமாக, 115 இடங்களில் சோதனை நடந்தது.

'மிடாஸ்' மதுபான ஆலை, இளவரசியின் வீடு, அவரது மகனும், ஜெயா, 'டிவி' தலைமை அதிகாரியுமான விவேக், அவரின் சகோதரிகள், கிருஷ்ணபிரியா, ஷகிலா, ஜெ.,வின் உதவியாளர் பூங்குன்றன், சசி சகோதரர் திவாகரன் உள்ளிட்ட, பலரது வீடு மற்றும் அலுவலகங்கள், சோதனை வளையத்தில் சிக்கின.

இதில், முதல் கட்டமாக, 1,450 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டது. பின், ஜெ., வசித்த, சென்னை, போயஸ் கார்டன் இல்லத்திலும் சோதனை நடத்தி, மின்னணு ஆவணங்கள், சொத்துப் பத்திரங்களை பறிமுதல் செய்தனர். மேலும், 20க்கும் அதிக மான போலி நிறுவனங்களை நடத்தி, அவற்றின் மூலம் நடைபெற்ற, பல கோடி ரூபாய், பரிவர்த்தனைகள் குறித்த விபரங்களும் சிக்கின. இதை அறிந்து, நாடே அதிர்ந்தது.

இந்நிலையில், சசிகலாவின் மன்னார்குடி சொந்தங்கள், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாங்கிக் குவித்து, அதன் வாயிலாக, 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்துள்ளது.

முடக்கம்:

இது தொடர்பாக, தமிழக வருமான வரி புலனாய்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள் உட்பட, அவரது கும்பலுடன் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிக்கிய ஆவணங்களை, இரு மாதங்களுக்கும் மேலாக, ஆய்வு செய்து வருகிறோம். அதன் அடிப்படையில், விவேக், ஷகிலா, பூங்குன்றன், கிருஷ்ணபிரியா
Advertisement
உள்ளிட்ட, பலரிடம் விசாரணை நடந்து வருகிறது. சசிகலாவுக்கு, நெருக்கமானவர்களிடமும் விசாரித்து வருகிறோம்.

அவர்களுக்கு நெருங்கிய தொடர்புடைய, 'ரியல் எஸ்டேட்' நிறுவனங்களிலும், 2017 நவ., 28ல் சோதனை நடத்தினோம். அதிலும், பல விபரங்கள் கிடைத்தன. அவற்றின் மூலம், தமிழகம் முழுவதும், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை, வளைத்துப் போட்டிருப்பது தெரிய வந்தது; அவற்றை பறிமுதல் செய்துள்ளோம்; 100க்கும் மேலான வங்கி கணக்குகளையும் முடக்கி உள்ளோம்.

ஜெ., வீட்டில் சிக்கிய ஆவணங்களில், பல முக்கிய தகவல்கள் கிடைத்தன. சசிகலா, இளவரசி, உறவினர் கலியபெருமாள் ஆகியோர் பெயரில், நிறைய சொத்துகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர, மிடாஸ் மதுபான ஆலை வரி ஏய்ப்பு, போலி நிறுவன பரிவர்த்தனைகள் உள்ளிட்டவற்றை, ஆய்வு செய்தோம்.

உறுதி:

அதில், இதுவரை, 4,600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பு செய்துள்ளதை கண்டறிந்து உள்ளோம்; கணக்கில் வராத, ஏராள சொத்துகள் மற்றும் இதர முதலீடுளை கண்டறிந்துள்ளோம். இந்த சோதனையில் தோண்டத் தோண்ட, கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு மற்றும் சொத்துக் குவிப்பு விபரங்கள் கிடைத்து வருகின்றன. இது, அதிர்ச்சி தருவதாக உள்ளது.

மேலும், உடல்நிலை காரணமாக, விசாரணைக்கு வராத, திவாகரன் போன்றோர், பல தகவல்களை தரக்கூடும். ஆய்வு மற்றும் விசாரணை, இன்னும் முடியாததால், 5,௦௦௦ கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பது உறுதி. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக