மின்னம்பலம் - களந்தை பீர் முகம்மது :
‘சிந்தனைக்
களஞ்சியம்’ என்ற நூலின் பெயர், ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர்
எம்.எஸ்.கோல்வல்கரின் ‘சிந்தனைக் கொத்து’ நூலை நமக்கு ஞாபகப்படுத்துவது.
நம் ஞாபகம் தடம் புரண்டு அது கவிதை நூலில் வந்து முடிகிறது.
‘சிந்தனைக் களஞ்சியம்’ கவிதைகளை யாத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. குஜராத்தி மொழி பாக்கியம் செய்திருக்க வேண்டும். ஒருவர் பிரதமராக இருக்கும் காலத்திலும் தன்னைக் கருவியாகக்கொண்டு அவர் கவிதை இயற்றியிருக்கிறார் என்பது குறித்து குஜராத்தி மொழி நெஞ்சு விரித்திருக்கும்.
சிந்தனைக் களஞ்சியம், தமிழில் மொழிபெயர்ப்பாகியிருக்கிறது. தமிழுக்கு இன்னும் பல்லாயிரம் அயல்மொழிக் களஞ்சியங்கள் வந்துசேர வேண்டிய நிலையில் இந்தக் களஞ்சியம் வேகமெடுத்து வந்திருக்கிறது. அது நம் கவனத்துக்கு இருவரைக் கொண்டுவருகிறது. ஒருவர் அதன் கர்த்தா; பிறிதொருவர் அசல் தமிழ்க் கவிஞரான வைரமுத்து.
எதிரி வீட்டின் திருமணத்துக்குச் செல்ல வேண்டிய நெருக்கடி நம் எல்லோருக்கும் அமையக்கூடியதுதான். அவ்வாறு செல்வதில் நம்மைச் சார்ந்த யாரோ ஒருவரின் பிரதான நலம் அடங்கிக் கிடக்கும். அதன் பொருட்டாக மதியாதார் தலைவாசல் மிதிக்கிறோம். அப்படி மிதித்தாலும் தன் கௌரவத்தைச் சேதப்படுத்தாமல் திரும்பும் உத்தி தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில் நம் பண்புக்கு இழுக்குத்தான் நிரந்தரமாகச் சேரும்.
நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டாம் அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை
வைரமுத்து இக்குறளை அறிந்துதான் சென்றிருப்பார்.
கவிதை நூலின் முதல் பிரதியை வைரமுத்து பெற்றிருக்கிறார். அவர் நூல் குறித்தும் கவிதைகள் குறித்தும் பேசியாக வேண்டும். அது அவருக்கான நாகரிகம். நூல் வெளியீட்டின் ஒரு வாரத்துக்கு முன்னர் வைரமுத்துவின் தலைவர் கலைஞர் கருணாநிதியைப் பிரதமர் மோடி தேடிச்சென்று நலம் விசாரித்திருக்கிறார். நனி நாகரிகம் - பல அரசியல் கணக்குகள் இருந்தபோதும்!
வைரமுத்துவுக்கு இந்நூல் வெளியீட்டைப் பொறுத்தமட்டில் புதிய அனுபவம். அவர் இதுவரை உரையாற்றிய நூறு நூறு கூட்டங்களிலும் கண்டறியாத, உச்சரித்தறியாத புதுமுகங்கள் பல பேர் வீற்றிருந்தார்கள் - நல்லி சின்னசாமி செட்டியாரைத் தவிர! இந்த மேடையில் ஏறும்போதோ, அதிலிருந்து எதிரேயுள்ள பங்கேற்பார்களைப் பார்க்கும்போதோ முன்னம் கண்டறியாத நிறமும் முன்னம் உணர்ந்தறியாத வாசனையும் அவருக்கு அறிமுகமாகியிருக்கலாம். வைரமுத்துவுக்கு அப்படியான நெருக்கடி ஏதும் ஏற்பட்டிருக்கவில்லை; அதை அவருடைய உரையின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. எப்போதும் எல்லா மேடைகளையும் அவர் எப்படியான தோரணையில் கையாள்வாரோ அதே தோரணை இங்கும்.
அணுக்கமும் ஆதாயமும்
கலைஞர் முதல்வராக இருந்த நாள்களில் காலை நேரங்களில் கலைஞரும் வைரமுத்துவும் பல நிமிஷங்கள் கவினுற வார்த்தையாடியிருக்கிறார்கள்; சந்தேகங்கள் களைந்திருக்கிறார்கள்; இருண்மையைக் கலைத்திருக்கிறார்கள். புதிய புதிய இலக்கிய உத்திகளையும் சங்க இலக்கியங்களையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கலந்துறவாடி மகிழ்ந்துள்ளார்கள். இவை பிறரறியா நிகழ்வுகள். இந்தத் தொடர்புகள் பல மேடைகளில் கலைஞரையும் வைரமுத்துவையும் அருகருகாக அமர வைத்துள்ளன. ஒருவருக்கொருவரான நட்பின் ஈடுபாடு உலகறிய வைத்த நிகழ்வுகள். சில மாதங்களுக்கு முன் வைரமுத்து அளித்த பேட்டியொன்றில், முதல்வரின் அணுக்கத்தில் இருக்க வேண்டும் என்ற ஆவலால் நிறைய திரை வாய்ப்புகளை இழந்ததாக அவர் கூறியிருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டின் ஒப்பற்ற தலைவராகவும் பல்லாண்டு காலம் முதல்வராகவும் இருக்கும் ஒருவரின் அருகிருந்ததின் மூலம் நீண்ட காலக் கண்ணுக்குத் தட்டுப்படாத பலப்பல ஆதாயங்களும் அவருக்கு வந்து சேர்ந்திருக்கும் அல்லவா. இதை ஏன் அவர் மறைக்கப் பார்க்கிறார்?
ஒரு மாநில முதல்வரின் அணுக்கத்தால் அவருக்கு உண்டாகும் பலன்களை விடவும் ஒரு நாட்டின் பிரதமரின் அணுக்கத்தின் பலன்கள் இன்னும் வீரியமாகவும் உலகறியக் கூடியதாகவும் இருக்கும். இப்படியொரு மேடையில் அமர்ந்து உரையாற்ற அவர் எடுத்துக்கொண்ட நேரத்தின் ஒவ்வொரு துளியும் தங்கக் காசுகளைக் கொட்டிக் கொடுக்கும் வைரமுத்துவுக்கு. ரஜினியின் ஒவ்வொரு துளி வியர்வைக்கும் தமிழகம் ஒரு பவுன் தங்கக் காசைக் கொட்டிக் கொடுத்தது எனப் பாடலின் மூலம் சொன்னவர். அவ்வகையில் வாழ்வில் கண்டறிந்த பொன்மாலைப் பொழுதுகளில் வைரமுத்துவுக்கு இது பிறிதொன்று.
கவிதையைப் பேச வரும்போது கவிஞனைப் பேசாமலும் போய்விடலாகாது. வைரமுத்து இந்த இடத்தில் மேற்கொண்டிருக்கும் சாகசங்களே நம்மை வியக்க வைக்கின்றன. மேடையில் தனக்கொரு இடம் கிடைத்தால் அது மோடியின் இதயத்திலுமான இடம். இந்த நம்பிக்கை, மோடியைத் தூக்கி நிறுத்துவதாக ஆகியிருக்கிறது.
முதல் பாராட்டுரையாக, கலைமகளின் பக்தன் என்கிற ஆன்மிகத் தளத்துக்குள் மோடியைக் கொண்டுவந்து நிறுத்துகிறார். இங்கிருந்து தொடங்கும் பாராட்டுரைகள் அடுத்தடுத்த அலைகளாகப் பெருகி மோடிக்கு சோபனம் கூறும் நிகழ்வாகவே மாறுகிறது. கவிதையை அலங்கரிக்கும் அணிகளில் சத்தியம்தான் உணர்ச்சியை அழைத்துக்கொண்டு வரும் என்கிறார்; மோடியின் கவிதைகளில் அந்த சத்தியம் புலப்படுகிறது வைரமுத்துவுக்கு. மோடியானவர் மதம், ஆன்மிகம், அரசியல் தாண்டிய ஒரு மனிதாபிமானியாகத் தென்படுகிறார். கூர்த்த மதியுள்ளவராக - நேர்மையாளராக - யாவரிடமும் நட்பு பாராட்டுபவராக - மலரினும் மென்மையானவராக...
மோடியின் அடையாளத்தை மாற்றும் வைரமுத்து
மோடியை இவ்வுலகம் எந்த வகையறாவின் கீழ் இதுவரையிலும் கண்டுவருகிறதோ அவையனைத்தையும் நிர்மூலமாக்குகிறார் வைரமுத்து. இத்தகையப் புகழ்மொழிகள் வைரமுத்துவிடமிருந்து வரும்போது நாம் புல்லரிக்க வேண்டியவர்கள் ஆனோம். எதுவெல்லாம் நமக்குச் சாத்தியமற்றவை, ஒப்புக்கொள்ள முடியாதவை என்று நாம் கருதினோமோ அவற்றையெல்லாம் கைவிடச் சொல்கின்றன கவிஞரின் மேடையுரை. மோடியின் கவிதையை அனுபவிப்பதற்கு நாம் இன்னொரு மனிதனாக ஆக வேண்டியிருக்கிறது. நாம் மாறத் தயார்; ஒருவரை நாம் கருதிய இடத்திலிருந்து மேன்மைப்படுத்திக் கொண்டுவந்தால், நமக்கும் சமூகத்துக்கும் நற்பலன்கள் கிடைத்துவிடுமெனில் நாமும் சில தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும் அல்லவா? இதன்வழியே முன்னையக் கருத்துகளை அழித்தொழித்தல் நல்லது.
பொன்.ராதாகிருஷ்ணனை அழைத்து மோடியின் கவிதைகளைக் கவனிக்க வைக்கிறார். அது ஓர் உரையாக மட்டுமில்லை. திரைத் துறையின் பல்வேறு தொழில்நுட்பங்களையும் ஒருசேரக் கவனிக்கும் பேராளுமைபோல பல நிமிட நேரங்களுக்கு வைரமுத்து பல அவதாரங்கள் எடுக்கிறார். இலக்கியத்துக்கும் ரசனைக்கும் இசைவில்லா மனிதர்களை மேடையில் பெயர் கூறி அழைத்துத் தன் பக்கம் ஈர்க்க வேண்டுமென்றால் வைரமுத்துவின் நெருக்கடியை நாம் உணர முடிகிறது.
அவருக்கு முன்னெச்சரிக்கை உணர்வுகளும் இல்லாமல் இல்லை. மோடியின் கவிதையைக் கவிதையாக மட்டுமே பார்க்க ஆசைப்படுகிறேன், அரசியலாகப் பார்க்கவில்லை என்ற முத்தாய்ப்பு வைத்தார் வைரமுத்து. இந்தப் பேச்சு வருங்காலத்தில் அவரைச் சூழும் இடர்களிலிருந்து காப்பாற்றும் என்று தோன்றுகிறது. மோடியின் இருப்பு முழுவதும் எவ்வெவற்றினால் ஆனதோ அவை அனைத்தையும் கரைக்கிறார் வைரமுத்து. அவரைத் தூய்மையான பிம்பமாகக் காட்டும் வைரமுத்துவின் அரசியல் எத்தனிப்பு இது.
மோடியின் கவிதைகளை வைரமுத்து வாசிக்க வாசிக்க நாமும் சற்றே மருட்சியடையும் விபரீத நிலை உண்டாகிறது. ஆண்டாண்டு காலமாக அமைதியையும் ஆன்மிகத்தையும் ஒருசேர விரும்பும் ஒரு ஞானிதானே இப்படியெல்லாம் சிந்திக்கவும் முடியும், எழுதவும் முடியும் என்ற ஐயம் மேலிடுகிறது. மதமும் இல்லாத, சம்பிரதாயமும் இல்லாத மோடி என்ற ஞானியின் குரல்,
வேறெங்கும் வேண்டாம் ஒரு கோயில் –
அதை நாம் நம் மனத்துக்குள் கட்டுவோம்
என்று முழங்குவதாக அமைகிறது. கவிதை எங்கே போகிறது? ராமர் கோயிலை நோக்கி! உச்ச நீதிமன்றமே நீங்கள் பேசி முடிவெடுங்கள் என்று சொல்லிவிட்டதால் தானும் அதற்குள் நுழைய விரும்பவில்லை என்ற வைரமுத்து, அதன் பின்னரே மனங்களில் கோயில் கட்டும் மோடியைத் தேசத்தின் குரலாக உவமிக்கிறார். ஒரே மரங்களைக் கொண்ட தொகுப்பு தோப்பாகும், பல மரங்களைக் கொண்ட தொகுப்புதான் காடாகும் என்று வர்ணித்த வைரமுத்து. சகிப்புத்தன்மை என்ற கருத்தியல் மோடியின் கவிதைகளில் இருக்கிறது என்றும் தெரிவிக்கிறார். மோடியின் பரிமாணங்கள் விரிகின்றன.
நாம் தற்சமயத்துக்கு வைரமுத்துவைப் பின்தொடர்வோம். நமக்குப் பல வில்லங்கமான கேள்விகள் எழுகின்றன.
மாறிவிட்டாரா மோடி?
மோடி உண்மையில் யாராக இருந்து இந்தக் கவிதைகளை எழுதுகிறார்? மோடிக்குள் இதுவரையில் இப்படியான கவிஞன் இருந்ததை உலகம் அறிந்திருக்கவில்லை. அவர் பிரதமரான பிறகுதான் இந்தக் கவிஞன் அவருக்குள் தோன்றினானா? மோடியின் கவிதைகள் சங்கப் பரிவார அரசியல் கருத்தியலிலிருந்து விலகி வருகின்றனவா? ஏதோ ஓர் அசம்பாவிதம் மோடிக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கிறதா? இவையெல்லாம் உண்மையெனில், ஆட்சிக்கு வந்த பிறகு மோடி தன் இயக்கக் கொள்கைகளும் செயல் திட்டங்களும் நாட்டைப் பிளவுபடுத்தி ரணகளமாக்கிவிடும் என்று அஞ்சுகிறாரா? மனசுக்குள் ஓராயிரம் கேள்விகளும் குழப்பங்களும் தோன்றிய வடிவில்தான் கவிஞன் என்பவனும் அவருக்குள் உருக்கொண்டானா?
ஒரு கவிஞனுக்குக் கற்பனையே ஆதர்சமான சக்தி. யதார்த்தத்தின் வழியிலான கற்பனைகள் புதிய உலகைக் காட்டக்கூடியன. மோடிக்கு இவை நிகழ்ந்தனவா? அந்தக் கற்பனைகள் மனத்துக்குள் எழுவதெனில் அதற்கான லவலேசம் நடவடிக்கையேனும் அந்தக் கவிஞனுக்குள் எழுந்திருக்க வேண்டும்.
மோடியின் ஆட்சி 2013இல் தொடங்கி இன்றுவரை நீண்டுகொண்டிருக்கிறது. நாட்டின் எல்லா மூலை முடுக்குகளிலும் எழும் வன்முறை சார்ந்த உணர்ச்சிவாதக் குரல்கள் அனைத்தும் மோடியின் ஆட்சியைத் தக்கவைத்தே தீர வேண்டும் என்பதற்கான முஸ்தீபுகளைக் கொண்டவை. சாதியவாதமும் மதவாதமும் இந்திய மண்ணில் இவ்வளவு உக்கிரமாக ஒலித்திருக்கும் வரலாறு இதற்கு முன் இருந்ததில்லை. மோடியே முன்னின்று வெறுப்பூட்டும் பிரசாரங்களை அசராத தொனியில் முழங்கியிருக்கிறார். இவரைத் தலையாகக்கொண்ட மொத்த பாஜகவும் இன்று குருதியின் வேகத்தைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் வன்முறை, பிரிவினைவாதப் பேச்சுகளைத் தொடர்ந்தபடியே இருக்கிறது.
சமூகம் முன் கண்டறியாத மாட்டிறைச்சிக் கொலைகள் இந்நூற்றாண்டில் மோடியின் ஆட்சியின் கீழே நடந்துள்ளன. ஆங்காங்கே பசுவைப் போற்றுவதாகக் கூறியவர்களாகப் பலநூறு பேர் கண்காணிப்பாளர்களாகத் தம்மை மாற்றிக்கொண்டார்கள். ஆங்காங்கே வழக்கை நடத்தி, தீர்ப்பளித்துத் தண்டனையும் வழங்கியிருக்கிறார்கள். தலைக்கு மீறி வெள்ளம் போன நிலையில்தான் பிரதமர் மோடி கொலையாளிகளை மென்மையாகக் கண்டிக்கிறார். அந்த மென்மையும் பயன்படுத்திய வார்த்தைகளின் தொனியும் பாஜக தொண்டர்களின் வன்முறையை ஊக்குவிக்கத்தானோ எனும் சந்தேகம் எழும் நிலையில் இருந்துள்ளன. வழக்கம்போலவே இத்தாக்குதல்கள் தலித்துகள் மீதும் தொடர்ந்தன. சாகிதிய அகாடமி விருதுபெற்ற இந்திய எழுத்தாளர்களில் பலபேரும் மோடியின், அவர் தொண்டர்களின் அராஜகப் போக்கைக் கண்டு கொதித்தெழுந்து தம் விருதுகளைத் திருப்பியளித்திருக்கிறார்கள். இப்போதோ மோடி வேறொரு ரூபத்தில் புகுந்துகொள்கிறார்.
கவிதைகள் பூடகமானவை. அவை வெளியே ஒன்றைக் காட்டிப் பிறிதொன்றை உணர்த்துவன. ஆனால், வைரமுத்துவின் கவிதைகள் நேரடியான பேசுபொருளைக் கொண்டவை. வைரமுத்து வாசித்த மோடியின் கவிதைகளும் நேரடியாகவே பேசுகின்றன. அவருடைய அரசியலின் அடிநாதம் இப்போது அபஸ்வரமாகிவிட்டது.
மோடியின் கவிதைகளும் அவற்றை எடுத்துரைத்த வைரமுத்துவின் உரையும் என்னவோ மாதிரியான சில சேதிகளை அல்லது ஐயங்களை உணர்த்துகின்றன. மோடியிடம் சகிப்புத்தன்மை கொண்ட, மதமற்ற, மனிதாபிமானமிக்க மனிதன் ஒருவன் இருக்கிறான் என்ற எண்ணமாகவே வைரமுத்து இவ்வளவு உரிமைகளையும் எடுத்துக்கொண்டு பேசினாரா அல்லது மோடியே தன்னுடைய ஆட்சியின் புதிய நிலைப்பாட்டைத் தனது பரிவார சகோதரத்துவத்துக்கு இக்கவிதைகள் வாயிலாக உணர்த்த விரும்புகிறாரா? அமைதியை இந்தியாவில் விரும்பக்கூடிய ஒவ்வொரு மனிதனுக்கும் மோடியின் கவிதைகளும் வைரமுத்துவின் உரையும் சோபனம் கூறுமா?
இந்த ஐயங்கள் தெளிவுறுவதற்கு ரொம்பவும் நீண்டநாள் ஆகாது. எல்லாம் கூடிய விரைவிலேயே அம்பலமாகிவிடும். அப்போது தப்பிக்கப் போவது வைரமுத்துவா அல்லது மோடியா என்று பார்ப்பதற்காகச் சிறிது காலம் அவகாசம் கொடுத்துப் பார்ப்போமே!
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: களந்தை பீர் முகம்மது எழுத்தாளர், ஊடகவியலாளர், இஸ்லாமியச் சமூகம் குறித்து பரந்துபட்ட பார்வையுடனும் முற்போக்குக் கண்ணோட்டத்துடனும் எழுதிவருபவர். திரைப்படம், இலக்கியம், அரசியல் குறித்தும் நுண்ணுணர்வுடன் தன் சிந்தனைகளைப் பதிவுசெய்து வருகிறார். இவரைத் தொடர்புகொள்ள: kalanthaipeermohamed@gmail.com)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக