வியாழன், 11 ஜனவரி, 2018

இன்னும் 3 மாதத்தில் சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்துவிட வாய்ப்பு?

மின்னம்பலம் :“பொங்கல் வரப் போகிறது.. நாளை பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று சித்தியை (சசிகலா) பார்க்கப் போவதாக சொல்லியிருக்கிறார் டிடிவி தினகரன். நாளை சட்டமன்றக் கூட்டம் இருந்தும் திடீரென தினகரன் பரப்பன அக்ரஹாரா செல்ல வேண்டிய அவசரம் என்ன, அவசியம் என்ன என்ற கேள்வியைக் கேட்காதவர்கள் இல்லை. இதற்கு தினகரன் சொன்ன பதில், ‘பொங்கலுக்கு முன்பு சித்தியைப் பார்த்து வாழ்த்துச் சொல்லணும். நாளைக்கு விட்டுட்டா ஐந்து நாட்கள் லீவு வந்துடும். அதனால் நாளைக்கே பார்த்தாகணும்’ என்று சொல்லி இருக்கிறார். இதுதான் காரணமா என விசாரித்தோம்.
‘சில தினங்களுக்கு முன்பாக இளவரசியின் மகன் விவேக் சிறைக்குச் சென்றதையும் சசிகலாவை பார்த்துப் பேசியதையும் நாம் டிஜிட்டல் திண்ணையில் எழுதி இருந்தோம். கடந்த முறை தினகரன் சிறைக்கு சென்ற சமயத்தில் சசிகலா அவரிடம் பேசவில்லை. தினகரனோ அவர் மௌன விரதத்தில் இருப்பதாகச் சொன்னார். ஆனால், தினகரன் மீது இருந்த கோபத்தில்தான் அவர் பேசாமல் திருப்பி அனுப்பினார்.
இந்த சூழ்நிலையில்தான் சில தினங்களுக்கு முன்பு சசிகலாவை சந்தித்த விவேக், பல விஷயங்களை சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் நேற்று இரவு, சிறையில் இருந்து சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர் ஒருவர் மூலமாக தினகரனிடம் பேசி இருக்கிறார்கள். ‘அவரை நான் உடனே பார்க்கணும் வரச் சொல்லுங்க...’ என சொல்லி அனுப்பி இருக்கிறார் சசிகலா.
‘நான் போன தடவை போன போது அவங்கதான் பேசவே இல்லையே... இப்போ அவங்கதான் வரச் சொன்னாங்களா?’ என கேட்டு இருக்கிறார் தினகரன். ‘ஆமாங்க.. சின்னம்மாதான் வரச் சொன்னாங்க...’ என்று சொல்லி இருக்கிறார்கள்.
சசிகலாவைப் பொறுத்தவரை விவேக்கிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கலாம் என திட்டமிட்டிருக்கிறாராம். ஏற்கெனவே ஜெயா டிவி நிர்வாகத்தை அவரிடம் ஒப்படைத்த பிறகு, சேனலுக்கான வியூவர்ஸ் அதிகமாகி இருக்கிறார்கள் என சசிகலாவிடம் சொல்லி இருக்கிறார்கள். விவேக்கின் விருப்பமும்கூட அரசியல் என்பதால், விவேக் சம்பந்தமான சில விஷயங்களை தினகரனுடன் பேச சசிகலா திட்டமிட்டு இருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல், ஜெயலலலிதா மருத்துவமனை சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் எல்லாமே தினகரனிடம்தான் இருக்கிறது. இனி எந்தக் காரணம் கொண்டும் அதில் எந்த ஒரு வீடியோவும் வெளியாகிவிடக் கூடாது என நினைக்கிறாராம் சசிகலா. அந்த வீடியோக்களை எல்லாம் உடனடியாக விவேக்கிடம் ஒப்படைக்கச் சொல்லவும் போகிறாராம். இப்படி பல திட்டங்களுடன் தான் தினகரனை பெங்களூரு அழைத்திருக்கிறாராம் சசிகலா.
தினகரன் மீது சசிகலா கோபமாக இருந்தாலும், இருவருக்கும் இடையில் பாலமாக இருப்பது பெங்களூரு புகழேந்திதான். அண்மையில் விபத்தில் சிக்கிய புகழேந்தியை அவரது பெங்களூரு வீட்டுக்குப் போய் நலம் விசாரித்துவிட்டு வந்தார் தினகரன். அப்போது, சசிகலா கோபத்தில் இருப்பதை புகழேந்தியிடம் சொல்லி வருத்தப்பட்டாராம் தினகரன். ‘சின்னம்மாகிட்ட நான் பேசுறேன். நீங்க போங்க..’ என சொல்லி அனுப்பி இருக்கிறார் புகழேந்தி. சொன்னபடியே அவரும் சசிகலாவை சிறையில் சந்தித்துப் பேசி இருக்கிறார். அப்போது, தினகரன் மீதுள்ள கோபத்தையெல்லாம் புகழேந்தியிடம் கொட்டியிருக்கிறார் சசிகலா. அவரை சமாதானப்படுத்திய புகழேந்திதான், நாளைய சந்திப்புக்கும் ஏற்பாடு செய்திருக்கிறாராம்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
“புகழேந்தி சொல்வதை எல்லாம் எப்படி சசிகலா கேட்க ஆரம்பித்திருக்கிறார்?” என்ற கேள்வியை ஃபேஸ்புக் கேட்டது.
பதிலை அடுத்த மெசேஜ் ஆகப் போட்டது வாட்ஸ் அப்.
“சசிகலாவின் ஆஸ்தான ஜோதிடர் ஒருவர் புகழேந்தியின் நண்பர். இன்னும் 3 மாதத்தில் சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்துவிட வாய்ப்பு இருக்கிறது என்றும், மீன ராசிக்காரரான சசிக்கு இன்னும் மூன்றே மாதத்தில் திசை மாறப்போகிறது என்றும் சொல்லி இருக்கிறார். இதையெல்லாம் சசிகலாவிடம் சொன்ன புகழேந்தி, ‘எப்படியும் நீங்க வெளியே வந்தால், கட்சி உங்க கைக்கு வந்துடும். போனவங்க எல்லாம் திரும்பி வந்துடுவாங்க. அதுக்குப் பிறகு யாரை வேண்டுமானாலும் நீங்க நீக்குங்க. இல்லை புதுசா போடுங்க. தினகரனை உங்களோட பிரதிநிதியாகத்தான் கட்சிக்காரங்க நினைக்கிறாங்க. இப்போ நீங்க அவரு மேல எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது உங்களுக்கும் கெட்ட பெயரைத்தான் உண்டாக்கும். அதனால அவரை நான் வரச் சொல்றேன். சத்தம் போட்டு அனுப்புங்க... மத்தபடி நீங்க பேசாம இருப்பதும் நல்லது இல்ல...’ என்று சொன்னாராம். அதன் பிறகே, தினகரனை பார்க்கச் சம்மதம் தெரிவித்திருக்கிறார் சசிகலா. நாளைய சந்திப்பில் எதுவும் நடக்கலாம்!”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக