சனி, 16 டிசம்பர், 2017

நாப்கின் நாயகனைக் கொண்டாடும் படம்! Pad Man

minnambalam :
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கை தற்போது பாலிவுட்டில் படமாகிவருகிறது. இந்தப் படத்தில் டிரைலர் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
அவர் அப்படி என்ன செய்துவிட்டார்?
பெண்களுக்கு முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று மாதவிடாய். மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் கஷ்டங்களைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. பெண்களின் இந்தச் சிரமத்தைக் குறைப்பதற்காக முயற்சியை மேற்கொண்டு, பல்வேறு இன்னல்களுக்கிடையில் வெற்றிபெற்றவர் அருணாசலம்.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கினை வியாபார நோக்கத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். தற்போது நாப்கின்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு விதித்துள்ளது. நாப்கின்களின் விலையைக் கண்டு மலைக்கும் கிராமப்புறப் பெண்கள் நாப்கின்களைப் பயன்படுத்த முடியாமல் துணி, சாம்பல் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.
இந்தியாவில் இன்று வரை சுமார் 70% பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமான நாப்கின்களைப் பயன்படுத்துவதில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அவர்களின் சிரமத்தைப் போக்க அருணாசலம் உதவி செய்தார். தன் மனைவிக்கு உதவுவதற்காக இயற்கை முறையில் விலை மலிவான நாப்கின்களை உருவாக்க விரும்பினார். பெரு முயற்சிக்குப் பிறகு அதைச் செயல்படுத்தியுள்ளார். இதைச் சாதிப்பதற்குள் அவர் பட்ட கஷ்டங்களும் அவமானங்களும் மிக அதிகம். இதைப் பற்றி பேசினாலே அசிங்கம் என்று நினைப்பவர்கள் மத்தியில் இவரின் செயல் பெண்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

பாதுகாப்பாகப் பெண்கள் பயன்படுத்தும் வகையில் தானே பரிசோதனைகளையும் ஆராய்ச்சியையும் செய்து, பல்வேறு இன்னல்களையும் இவர் எதிர்கொண்டுள்ளார். தற்போது ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரிஸ் என்ற பெயரில் மிகவும் மலிவான விலையில் நாப்கின்களைத் தயாரித்து நாடு முழுவதுமுள்ள கிராமப்புற பெண்களுக்கு விற்றுவருகிறார்.
இந்தச் செயலுக்காக அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதினை வழங்கியுள்ளது. இவரது புகழ் உலகம் முழுவதும் பரவிவருகிறது.
தற்போது இவரது செயலும் வாழ்க்கைக் கதையும் பாலிவுட்டில் படமாக்கப்பட்டுவருகின்றன. பேட் மேன் (PAD MAN) என்ற தலைப்பில் ஆர்.பால்கி இயக்கத்தில் அட்சய் குமார், ராதிகா அப்தே, சோனம் கபூர் ஆகியோர் நடிப்பில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுவருகிறது. இதன் டிரைலர் தற்போது வெளியாகிப் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக