வெள்ளி, 8 டிசம்பர், 2017

கடும் புயல் ... முன்கூட்டியே தெரிந்தும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை

தீக்கதிர் தலையங்கம்

கடும் புயல் தாக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்தும் மத்திய மாநில அரசுகள்உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத்தவறியதால் அதன் விளைவை குமரிமாவட்ட மக்களும் மீனவர்களும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாவட்டத்தை புரட்டிப் போட்ட புயலின் கோரத் தாண்டவத்தில் இருந்து மீனவர்களும் அவர்களது குடும்பத்தினரும் இன்னும் மீளவில்லை. ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்னமும் கடலுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் எந்தஇடத்தில் இருக்கிறார்கள் என்பதைக் கூட, சகல ஏற்பாடுகளையும் வைத்துக்கொண்டிருக்கும் மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. குமரி,தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில்கரை சேர்ந்திருப்பதாக தகவல்கள் வந்தபோதிலும் அவர்களை தமிழகத்திற்கு அழைத்து வரமாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீன் வளத்துறை அதிகாரிகளையும் அங்கு அனுப்பவில்லை.அண்டை மாநிலமான கேரளாவையும் ஒக்கி புயல் கடுமையாக தாக்கியது. அம்மாநில மீனவர்களும் காணாமல் போயினர்.

ஆனால் அம்மாநில அரசு சும்மா இருக்கவில்லை. கடற்படை,கடலோர காவல்படை, மீனவர்கள் உதவியுடன் தேடும் பணியை முடுக்கிவிட்டது. ‘‘பொதுமக்கள் மறியல் செய்கிறார்கள். மீனவர்பகுதிக்கு செல்லவேண்டாம்’’ என்று முதலமைச்சர் பினராயி விஜயனை அதிகாரிகள் கேட்டுக்கொண்டபோது, ‘‘அவர்கள் நம்மக்கள்தானே, ஒன்றும் செய்துவிடமாட்டார்கள்’’ என்று கூறியதோடு களத்திற்குச் சென்று மீனவ மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை விளக்கி அவர்களை சமாதானப்படுத்தினார்.ஆனால் தமிழகத்திலும் ஒரு முதலமைச்சர் இருக்கிறார். ஒக்கி புயல் குமரி மாவட்டத்தைத் தாக்கி பத்துநாட்களுக்கு மேல் ஆகிறது.சென்னையில் இருந்து அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறாரே தவிர அம்மாவட்டத்திற்குச் செல்லவில்லை. இதனால் கொதித்துப்போயுள்ள அம்மாவட்ட மக்கள் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஆபத்துக்காலங்களில் மீனவர்களை எச்சரிக்கும் சாதனங்களையும் 49ஆயிரம்உயிர்காக்கும் மிதவைகளையும் வாங்கியதாகஆண்டுதோறும் மாநில அரசு கணக்குக்காட்டுகிறது. பெரும்பாலான மீனவர்களுக்கு இந்த சாதனங்கள் வழங்கப்படவில்லை. ஆட்சியாளர்களின் இத்தகைய ஊழல் மிகுந்த நடவடிக்கையால் தற்போது மீனவர்கள் உயிருக்குப் போராடும்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இனியும் தாமதிக்காமல் அண்டை மாநிலங்கள் மற்றும்லட்சத் தீவு, மாலத்தீவுகளில் தஞ்சம் அடைந்துள்ள மீனவர்களையும் கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் மீனவர்களையும் காப்பாற்றதுரிதமாக செயல்படவேண்டும்.ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடும் சேதமடைந்ததை தேசிய பேரிடர் பாதித்தமாவட்டமாக அறிவித்து நிவாரணப் பணிகளைவிரைவுபடுத்த வேண்டும். மத்திய அரசும் கடந்த காலங்களைப்போல் அல்லாமல், தமிழகம் கோரும் நிதியை காலதாமதமின்றி வழங்குவதோடு பேரிடர் நிவாரணப்பணிகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக