புதன், 10 ஜனவரி, 2018

2.44 மடங்கு ஊதிய உயர்வை ஏற்றுக்கொள்வதாக தொமுச அறிவிப்பு

tamilthehindu : 2.44 மடங்கு ஊதிய உயர்வை நிபந்தனையுடன் ஏற்று போராட்டத்தை விலக்கி கொள்ளத் தயார் என முக்கிய சங்கமான தொமுச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதால் போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை சிஐடியூ தரப்பும் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்ள வாய்ப்புள்ளதால் கடந்த 7 நாட்களாக நடைபெற்ற வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் என தெரிகிறது.
ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி அமர்விலிருந்து நீதிபதி மணிக்குமார் அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த போராட்டத்திற்கு முழுக்க முழுக்க அரசு மட்டுமே காரணம் எனவும், பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பெரும்பான்மை சங்க ஊழியர்களின் முடிவை கேட்க அரசு தயாராக இல்லை. ஆனால் தவறான தகவலை அரசு தெரிவித்து வருகிறது. ஒப்பந்தத்துக்கு 34 சங்கங்கள் ஒப்புக்கொண்டது, 22 சங்கங்கள் தான் ஒத்துழைக்கவில்லை என்று தெரிவித்தனர்.
ஆனால் 34 சங்கங்கள் கையெழுத்திட்டும் ஏன் 90 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை, இதிலிருந்தே பெரும்பான்மை ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்கள்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது அல்லவா என்று தெரிவித்தனர். போராட்டத்தை அரசு திணித்துள்ளது என்றனர். இதில் பெரும்பாலான மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆகவே இதை முடிவுக்கு கொண்டுவர நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ''பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து சங்கங்கள் ஏன் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரக்கூடாது. கோரிக்கை எதுவாக இருந்தாலும் இது பொங்கல் நேரமாக இருப்பதால் பண்டிகை நேரம் என்பதால் பேருந்துகளை இயக்குங்கள். ஊதிய உயர்வு உள்ளிட்டவைகளை உத்தரவின் போது பேசிக்கொள்ளலாம்'' என்று தெரிவித்தனர்.
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், ''அரசு தற்போது உடனடியாக ரூ.750 கோடி இன்று அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை ஓய்வூதியதாரர்களுக்கு கிட்டத்தட்ட நெருக்கி வழங்கி விட்டோம் இன்னும் உள்ள தொகையும், மேலும் எஸ்பிஐ வங்கி உள்ளிட்ட கடன் பெறும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
கடன் கேட்டு கிடைக்கும் வாய்ப்புள்ளதால் ஓய்வூதியதாரர்களுக்கு கிட்டத்தட்ட அனைத்து தொகையும் வழங்கப்படும் முயற்சிகள் நடந்து வருகிறது, இதே போல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டிய தொகையையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஊதிய உயர்வில் 1.13 மடங்குதான் வேறுபாடா? இதற்காகத்தான் இந்தப் போராட்டம் நடைபெறுகிறதா?  என்று கேள்வி எழுப்பினர். ஊதிய உயர்வு குறித்து பேசிக்கொள்ளலாம் நீங்கள் பேருந்துகளை இயக்குங்கள் என்று தெரிவித்தனர்.
ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முடிவு பின்னர் எடுத்துக்கொள்ளலாம் எனவும், பொது மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொங்கல் பண்டிகை நேரங்களில் பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பேருந்துகளை இயக்குங்கள் என்று உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்தது.
அரசு அறிவித்துள்ள 2.44 மடங்கு ஊதிய உயர்வை வழங்க அரசு முன் வருகிறது. உங்கள் கோரிக்கையான 2.57 மடங்கு குறித்து பரிசீலிக்கிறோம். தற்போது உடனடியாக 2.44 மடங்கு கோரிக்கைகளை ஏற்று போரட்டத்தை கைவிடுங்கள் பின்னர் பேசிக்கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
2.44 மடங்கு ஊதிய உயர்வு உடனடியாக அளித்தால் நீங்கள் தற்போது இயக்கத் தயாராக இருக்கிறீர்களா என்று போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் ஆலோசித்து தகவல் சொல்ல வேண்டும் என உத்தரவிட்டு இன்றே விசாரணை நடத்துவதாக நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையடுத்து ஊழியர் சங்கங்கள் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் அரசு அறிவித்துள்ள 2.44 மடங்கு ஊதிய உயர்வை ஏற்றுக்கொள்வதாக தொமுச சார்பில் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு நிபந்தனை உள்ளது. ஏற்கெனவே 2.44 மடங்கு என்று போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், அல்லது ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து அரசு தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்தன.
இதையடுத்து சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்கின்றனர். இதனிடையே வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் வருவதால் மனசாட்சிப்படி தொழிலாளர்கள் முடிவெடுக்க வேண்டும் நாளை நல்ல முடிவுடன் தொழிற்சங்கத்தினர் நீதிமன்றம் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். நாளை சிஐடியூ தரப்பும் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்ள வாய்ப்புள்ளதால் கடந்த 7 நாட்களாக நடைபெற்ற வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக