திங்கள், 29 ஜனவரி, 2018

கோவையில் ஜல்லிக்கட்டு... 39 ஆண்டுகளுக்குப் பிறகு .. சீறிப்பாய்ந்த காளைகள்

ஜல்லிக்கட்டுதினமலர்:   இரா. குருபிரசாத்
 க.விக்னேஷ்வரன்
Coimbatore: கோவையில் 39 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்துள்ளது.
ஜல்லிக்கட்டு என்றால் தென் மாவட்டங்களுக்குத்தான் என்பதை, கடந்த ஆண்டு நடந்த போராட்டங்கள் உடைத்தன. மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. அதன்படி, கோவையில், தமிழக அரசு மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து, செட்டிபாளையத்தில் இன்று (28.1.2018) ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தினர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள், 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கோவை ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொண்டனர். காலை 9.30 மணியளவில் தொடங்கியப் போட்டி, மாலை 5.50 மணியளவில் முடிந்தது. 400 காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து படையெடுத்து வந்ததால், எதிர்பார்த்ததைவிட, அதிகளவு காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டுநீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜல்லிக்கட்டு நடப்பதால், மக்கள் கூட்டமும் அதிகளவு காணப்பட்டது. ஒவ்வொரு காளையும் வாடிவாசலைக் கடந்து வரும்போதும், வீரர்கள் அதைப் பிடிக்கும் போதும், மக்களின் ஆராவரத்தால் அந்த பகுதியே அதிர்ந்தது. குறிப்பாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோரின் காளைகளும் களமிறக்கப்பட்டன. ஆனால், அந்தக் காளைகள் வீரர்களுக்கு விளையாட்டு காட்டி, பிடிபடாமல் கெத்தாக சென்றுவிட்டன. இவர்களது காளைகள் மட்டுமல்ல, மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேட்டை அதிரவைத்த ஏராளமான காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு கிலியை ஏற்படுத்தின.

ஒவ்வொரு காளைக்கும் அமைச்சர் வேலுமணி சார்பில் 2 கிராம் தங்கக் காசு வழங்கப்பட்டன. மேலும், 2,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டன. மாடுபிடி வீரர்களைப் பொறுத்தவரை, மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் முதல் பரிசு பெற்றார். அவருக்கு மாருதி ஆல்டோ கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு பெற்ற கோபி மட்டப்பாறைக்கு, டி.வி.எஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கும், மூன்றாம் இடம் பிடித்த காட்டூர் கார்த்திக்கு டி.வி.எஸ் மொப்பட்டும் பரிசாக வழங்கப்பட்டன.
அதேபோல, சிறந்த காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி, ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரின் மாடு முதல் பரிசைத் தட்டிச் சென்றது. முதல் பரிசாக, அவர்களுக்கும் மாருதி கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு, திருச்சியைச் சேர்ந்த குணா என்பவரது காளைக்கும், மூன்றாம் பரிசு கொட்டப்பட்டைச் சேர்ந்த முத்துராமன் என்பவரது காளைக்கும் வழங்கப்பட்டது.
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக