வெள்ளி, 5 ஜனவரி, 2018

2.0 பிளாக் டிக்கெட் ... ரஜினி ரசிகர்கள் 1000 2000 3000 ரூபாய் கொடுத்து தானே படம் பார்க்கிறார்கள்

ரஜினி + அரசியல் + நேர்மை + கொள்கை = 2.0 பிளாக் டிக்கெட் கார்த்திக் 
thetimestamil : ரஜினி தனிக்கட்சி தொடங்கப்போகிறார், ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது அவர் விருப்பம். சீமான் சொல்வதைப்போல தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டுமென்றால், எடப்பாடி கூட தமிழன் தான், வைகுண்டராஜன் கூட தமிழன் தான், சின்னம்மா கூட தமிழச்சி தான் அந்த இனவாதத்திற்குள் இருந்து ரஜினியை எதிர்க்க முடியாது.காவிரி விடயத்தில் கர்நாடத்திடம் மன்னிப்பு கேட்டார் ரஜினி, அது அங்கு பிறந்ததால் அல்ல அவர் படம் அங்கும் ஓட வேண்டும் என்பதால் மட்டுமே. இங்கு இனவாதத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் பண்ண முடியாது. அதன் அரசியல் செல்வாக்கு ஓரளவு தான்.
ரஜினி பேசிய இரண்டு விடயங்கள் இங்கு முக்கியமானது
1) கொள்கை (கொளுக ) என்னனு கேட்டாங்க தல சுத்திடுச்சு
2) போராட்டம் பண்ணறதுக்கு நிறைய பேர் இருக்காங்க
முதலில் இரண்டாம் பாயிண்டில் இருந்து செல்வோம். அதாவது ரஜினியை இழிவுபடுத்துவதாக அவர் ரசிகர்கள் கொதிக்கிறார்கள் , இது போராட்டக்காரர்களை இழிவுபடுத்துவதாக இல்லையா. நீங்கள் மரத்தை சுற்றி ஐஸ்வர்யா ராயுடன் டூயட் பாடிக்கொண்டிருந்த பொழுது. தெருவில் இறங்கி போராட்டம் நடத்தியவர்கள் பார்த்து ஏளன பார்வை. நீங்கள் பத்து பேரை அடித்து திரையில் பறக்கவிட்டுக்கொண்டு இருந்த பொழுது, போராடி பத்து போலீஸ் நடுவில் தடியால் அடி வாங்குகிறானே அவனைப்பற்றி உங்களுக்கு தெரியுமா ஆன்மிக அரசியலே? எத்தனை விதமான அரசியல் போராட்டங்கள் களத்திலே உள்ளது என்பது தெரியுமா?

1) சாதியை ஒழிக்கும் சமூக நீதி போராட்டம். இந்த காலத்துல யாரு சார் சாதி பாக்குறாங்கனு சொல்பவர்கள் மலம் அள்ளுவது எந்த சாதி, ஊரில் ரெட்டை குவளை முறை பற்றி தெரியாத மேட்டுக்குடி வகையறா….சாதியை எதிர்த்து கபாலி படத்தில் ஒரு வசனம் வைத்ததற்கு உங்கள் டௌசேrai உங்கள் ரசிகர்கள் கழட்டினார்கள். எத்தனை எதிர்ப்பு வந்தது. சாதி ஒழிப்பிலே களத்தில் யார் யார் நிற்பார்கள் என்பதாவது தெரியுமா? பெரியார் அமைப்புகள், தலித் அமைப்புகள், கொஞ்சம் இடதுசாரிகள். சாதி ரீதியாக ஒன்றிணைக்காமல் எதுவும் செய்ய முடியாது, அதாவது தெரியுமா? சமத்துவத்தை எப்படி கொண்டுவருவீர்கள். இதைத்தேட வேண்டுமென்றாலே பெரியார், அம்பேத்கர், பூலே, அயோத்திதாசர், ரெட்டமலை ஸ்ரீநிவாசன் பற்றி தெரியவேண்டும். இவர்களை எதற்கு படிக்கவேண்டும், நீங்கள் எல்லாவற்றையும் களத்தில் தான் தெரிந்துகொள்வேன் என்றால் நேரம் இல்லை அதனால்.
சரி இந்த சாதி ஒழிப்பு பற்றி எதற்கு பேச வேண்டும். அதன் தொடர்ச்சி தான் ‘நீட்’ போன்ற தேர்வுகளின் பிரச்சனைகள் . இந்த சாதி பற்றி கொள்கை ஒன்று இல்லாமல் எப்படி ‘நீட்’ பற்றி முடிவுக்கு வருவீர்கள். நீங்கள் நல்லவராக கூட இருந்துவிட்டு போங்கள் ஆனால் கொள்கை இல்லாமல் முடிவுகள் எடுக்கவே முடியாது.சாதி மதம் பற்றிய பார்வை கொஞ்சம் கூட இல்லாமல் நல்லவன் என்று சொல்வது எவ்வளவு அபத்தம். இங்கு ‘நீட் ‘ என்ற பிரச்சனை அதற்கு முடிவு எடுக்கவேண்டுமென்றால், ஒரு தலித் வாழ்வியலை பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும்.

இடஒதுக்கீடு பற்றி உங்கள் கொள்கை என்ன. gentle man படத்தில் வருவதை போல பேசினோமானால் சாதாரண மக்கள் உங்களிடம் விலகி விடுவார்கள் அது உங்களுக்கு தெரியுமா? உங்கள் சுயநலம் என்றாலும் கொள்கை தேவை.
கூடங்குளம் போராட்டத்தை மதத்தை கொண்டு தான் மக்களை பிரித்தார்கள். மதத்தை பற்றி உங்கள் பார்வை என்ன. குறைந்தபட்சம் கிடா விருந்தை உங்கள் “ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில்” செய்ய முடியுமா? வெறும் சைவம் தானே போட்டீர்கள். அசைவம் என்றால் கேவலம் என்ற நினைப்பு உள்ளிருப்பது தானே காரணம். இங்கு உழைக்கிற வர்க்கம் எல்லாமே அசைவ பிரியர்கள், அதுவும் கடுமையான உடல் உழைப்பு செய்பவர்கள் மாட்டு இறைச்சி தான். இது அவர்களை கேவலப்படுத்துவதுடன் அவர்களை உங்களிடம் இருந்து தள்ளி வைக்கும். உடல் உழைப்பு அதிகம் செய்பவன் மாட்டு இறைச்சி தான் சாப்பிடுவான்.
2) corperate சுரண்டங்கள், நம் கனிம வளங்களை எல்லாம் சில பன்னாட்டு நிறுவனங்கள் சூறையாடுகின்றன.
உதாரணமாய் ஒரு கார் தொழிற்சாலை, உங்கள் ஊரில் இருக்கும் தண்ணீர் வளத்தை எல்லாமே சுரண்டுகிறது. ஒரு கார் தயாரிக்க ஒன்றை லட்சம் லிட்டர் செலவு ஆகிறது. ஒட்டு மொத்தமாக நாட்டை நீர் வளம் இல்லாமல் ஆக்கி விடும். இங்கு ஜெயாவோ இல்லை கருணாநிதியோ வந்தால் முதலாளிகளுக்கு சலுகை தான். 600 கோடி முதலீடு போட்டால், 750 கோடிக்கு மேல் அவர்களுக்கு சலுகை தருவார்கள், நீர் மின்சாரம் எல்லாம் சல்லீசாய் கிடைக்கும். phonix மால் போன்ற இடங்களை மக்கள் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தும், அங்கு நிலத்தடி நீர் சுரண்டப்படும் என்று தெரிந்து அனுமதி கொடுப்பார்கள். ஒரு கொள்கை என்பது இல்லாமல் அந்தத்தருணத்தில் எப்படி முடிவு எடுப்பீர்கள் தலைவா?
OMR அந்த செழிப்பான நிலங்கள் எல்லாம் corperate வேட்டைக்காடுகள் ஆகி விட்டன. தேவை கொள்ளை லாபம். அதை எல்லாம் எப்படி சமாளிப்பீர்கள்? கட்சிக்கு கொள்கை அதாவது நான் முதலாளி பக்கம் தான் பா அவன் தானே வேலை கொடுக்கிறான் என்று கூட நீங்கள் கொள்கை வைத்துக்கொள்ளலாம். நான் சொல்லவருவது தவறோ சரியோ கொள்கை இல்லாமல் என்ன செய்துவிட முடியும். அடுத்தவருக்கு கொள்கை இருக்கா? நீங்கள் கொண்டு வரப்போவது மாற்று அரசியல் தானே ஏன் அவர்களை உதாரணம் காட்ட வேண்டும் .
வளங்கள் சுரண்டப்படுவதற்கு ஊரு பட்ட உதாரணங்கள் உண்டு. இதற்கு யார் போராட்டக்காரர்கள்
1) இடதுசாரிகள்
3) நீங்கள் தமிழகத்தை பார்த்து ஊரே சிரித்தது போல சொல்கிறீர்கள். தமிழகத்தை திராவிட காட்சிகள் சீரழித்தது என்ற பிம்பம் மக்கள் மத்தியில் பதிய வைக்கப்படுகிறது. உண்மையில் இவர்கள் ஆட்சி சரியாக இல்லை தான். ஆனால் மற்ற மாநிலங்களை பார்க்கும்பொழுது இவர்கள் வளர்ச்சி மேம்பட்டதாக இருக்கிறது. கட்டுமானம், கல்வி, சுகாதாரம் என்று எது எடுத்துக்கொண்டாலும் புள்ளிவிவரங்களை பார்த்தால் தமிழகம் நன்றாக தான் இருக்கிறது. வடமாநிலங்களுக்கு செல்பவர்களை கேளுங்கள் இன்னும் அங்கு கொத்தடிமை தனம் உள்ளது.
மக்கள் அடிமைகளாக இருக்கும் ஊர்கள் உண்டு. இங்கு அப்படி அல்ல. அங்கு எல்லாம் இங்கே எழுதுவது போல எழுதினால் கையை எடுத்துவிடுவார்கள். அதனால் தான் வடமாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வலுவாக உள்ளது. அங்கே மதத்தை வைத்து ஏமாற்றுவது போல் இங்கு ஏமாற்ற முடியாது என்பதே உண்மை. நீங்கள் எல்லாம் சிரிக்கும் அளவு தமிழகம் இல்லை தலைவரே.
4) தமிழகத்தில் முக்கிய பிரச்சனைகள்
1) காவேரி பிரச்சனை
2) முல்லைப்பெரியாறு பிரச்சனை
3) கூடங்குளம் பிரச்சனை
4) கதிரமங்கலம் பிரச்சனை
5) நீட் தேர்வு
6) சாதாரண மக்கள் நகருக்கு வெளியில் தூக்கி அடிக்கப்படுவது பெரும்பாக்கம் செம்மஞ்சேரி போன்ற
இடங்கள் (காலா படப்பிடிப்பில் ரஞ்சித் இடம் கேட்டுக்கொள்ளவும்)
7) சென்னைக்கு வருடத்திற்கு 5 லட்சம் பேர் புலம் பெயர்வது.
8) நீர் மேலாண்மை, சென்னையில் பெருமழை வந்தால் எப்படி சமாளிப்பது.
இதைப்போன்று பிரச்சனைகள் உண்டு. வேறு முக்கியமான பிரச்சனைகள் கூட இருக்கலாம், இதில் எல்லாம் பார்வை கருத்தை கூட சொல்லமாட்டிர்கள் சொல்லிவிட்டால் வீட்டிற்க்கு ரைட் வந்துவிடும். கட்சி 3 வருடம் கழித்து ஆரம்பிப்பேன் என்றால் சிரிப்பு வருமா வராதா? 3 வருடம் கழித்து ஆரம்பிக்கும் கட்சிக்கு இன்றே அறிவிப்பு ஏன் உங்கள் இரண்டு படங்களுக்கும் promotion என்றே சொல்வார்கள். உண்மைதானே.
சரி election வரும்பொழுது தானே நிற்க முடியும் சரி. களத்தில் நின்று போராடலாமே . கன்னியாகுமாரி மீனவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை ஆயிரக்கணக்கில் அங்கு செல்லவேண்டியது தானே. அந்த மக்களுக்காக போராடலாம் , அதுவும் செய்ய முடியாது 3 வருடம் கழித்து எனக்கு உடம்பு சரி இல்லை என்று நீங்கள் ஜகா கூட வாங்கலாமே . 3 வருடத்தில் நாட்டையே விற்றுவிடுவாரே மோடி அதற்கு என்ன செய்வீர்கள். election வரும்பொழுது நில்லுங்கள், இப்பொழுது சம கால பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கலாமே ….நோ கமெண்ட்ஸ் என்றால் எவன் செத்தாலும் பரவா இல்லை என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளலாமா?
குறிப்பு: ரஜினி ரசிகர்கள் 1000 2000 3000 ரூபாய் கொடுத்து தானே படம் பார்க்கிறார்கள். அது எந்த நேர்மையின் கீழ் வரும். குறைந்தபட்சம் 2.0 படத்திற்கு பிளாக் டிக்கெட் இல்லை என்ற தையிரமான முடிவை தலைவரால் எடுக்க முடியுமா? பிளாக் டிக்கெட் பாக்கறது எல்லாம் அவர் வேலை இல்லை என்றால், உங்கள் சிஸ்டம் சரி பண்ண முடியாத நீங்கள் வேறு எதை சரி பண்ணுவீர்கள். 1000 2000 ரூபாய் டிக்கெட் வசூலால் தான் 250 கோடி வசூல் காட்டமுடிகிறது, அது தலைவர் 40 கோடி சம்பளம் உருவாக்குகிறது. அந்த 40 கோடிக்கு தலைவர் tax கட்டலாம் அந்த 40 கோடி மார்க்கெட் இந்த பிளாக் மார்க்கெட்டில் உருவாகுகிறது . நீங்கள் சமூகத்தை எல்லாம் மாற்றுவது ஒரு புறம் குறைந்தபட்சம் 100 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்யுங்கள் பார்ப்போம். நீங்கள் இது வரை நேர்மையாக இல்லாது இருக்கும் பொழுது கூட கொஞ்சம் மாறி இருக்கிறார்கள் என்றாவது ஒத்துக்கொள்ளலாம்.
கார்த்திக், யூ ட்யூப் விமர்சகர். இவரை  தோழர் கார்த்திக் இங்கே பிந்தொடரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக