திங்கள், 29 ஜனவரி, 2018

17 நாடுகளில் பொது தமிழ் பாடத்திட்டம் .. புலம்பெயர் தமிழர்கள் ஒருங்கிணைந்த ... அறிவகம் 10 ஆம் ஆண்டில் ...

இணைந்து வளர்ப்போம்! உயர்ந்து நிற்போம்!
புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் தாய்மொழி மீதான பற்றால் தம் சந்ததியினருக்கு தாய் மொழியை வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதெல்லாம் புகட்டியே வந்தனர். 2008 ஆம் ஆண்டுக்கு முன் கனடாவில் ஆங்காங்கு ஒரு சில தமிழாசிரியர்கள் தனிப்பட்ட முறையிலும், ஒரு சில அமைப்புகள் குறிப்பிட்ட மாணவர்கள் அடங்கிய சிறு குழுக்களுக்கும் தமிழை கற்பித்து வந்தனர்.>
எனினும் புலம்பெயர் தேசங்கள் அனைத்திலும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் எமது வரலாறுகளை உள்ளடக்கியதாகவும், எமது பண்பாடுகளை உள்ளடக்கியதாகவும் தமிழைக் கற்பித்து வரும் நிலை காணப்படவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு உலகளாவிய அளவில் புலம்பெயர் தமிழ் மாணவர்கள் பெருமளவில் வாழும் 17 நாடுகளை இணைத்து எமது வரலாறுகளையும், எமது பண்பாடுகளையும் கொண்டதாக பொதுவான ஒரு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. அதற்கு அமைவாக பல கல்விமான்கள் இணைந்து பல ஆண்டுகள் முயற்சித்து பாடநூல்களையும், பயிற்சி நூல்களையும் எழுதி வெளியிட்டனர். இறுவட்டுகளையும் உருவாக்கினர்.  இவ்விதமாக எமக் கென்று ஒரு பொதுவான தமிழ் கற்பிக்கும் செயற்திட்டம் உருவாக்கப்பட்டது.


அதன் தொடர்ச்சியாக கனடாவில் தமிழ் கற்பிக்கும் பெரும்பாலான ஆசிரியர்களையும், அமைப்புகளையும் ஒன்றிணைத்து  டொரன்டோவிலே அறிவகம் எனும் பெயரில் ஒரு நடுவம் உருவாக்கப்பட்டது.

1) அதிகரித்த மாணவர்களும், ஆசிரியர்களும்
ஆரம்பத்தில் இருபது ஆசிரியர்களும், 150 மாணவர்களுமே இவ்விதம் ஒருங்கிணைக்கப்பட்டனர். அவர்கள் யாவருக்கும் வயது அடிப்படையில் ஒரே பாட, பயிற்சி நூல்கள் வழங்கப்பட்டன. 10ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் இவ் வேளை நூற்றுக்குமேற்பட்ட வளாகங்களையும் ஐயாயிரத்திற்குமேற்பட்ட மாணவர்களையும் கொண்ட ஒரு பெரு விருட்சமாக அறிவகம் வளர்ந்து நிற்கின்றது.

இருபது ஆசிரியர்களுடன் உருவான இவ் அமைப்பு இன்று முன்னூறிற்கும் அதிகமான ஆசிரிய வளத்துடன் நிமிர்ந்து நிற்கின்றது.

2) டொரன்டோவில் ஆரம்பித்து இன்று கனடா முழுமையிலும்
டொரன்டோவில் மட்டும் உருவான இவ் அமைப்பின் தமிழ்க் கல்விப் பணி இன்று மொன்றியல், கல்கரி, ஒட்டாவா,          அலிஸ்டன்,வின்சர், ஒசோவா என கனடாவில் தமிழர்கள் வாழுமிடங்களிலெல்லாம் பரவி நிற்கின்றது.

2008 இல் டொரன்டோவில் ஸ்காபரோ, மிசிஸாக்கா, பிரம்டன், மார்க்கம் மற்றும் டவுன்டவுன் ஆகிய இடங்களில் மட்டுமே அறிவக வளாகங்கள் காணப்பட்டன. காலம் செல்லச் செல்ல  தமிழ் மக்கள் டொரன்டோவின் மூலை முடுக்கெல்லாம் சென்று வாழ விளைந்தமையால் அறிவகமும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று தன்சேவையை ஆற்றிவருகின்றது. அந்த வகையில் இன்று டொரன்டோவில் மில்டன், எட்டோபிக்கோ, றிச்மன்கில், ஸ்ரோவில், ஏஜெக்ஸ், பிக்கரிங், என பல இடங்களிலும் வளாகங்களைத் திறந்து சேவையாற்றிவருகின்றது.

3) தமிழ் மொழியை மட்டும் கற்பித்த நிலை மாறி பண்பாடு, வரலாற்றையும் இணைத்துக் கற்பித்தல்
மாணவர்களுக்கு ஆரம்பத்தில் தமிழ் மொழியை மட்டுமே ஆசிரியர்கள் கற்பித்து வந்தனர். ஆனால் அறிவகம் அன்று முதல் இன்று வரை தமிழ் மொழியோடு, எமது பண்பாடு, எமது வரலாறு, மொழியின் வரலாறு என பலவற்றையும் கற்பித்து வருகின்றது.

4) மிகச் சிறந்த தேர்வு முறைமை – பரிசளிப்பு விழாவை அறிமுகப்படுத்தியது
அரையாண்டுத் தேர்வு, ஆண்டிறுதித் தேர்வு என இரு தேர்வுகள் அறிவகத்தால் நடத்தப்படுகின்றன. இத் தேர்வுகள் உலகின் புலம்பெயர் தமிழர்கள் வாழும் பதினாறு நாடுகளில் ஒரே நேரத்தில் நடைபெறும் தேர்வாகும். இத் தேர்வுகள் எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு என இரு விடயங்களைக் கொண்டது. வாய்மொழித் தேர்வு என்பது பேசுதல், கேட்டல், வாசித்தல் எனும் விடயங்கள் அடங்கியதாக உள்ளது. இவ்வாறாக மிகச் சிறப்பான தேர்வுகளை நடத்தி ஆண்டு தோறும் பெருமெடுப்பில் பரிசளிப்பு விழாவையும் அறிவகம் நடத்தி வருகின்றது.

5) பிற போட்டிகளை நடத்துகின்றமை 
மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஓவியப் போட்டி, சொல்வது எழுதுதல் போட்டி, பேச்சுப் போட்டி என பல போட்டிகளை நடத்தி தங்கபதக்கங்கள், வெற்றிக் கோப்பைகள், சான்றிதழ்கள் என பலவற்றையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்றது.

6) இயல், இசை, நாடக வழாக்கள் 
ஆரம்ப காலத்தில் வகுப்பறை மட்டத்துடன் காணப்பட்ட மாணவர்களின் முத்தமிழ் நிகழ்வுகள் பின்பு அறிவகத்தின் தோழமை அமைப்புகளுடன் சேர்ந்து பெருமெடுப்பில் மார்க்கம் மைதானத்தில் நட்சத்திர விழாவாக மேடையேற்றப்பட்டன. 2014 முதல் “வாகை” எனும் பெயருடன் மாணவர்களின் முத்தமிழ் நிகழ்வுகள் 5 முழு நாள்  நிகழ்வுகளாக நடைபெற்று வருகின்றது. கனடாத் தமிழ்க் கல்லூரி நிர்வாகத்தால் நடத்தப்படும் 16 அறிவக வளாகங்களில் “நாற்றுமேடை” எனும் பெயரில் முத்தமிழ் நிகழ்வுகள் 5 நாட்கள் நடைபெற்று வருகின்றது. இதனைவிட ஒட்டாவா முதலான பிற மாகாணங்களிலும் முத்தமிழ் நிகழ்வுகள் சிறப்பாக  நடைபெற்று வருகின்றது.

7) ஓப்படைகளும் கண்காட்சியும்
மாணவர்களின் செயற்திட்ட வினைத்திறனை அதிகரிக்கும் வண்ணம் மாணவர்களுக்கு( தரம் 5 தொடக்கம் தரம் 8 வரை) கடந்த 3 ஆண்டுகளாக ஒப்படைகள் எனும் செயற்றிட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. இதன் ஒரு வளர்ச்சிக் கட்டமாக மாணவர்களின் வினைத்திறனை எல்லோரும் அறிந்துகொள்ளும் வண்ணம் கண்காட்சிகள் இடம்பெறுகின்றன.

8) வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மாணவர்களை பங்குபற்றச் செய்தல்
கனடாத் தமிழ் வானொலியில் வாரம் தோறும் நடைபெறும் சிறுவர் நிகழ்ச்சியில் அறிவக மாணவர்கள் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடந்த வருடம் வுநுவு  தொலைக்காட்சியில் அறிவக மாணவர்கள் பங்குபற்றும் பேச்சுப்போட்டி நடைபெற்றது.

9) கற்பித்தல் உபகரணங்கள் சிறப்பாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை
மாணவர்களுக்கு பல வர்ணங்களில் அழகுற அச்சடிக்கப்பட்ட ஒவ்வொரு வகுப்புகளுக்குமான பாட நூல்கள், பயிற்சி நூல்கள்,இறுவட்டுக்கள், கற்றல் நாட்குறிப்பேடுகள்,கதை நூல்கள், அரிச் சுவடிச் செயலட்டைகள் என கற்றல் சாதனங்கள் வழங்கப்பட்டு;ள்ளன. ஆசிரியர்களுக்கு என கற்பித்தல் உபகரணங்களாக பயிலல் வள நூல்கள், கட்புலவளநூல்கள், வழங்கப்பட்டுள்ளன.

10) ஆசிரியர் செயலமர்வுகள் 
புதிய ஆசிரியர்களுக்கான செயலமர்வுகளும், அறிவக ஆசிரியர்களுக்கான  செயலமர்வுகளும் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. ஸ்காபரோவிலும், ஒட்டோவாவிலும், மொன்றியலிலும் இத்தகைய செயலமர்வுகள் நடைபெறுகின்றன.
புலம்பெயர் தமிழர் வாழும் பிற நாடுகளிலிருந்தும் வளவாளர்கள் அழைக்கப்பட்டு செயலமர்வுகள் நடத்தப்படுகின்றன.

11) பெற்றோர் – ஆசிரியர் சந்திப்புகள்
வளாக மட்டத்திலும், அறிவகத் தலைமைப் பணிமனை மட்டத்திலும்  பெற்றோர் – ஆசிரியர் சந்திப்புகள் நடைபெறுவதுடன் அவர்களின் குறைகேள் விடயங்கள் ஆராயப்பட்டு நிவர்த்தி செய்யப்படுகின்றது.

12) மாணவர்கள் எம் பண்பாடுகளை, வரலாற்றை அறிந்து கொள்ளும் வண்ணம் விழாக்களை நடத்துதல் 
ஆண்டுதோறும் பொங்கல் விழா, ஏடு தொடக்கும் விழா, தமிழ் மரபுத் திங்கள் விழா என்பன நடத்தப்படுகின்றன. இதனூடாக மாணவர்கள் தமது  பண்பாடுகளை, வரலாற்றை அறிந்து கொள்ளும் நிலை உருவாகின்றது.

13) கடந்த கால வினாத்தாள் தொகுப்புகள், மேலதிக பயிற்சிகள் வழங்குதல்
மாணவர்கள் தேர்விற்கு தம்மைத் தயார்ப்படுத்தும் வகையில் கடந்த கால வினாத்தாள் தொகுப்புகள் ( 5 ஆண்டு வினாத்தாள்கள் ) வழங்கப்படுவதுடன், மேலதிக பயிற்சிகளும்  அச்சடித்து இடையிடையே வழங்கப்படுகின்றன.

14) ஆசிரியர் ஒன்றுகூடல் நிகழ்வுகள்
ஆண்டிறுதியில் ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதற்கு முத்தாய்ப்பாய் 2015 இல் “புலர்வு” என்னும் ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு பெருமெடுப்பில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு விருந்தினராக இந்தியாவிலிருந்து கவிஞர் அறிவுமதி அழைக்கப்பட்டிருந்தார்.

15) அரிய ஆயிரக்கணக்கான நூல்களைக் கொண்ட  நூலகம் 
அறிவகத் தலைமைப் பணிமனையில் அனைவரும் பயன் பெறும் வண்ணம் பதினையாயிரத்திற்கும் மேற்பட்ட அரிய தமிழ் நூல்கள் கொண்ட நூலகம் அமைக்கப்பட்டுள்ளமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக