செவ்வாய், 26 டிசம்பர், 2017

விகடன் குழுமத்தின் ஊடக விபசாரம் ....

சிறப்புக் கட்டுரை:  ஊடக அறம் என்பது என்ன?தனியன்
(அரசியல், அறிவியல், திரையுலகம், இலக்கியம், வணிகம் உள்ளிட்ட சகல துறைகளையும் விமர்சிக்கும் கடமையும் உரிமையும் கொண்டது ஊடகத் துறை. அந்த ஊடகத் துறை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது. ஊடகத் துறையைப் பிற துறையினர் விமர்சிப்பதைக் காட்டிலும், எல்லாத் துறைகளையும் விமர்சிக்கும் ஊடகத் துறைக்குள்ளிருந்தே அந்த விமர்சனம் வெளிவருவதே பொருத்தமாக இருக்கும். ஊடகத்தினுள் ஊடகம் பற்றிய விமர்சனம் என்பது கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிவது போலவே பொதுவாகப் பார்க்கப்படுகிறது. மாறாக, தன்னைத் தானே மேம்படுத்திக்கொள்வதற்கான சுய விமர்சனமாக, சுய பரிசோதனையாக அது பார்க்கப்படுவது ஆரோக்கியமானதாக இருக்கும். அந்த அடிப்படையில் கடித வடிவிலான இந்தக் கட்டுரை இங்கே பிரசுரிக்கப்படுகிறது - ஆசிரியர்)
அன்புள்ள விகடன் நிறுவனத்துக்கு,
இந்தக் கடிதத்துடன் இரண்டு புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி உங்கள் நிறுவன பத்திரிகையான ஜூவி “புலனாய்வு” செய்து (?!) வெளியிட்ட பல்வேறு கவர் ஸ்டோரிகளின் தொகுப்பு.
2ஜி ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ஊழல் நடந்ததற்கான ஏற்கத்தக்க எந்த ஆதாரங்களையும் வழக்குகளைத் தொடுத்த மத்தியப் புலனாய்வுத் துறையும் அந்நிய செலாவணித் துறையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்று கூறிக் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிபதி சைனி விடுவித்திருக்கும் பின்னணியில், அதில் மெகா ஊழல் நடந்ததாக ஏழாண்டுக் காலம் இடைவிடாமல் அட்டைப்படக் கட்டுரைகள் வெளியிட்ட விகடன் நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுகவின் இளம் தலைமுறையினர் பலர் கோரிவருகிறார்கள்.

ஆனால், அது நியாயமான கோரிக்கையல்ல. முதல் காரணம் அப்படியான கட்டுரைகளை விகடன் மட்டும் வெளியிடவில்லை. ஏறக்குறைய இந்தியாவின், தமிழ்நாட்டின் எல்லா ஊடகங்களுமே வெளியிட்டன (ஓரிருவரைத் தவிர). ஓராண்டல்ல; ஈராண்டல்ல... ஏழாண்டுக் காலம், இடைவிடாமல். அதில் சில கட்டுரைகளை இந்த வழக்கின் பிரதான குற்றவாளியாகக் கூறப்பட்ட ஆண்டி முத்து ராசாவிடம் தனிப்பட்ட ரீதியில் பலன்பெற்ற ஊடக நிறுவனங்களும் ஊடகர்களுமே எழுதி வெளியிட்டனர் என்பது கொசுறுத் தகவல். எனவே, அதில் விகடனை மட்டும் தனித்துக் குற்றம் சொல்ல எந்த நியாயமும் இல்லை.
வெளியிட்டது தவறா?
அதைவிட முக்கியமாக, பொது நன்மை கருதி ஊடகங்கள் தமக்கு கிடைத்த தகவல்களை, அவை முழுமையற்றதாக இருந்தாலும், வெளியிடுவதில் எந்தத் தவறும் இல்லை. சட்டமன்றத்தில் பேசப்படும் விஷயங்களுக்காக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கக் கூடாது என்கிற மரபு எப்படி ஜனநாயகச் செயல்பாட்டுக்கு அவசியமோ... அப்படியே ஊடகங்கள் பொது நன்மை கருதி வெளியிடும் புலனாய்வுச் செய்திகளுக்காக அவதூறு வழக்கு தொடுக்கக் கூடாது என்கிற வாதமும் வலுவானதே. அதிலும் பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் மீதான விமர்சனம், சந்தேகங்கள் எழுப்பப்படுவது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஆரோக்கியத்துக்கு அடிப்படையான தேவையும்கூட.
மேலும், விகடன் கட்டுரைகளில் கணிசமானவை மத்தியப் புலனாய்வுத் துறையும் அந்நிய செலாவணித் துறையும் கூறிய குற்றச்சாட்டுகளின் தொகுப்பு என்பதால் அவற்றை வெளியிட்டதில் எந்த தவறும் இல்லை. வழக்கின் விவரங்களை வெளியிடுவது ஊடகத்தின் அடிப்படைப் பணி. அதை செய்யாதே என்று சொல்லவோ, அதை செய்ததற்காக மன்னிப்பு கேள் என்று கோரவோ யாருக்கும் உரிமை இல்லை. குறிப்பாக அரசியல் கட்சியினருக்கு.
புத்தகத்துக்கான நியாயம் என்ன?
இந்தக் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள இரண்டாவது புகைப்படம் உங்கள் நிறுவனம் வெளியிட்ட புத்தகத்தின் முகப்பு. இந்தப் புத்தகத்தை நீங்கள் வெளியிட்டது சரியா என்பதே கேள்வி. அதைக் கேட்பதே இந்தக் கடிதத்தின் முக்கிய நோக்கம்.
ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் அது தொடர்பான செய்திகளை வெளியிடுவது ஊடக நிறுவனமாக உங்கள் உரிமை. அந்தச் செய்திகளில் சில பல தவறுகள், சார்புகள், உள்நோக்கங்கள்கூட இருக்கலாம். அவற்றை ஒருவர் ஏற்கலாம்; மறுக்கலாம். அவற்றுடன் ஒருவர் உடன்படாவிட்டாலும் அந்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடவே கூடாது என்று ஒருவர் கோர முடியாது.
ஆனால், ஒரு வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போதே, அதுவும் முதல்கட்ட நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போதே அந்த வழக்கு தொடர்பாக, முழுக்க முழுக்க ஒருபக்க சார்பாகப் புத்தகம் வெளியிடுவது எந்த வகையில் ஊடக நிறுவனத்தின் பணி? விகடன் நிறுவனம் இதற்கு முன் அத்தகைய புத்தகங்களை வெளியிட்டிருக்கிறதா? வெளியிட்டிருந்தால் அவற்றின் பட்டியல் தர முடியுமா? இந்தியாவையே உலுக்கிய சங்கர்ராமன் கொலை வழக்கு குறித்தோ, இந்தியாவிலேயே அதிகமான தடவைகள் ஊழலுக்காக வெவ்வேறு நீதிமன்றங்களால் பலமுறை தண்டிக்கப்பட்ட முதல்வர் தமிழ்நாட்டவராக இருந்தும் அவர் வழக்குகள் குறித்தோ விகடன் நிறுவனம் அது தொடர்பான வழக்குகள் நடக்கும்போதே புத்தகங்களை வெளியிட்டதா?
அப்படிச் செய்யாமல் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மட்டும் வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போதே புத்தகம் போட வேண்டிய அவசியம் என்ன? நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போது அது தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கே ஊடகங்களுக்குச் சட்டப்படியான கட்டுப்பாடுகள், நெறிமுறைகள் இருக்கும் நிலையில் அந்த சட்டப்படியான கட்டுப்பாடுகள், நெறிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு அவசர கதியில், அரைவேக்காட்டுத்தனமான, பக்க சார்புடைய புத்தகத்தை வெளியிட்டது ஏன்? என்ன அவசரம்? என்ன அவசியம்? என்ன நிர்பந்தம்?
ஊகங்களின் ஊர்வலம்’
விகடன் கழுகார் பாணியில் சொல்வதானால் இதுதொடர்பாக ஏகப்பட்ட ஊகங்கள் தமிழ்நாட்டு ஊடக உலகில் உலா வருகின்றன. அவற்றில் சில...
இந்த ஒட்டுமொத்த 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்னை பூதாகாரமாகக் கிளம்ப மாறன் சகோதரர்களும் காரணம் என்று பரவலாகப் புகார் நிலவுகிறது. தன்னிடம் இருந்த தொலைத்தொடர்புத் துறையைப் பறித்து ஆ.ராசாவிடம் கொடுத்ததைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பொறாமையில் பொசுங்கிய தயாநிதி மாறனின் அண்ணன் நிறுவனமான சன் தொலைக்காட்சியில் விகடன் நிறுவன தொலைத்தொடர்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகின்றன. விகடன் ஊடகங்களின் ஒட்டுமொத்த வருமானத்தைவிட சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விகடன் நிறுவன தொடர்களின் வருமானம் அதிகம் என்று கூறப்படுகிறது. அந்த வருவாய் தொடர்புக்கான நன்றிக்கடனாகவே இந்த பிரச்னையில் விகடன் ஊடகங்கள் ஆ.ராசாவையும் கனிமொழியையும் தொடர்ந்து குறிவைத்தன என்றும் அதன் நீட்சியாகவே எல்லா நெறிமுறைகளையும் புறந்தள்ளிவிட்டு இந்த சர்ச்சைக்குரிய புத்தகத்தையும் விகடன் வெளியிட்டது என்றும் பேசிக்கொள்கிறார்கள்.
மேலும், ஆ.ராசா தலித் அரசியல் ஆளுமை என்பதையும், இந்த புத்தகத்தை இரவும் பகலும் விழித்திருந்து ஓடியாடி வெளியிட்ட ஊடகவியலாளர்கள் தலித் அல்லாதவர்கள் என்பதையும் முடிச்சுப்போட்டுப் பார்க்கும் சிலர் அந்த ஊடகவியலாளர்களின் ஆழ்மன தலித் விரோதமும் சுயசாதிப் பாசமும்கூட இதற்குக் காரணம் என்றும் சந்தேகத்தை எழுப்புகிறார்கள்.
ஆனால், இந்த இரண்டுமே ஹேஸ்யங்கள். ஹேஸ்யங்கள் மட்டுமே. அவற்றை நம்புவதா, நம்பக்கூடாதா என்பது விகடன் நிறுவனத்தின் அடுத்த கட்ட செயற்பாட்டைப் பொறுத்தே அமையும்.
இந்தப் புத்தகத்தை இவ்வளவு அவசரப்பட்டு விகடன் நிறுவனம் வெளியிட்டதற்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்பது உண்மையானால் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் இரண்டு. அவை எளிமையானவை. நடைமுறை சாத்தியமானவையும்கூட.
முதலாவது, வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போதே இந்த புத்தகத்தை வெளியிட்டது ஊடக நெறிமுறைகளுக்கும் பதிப்பக அறத்துக்கும், சட்டப்படிக்கும் தவறு என்பதை உணர்ந்து உடனடியாக உங்கள் ஊடகங்கள் வாயிலாக பகிரங்க மன்னிப்பு கோருவதோடு இன்னும் விற்காமல் இருக்கும் இந்தப் புத்தக பிரதிகள் அனைத்தையும் உடனடியாகச் சந்தையிலிருந்து திரும்பப்பெறுவது.
இரண்டாவது, 2ஜி வழக்குகளின் தீர்ப்புகளை முழுமையாக மொழி பெயர்த்துப் புத்தகமாக வெளியிடுவது.

வியாபார ரீதியிலும் விகடனுக்கு இது லாபத்தைக் கொடுக்கும். கண்டிப்பாக திமுகவினர் போட்டிப்போட்டு இந்தப் புத்தகத்தை வாங்குவார்கள். சந்தேகமிருந்தால் தி இந்து தமிழ் நாளிதழின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ புத்தகம் எப்படி விற்பனையில் சாதனை புரிந்துவருகிறது என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
எனவே, உங்கள் தவற்றை திருத்திக்கொள்ளவும், உங்கள் மீதான சந்தேகத்தையும் களங்கத்தையும் துடைக்கவும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து புத்தகமாக வெளியிடுவதே சரி. அதுவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதற்கான எளிய வழி.
விகடனின் முன்னுதாரணம்...
இப்படிச் செய்வது விகடனுக்கு ஒன்றும் புதிதல்ல. ராஜீவ் கொலை விவகாரத்தை விகடன் நிறுவனம் இப்படித்தான் கையாண்டது. 1991 மே 21 முதல் 1996 மே மாதம் அதிமுக ஆட்சி படுதோல்வி அடையும்வரை ராஜீவ் கொலை தொடர்பான செய்திகளை விகடன் குழும ஊடகங்கள் இப்படித்தான் “புலனாய்ந்தன”. மத்தியப் புலனாய்வுத் துறை சொன்னதே அந்தக் காலகட்டத்தில் விகடனின் கவர் ஸ்டோரிகள். இன்னும் சிறையில் இருக்கும் பேரறிவாளன் குறித்து மட்டுமல்ல, ராஜீவ் கொலைக்கு முதல் நாள் வரை விகடன் பத்திரிகைகளில் பிரதான இடம்பிடித்த புகைப்படங்களை எடுத்துக்கொடுத்த சுபா சுந்தரம் முதல் விகடன் நிறுவனத்துக்கு freelance முறையில் வேலை செய்த சக ஊடகவியலாளர்கள் வரை சகலரும் “ராஜீவ் கொலைச் சதியில் கூட்டுப் பங்குதாரர்கள்” என்றே அந்தக் காலகட்டத்தின் விகடன் கவர் ஸ்டோரிகள் கதைத்தன. இன்னதென்றில்லை. சிபிஐ சொன்ன எல்லா வகையான ஊகங்களும் எந்தவித சரிபார்ப்புகளும் இன்றி உண்மை போலவே செய்தியாக்கப்பட்டன. எல்லாம் இன்னும் விகடனின் பவுண்ட் வால்யூம்களில் பத்திரமாக இருக்கின்றன
1996 ஆண்டு தேர்தலில் அதிமுக தோற்று திமுக ஆட்சிக்கு வந்த பின்தான் அதில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது. 1999ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ராஜீவ் கொலை வழக்கில் எல்லோருக்குமான தூக்குத் தண்டனையை ரத்து செய்து நால்வருக்கு மட்டும் உறுதி செய்தபின்தான் விகடனின் அணுகுமுறையில் படிப்படியாக மாற்றம் ஏற்பட்டது. இன்று பேரறிவாளனின் தாயாரை “அற்புதத்தம்மாள்” என்று மரியாதையுடன் விளிக்கும் அளவுக்கு அந்த மாற்றம் வந்திருக்கிறது. (ஆனாலும் அவரைவிட வயதில் மூத்த கருணாநிதியின் மனைவி விகடனுக்கு இன்னும் ‘தயாளு’தான். பார்க்க: படத்தில் இருக்கும் அட்டைப்பட தலைப்பு).
எனவே, அந்தப் பெருமைமிகு பாரம்பர்யத்தின் நீட்சியாகவும் விகடன் நிறுவனம் உடனடியாக 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து புத்தகமாக வெளியிடுவதே தவறிய வாய்மையை ஓரளவேனும் மீட்கவும் வர்த்தக ரீதியிலும் புத்திசாலித்தனமான முடிவு.
விரைவில் வரவிருக்கும் சென்னை புத்தகக் காட்சிக்குள் அதைச் செய்வீர்களா?
இப்படிக்கு உள்ளமெல்லாம் உங்கள் நலனே கோரும் உங்கள் நண்பன்,
தனியன்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக