செவ்வாய், 2 ஜனவரி, 2018

அமெரிக்கா.. கிரீன் காட் கோரும் இந்தியர்களை திருப்பி அனுப்ப ட்ரம்ப் முடிவு? 50,000 முதல் 75,000 இந்தியர்கள் பாதிப்பு?

மின்னம்பலம் :கிரீன் கார்டு பெற விண்ணப்பித்து, ஹெச் 1பி விசா வைத்திருக்கும் இந்தியர்களைச் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்ப உள்ளதாக அமெரிக்க அரசு அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்துவருகிறார். இந்தியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தற்போது ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். இதன்படி கிரீன் கார்டு பெற விண்ணப்பித்திருப்பவர்கள், ஹெச் 1பி விசா வைத்திருக்க முடியாது. நீட்டிப்பும் வழங்கப்பட மாட்டாது.
இந்தத் திட்டமானது உள்துறை பாதுகாப்பு அமைச்சகத்திடம் மெமோவாக சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தத் திட்டம் உடனடியாக அமலுக்கு வந்தால், அமெரிக்காவில் ஹெச் 1பி விசாவில் பணியாற்றிக்கொண்டிருக்கும் 50,000 முதல் 75,000 இந்தியர்கள் சொந்த நாடு திரும்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
ஹெச் 1பி விசாவை முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, "அமெரிக்க வேலைப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி" என்ற மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த மசோதா, குறைந்தபட்ச வருமானம், திறன் ஆகியவற்றில் கட்டுப்பாடுகள் கொண்டுவந்தது. அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் 85,000 விசா வழங்கிவருகிறது. இவற்றில் 60,000 விசா ஊழியர்களுக்கும், 20,000 விசாக்கள், அமெரிக்க கல்லூரி மற்றும் பள்ளிகளில் கல்வி பயில்பவர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. இதில் 70 சதவிகித விசா இந்தியாவுக்கு கிடைக்கிறது. பெரும்பாலும் இந்திய ஐடி நிறுவனங்கள் இந்த விசாக்களைத் தங்களது ஊழியர்களுக்காக விண்ணப்பித்து வாங்கிக்கொள்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக