திங்கள், 18 டிசம்பர், 2017

குஜராத், இமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்: பாஜக முன்னிலை

தினகரன் :அகமதாபாத்: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, குஜராத்தில் பாஜக 63 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 25 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இமாசலப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 1 இடத்திலும், பாஜக 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டமாகவும் (டிச. 9, 14ம் தேதி), இமாச்சலப் பிரதேசத்தில் 68 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாகவும் (நவ. 9) நடத்தப்பட்டது. குஜராத்தில் முதல் கட்ட தேர்தலில் 66.75 சதவீத வாக்குகளும், 2ம் கட்ட தேர்தலில் 69.99 சதவீத வாக்குகளும் பதிவான. மொத்த வாக்கு சதவீதம் 68.41. பதிவு செய்த 4,.35 கோடி வாக்காளர்களில் 2.97 கோடி பேர் வாக்களித்துள்ளனர். அதிகபட்சமாக நர்மதா மாவட்டத்தில் 79.15 சதவீத வாக்குகளும், துவாரகா மாவட்டத்தில் 59.39 சதவீத வாக்குகளும் பதிவாகின. இமாச்சலில் 74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது அம்மாநிலத்தில் கடந்த 40 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வாக்கு சதவீதமாகும். இந்நிலையில் இவ்விரு தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட உள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.


இதையொட்டி, வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 14ம் தேதி நடந்த தேர்தலின்போது வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு உள்ளிட்ட காரணங்களுக்காக  6 வாக்கு சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில், நிறுத்தப்பட்ட 6 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 14ம் தேதி முடிவடைந்தது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு மையங்களில் வைக்கப்பட்டன. குஜராத்தை பொறுத்த வரையில், அம்மாநில தேர்தல் முடிவை ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துள்ளது. கடந்த 5 சட்டப்பேரவை தேர்தல்களில் இமாலய வெற்றியுடன், பாஜவின் இரும்புக் கோட்டையாக திகழும் குஜராத், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமாகும். இதனால், குஜராத் வெற்றியை தன்மானப் பிரச்னையாக பாஜ கருதுகிறது. அதேபோல, காங்கிரசின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல் காந்திக்கு குஜராத் தேர்தல் மிக முக்கிய அரசியல் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

22 ஆண்டாக ஆட்சியை பிடிக்க முடியாத காங்கிரஸ், ராகுலின் தலைமையில் குஜராத் முடிவை மலைபோல் நம்பியுள்ளது. ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் குஜராத்தில் பாஜ மீது அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. இது காங்கிரசுக்கு பலமாக அமைந்த போதிலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜவுக்கு சாதகமாகவே அமைந்துள்ளன. இங்கு, 100க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பாஜ தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்பு முடிவுகள் கூறி உள்ளன. இதையும் மீறி காங்கிரஸ் குஜராத்தில் மீண்டும் காலூன்றுமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், குஜராத் தேர்தல் முடிவு 2019ம் ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாகவும் கருதப்படுவதால், இம்மாநில தேர்தல் முடிவை நாடே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. குஜராத்தில் ஆட்சி அமைக்க 92 இடங்களும், இமாச்சலில் ஆட்சி அமைக்க 35 இடங்களும் தேவை. இதையடுத்து ஏற்கனவே, சட்டப்பேரவை தேர்தலில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரசை இமாச்சலில் ஆட்சியை தக்க வைக்குமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக