புதன், 10 ஜனவரி, 2018

1758 ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் கோட்டையை காப்பாற்ற போரிட்ட தலித்துகள்

சென்னைBBC : 1818 ல் பீமா நதிக்கரையில் மஹர்கள் எப்படி வீரஞ்செறிந்த போரில் பங்கேற்றார்களோ, போரை நடத்தி வென்றார்களோ அப்படி ஒரு வீர வரலாறு தமிழ்நாட்டு தலித் சமூகத்தவருக்கும் உண்டு. 1758 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் படையால் சென்னை முற்றுகையிடப்பட்டது.
பல மாதங்கள் முற்றுகையிட்டும் சென்னையை பிரெஞ்சுக்காரர்களால் கைப்பற்ற முடியவில்லை. அதற்குக் காரணம் பிரிட்டிஷ் துருப்புகளுக்குப் பறையர் சமூகத்தினர் உதவியாக இருந்ததுதான்.
சென்னைக்கு வயசு எத்தனை?18 ஆம் நூற்றாண்டில் காலனி ஆதிக்கப் போட்டியில் பிரிட்டிஷ் படைகளும் பிரெஞ்சு படைகளும் மோதிக்கொண்டன. 1756 ல் ஆரம்பித்து 1763 வரை ஏழு ஆண்டுகள் உலகின் பல்வேறு நாடுகளில் இந்தப் போர்கள் நடந்தன. அதில் சென்னையைக் கைப்பற்றுவதற்காக நடந்த யுத்தம் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் பெற்ற வெற்றியின் மூலம்தான் பிரெஞ்சு காலனி ஆதிக்க முயற்சிகள் முறியடிக்கப்பட்டு பிரிட்டிஷ் மேலாதிக்கம் இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்டது.
சுமார் 1950 ஆம் ஆண்டில் மெட்ரா/ ஜெனரல் லாலி தலைமையில் கடலூரிலிருந்த செயின்ட் டேவிட் கோட்டையைக் கைப்பற்றியபின் 1758 டிசம்பர் மாதத்தில் சென்னைக்குள் பிரெஞ்சுப் படைகள் நுழைந்தன. அதைக் கண்டதும் சென்னையிலிருந்த பெரும்பாலோர் ஊரைக் காலிசெய்துவிட்டு வேறு ஊர்களுக்குப் போய்விட்டனர்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுப் படை முற்றுகையிட்ட நிலையில் போதுமான துருப்புகள் இல்லாமல் கல்கத்தாவிலிருந்து வரவேண்டிய கப்பல்படையின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்த பிரிட்டிஷ் ராணுவத் தளபதி ஜெனரல் பிகோட் என்பவர் தனது துபாஷியான ரஞ்சேஸ்ரீ முத்துக்கிருஷ்ண முதலியார் என்பவரை அழைத்துக்கொண்டு பிளாக் டவுன் என்று அழைக்கப்பட்ட தலித் குடியிருப்புக்கு வந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பாதுகாக்க உதவுமாறு அங்கிருந்த பறையர் சமூகத்துத் தலைவர்களை கேட்டுக்கொண்டார்.

சண்டையிட்டவர்களுக்கு ஒரு ஜோடி உடை மட்டுமே
அதனடிப்படையில் இரண்டாயிரம் தலித் ஆண்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குச் சென்று அங்கிருந்த பிரிட்டிஷ் துருப்புகளோடு சேர்ந்து சென்னையைக் காக்கப் போரிட்டனர். தொடர்ச்சியாகப் பீரங்கித் தாக்குதல் நடத்தியும் பிரெஞ்சுப் படையால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத் தகர்க்கவோ சென்னையைக் கைப்பற்றவோ முடியவில்லை. எனவே 1759 பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் அது தோற்றுப் பின்வாங்கிச் சென்றது.
சுமார் மூன்று மாத காலம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் காத்து நின்று பிரெஞ்சுப் படையைத் தோற்றோடச்செய்த போரில் நூற்றுக்கணக்கான தலித்துகள் வீர மரணம் அடைந்தனர். அப்படி மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிலமும், உதவித் தொகையும் வழங்குவதாக பிரிட்டிஷ் அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ஜோடி உடை மட்டுமே அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.

1810 ஆம் ஆண்டு பிளாக் டவுனில் குடியிருந்த தலித்துகள், ஐரோப்பியர்கள், போர்த்துகீசியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் ஆகியோரின் வீடுகளுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் வரி விதித்தது. தமது முன்னோர்கள் சென்னையைக் காப்பாற்றுவதற்கும் பிரிட்டிஷ் ஆட்சி நிலைபெறுவதற்கும் செய்த உதவியை சுட்டிக்காட்டி அந்த வரியை நீக்குமாறு மலையப்பன், மதுரவாசம், கூத்தன், குட்டியப்பன் உள்ளிட்ட தலித் சமூகப் பெரியவர்கள் 44 பேர் கையொப்பமிட்டு பிரிட்டிஷ் அரசுக்கு மனு அளித்தனர்.
அந்த கோரிக்கையைப் பரிசீலித்த பிரிட்டிஷ் காலனிய அரசு தலித் சமூகத்தினரின் வீடுகளுக்கு வரி விலக்களித்து 1810 மார்ச் 27 ஆம் நாள் ஆணை பிறப்பித்தது.
பீமா கோரேகான் யுத்தத்துக்கும் சென்னையைக் காப்பாற்றுவதற்கு நடந்த போருக்கும் முக்கியமான இரு வேறுபாடுகள் உள்ளன. கோரேகானில் இந்தியாவைச் சேர்ந்த பேஷ்வாக்களின் படையை பிரிட்டிஷ் காலனிய படையோடு சேர்ந்து மஹர்கள் தோற்கடித்தனர். ஆனால் சென்னையிலோ பிரெஞ்சு காலனிய படையை எதிர்த்தே பிரிட்டிஷ் படையுடன் சேர்ந்து பறையர் சமூகத்தினர் போரிட்டனர். அங்கு பிரிட்டிஷ் படை நடத்தியது ஆக்கிரமிப்புக்கான யுத்தம். ஆனால் இங்கு நடந்ததோ சென்னையைக் காப்பதற்கான தற்காப்பு யுத்தம்.
நினைவுகூரவோ பெருமைகொள்ளவோ தவறிவிட்டனர்
பீமா கோரேகான் யுத்தம் நடப்பதற்கு 60 ஆண்டுகளுக்கு முன்பே வீரம் செறிந்த போரை நடத்தி பிரெஞ்சுப் படையிடமிருந்து சென்னையைக் காத்த வரலாறு தமிழ்நாட்டுப் பறையர் சமூகத்தினருக்கு இருந்தும் அதை மகாராஷ்டிர மாநில மஹர்களைப்போல இங்கே நினைவுகூரவோ பெருமைகொள்ளவோ அவர்கள் தவறிவிட்டனர்.
பீமா கோரேகானின் வீர நினைவுகளை 1927 ஆம் ஆண்டு அம்பேத்கர் மீட்டெடுத்ததைப் போலத்தான் 1758 ஆம் ஆண்டு யுத்தம் குறித்த செய்திகளடங்கிய ஆவணங்களைக் கிழக்கிந்திய கம்பெனியாரின் ஆவணங்களிலிருந்து கண்டெடுத்து சென்னையின் மேயராயிருந்த தலித் தலைவர் சிவஷண்முகம் பிள்ளை அச்சிட்டு வெளிக்கொண்டுவந்தார்.

சென்னைபடத்தின் காப்புரிமை Getty Images
ஆனாலும் பீமா கோரேகான் போர் நினைவுச் சின்னத்தையொட்டி ஆண்டுதோறும் மகராஷ்டிர தலித்துகள் லட்சக் கணக்கில் கூடுவதைப்போல இங்கே பிளாக் டவுன் என முன்னர் அறியப்பட்ட பகுதியிலோ அல்லது தமது முன்னோரால் காப்பாற்றப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகிலோ ஆண்டுதோறும் தமிழ்நாட்டு தலித்துகள் கூடவோ தமது வரலாற்றை நினைவுகூரவோ இல்லை. மையநீரோட்ட வரலாறு அவர்களின் போராட்டங்கள் குறித்த பதிவுகளைப் புறக்கணித்ததும் அதற்கொரு காரணம்.
தலித் மக்களுக்கென்று வரலாறோ பண்பாடோ இல்லை; அவர்கள் எப்போதும் கல்வியறிவற்ற, நிலமற்ற கூலி அடிமைகளாகத்தான் இருந்துள்ளனர் என்பதுதான் சாதியவாதிகள் தமக்குள் தீட்டி வைத்திருக்கும் சித்திரம். அதையேதான் மைய நீரோட்ட வரலாறுகளும் மறு உறுதி செய்துள்ளன.
யூஜின் இர்ஷிக், டேவிட் வாஷ்புரூக் போன்ற ஒருசில அயல்நாட்டு வரலாற்றாசிரியர்களின் நூல்களில் மட்டும்தான் தலித் மக்களின் வீரஞ்செறிந்த போராட்ட வரலாறு பதிவாகியுள்ளது.
தலித் மக்கள் கல்வி பெறுவதையும், பதவிகளுக்கு வருவதையும், அவர்கள் பொருளாதார ரீதியாக வலுப்பெறுவதையும்கூட சாதிய மனம் சகித்துக்கொள்ளும். ஆனால் தலித் மக்களுக்கு வீரஞ் செறிந்த வரலாறு ஒன்று இருக்கிறது என்பதை அதனால் ஏற்கவே முடியாது. அதைத்தான் பீமா கோரேகானில் நடந்த தாக்குதல் காட்டுகிறது.
சென்னையைப் பிடிக்க முடியாமல் பிரெஞ்சுப் படை தோற்றுப் பின் வாங்கிய நிகழ்வின் 260 ஆம் ஆண்டு எதிர்வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி ஆரம்பிக்கிறது. பீமா கோரேகான் போராட்டத்திலிருந்து தமிழ்நாட்டு தலித் மக்கள் உத்வேகம் பெற்றிருந்தால் பிப்ரவரி 16 ஆம் நாளை அவர்கள் நினைவுகூரக்கூடும். புறக்கணிக்கப்பட்ட வரலாறு திருத்தி எழுதப்பட அதுவே துவக்கமாகவும் அமைந்துவிடக்கூடும்.
bbc

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக