சனி, 16 டிசம்பர், 2017

ஆர் கே நகர் இன்றைய களநிலவரம் ... நேரடி ஆய்வு !

Sowmian Vaidyanathan : ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் கள நிலவரம் பற்றி பல்வேறு கருத்துக் கணிப்புகள் / திணிப்புகள் மூலமாகவும், ஊடகச் செய்திகள் வழியாகவும், களத்தில் இருக்கின்ற தோழர்கள் மூலமாகவும் கலவையான செய்திகள் வருகின்றன.
தினகரன் தரப்பிலிருந்து கொடுப்பதாகச் சொல்லப்படும் அளப்பறிய பொருளாதார அன்பளிப்புகள் என்பது, நேரடியாக வாக்காளர்களுக்கு இவ்வளவு தொகை என்பதையெல்லாம் கடந்து, கடந்த முறை கொடுக்கப்பட்ட 4000 ரூபாயிலிருந்து அது ஒரு முன்பணமாக கணக்கில் வைத்துக்கொள்ளுமளவிற்கு வாக்காளர்களின் மனநிலை பக்குவப்படுத்தப்பட்டு...
அதன் தொடர்ச்சியாக ஒரு பூத்துக்கு குறைந்த பட்சம் 200 வாக்காளர்களுக்கு தினப்படியாக பிரச்சார ஊதியம் என்ற அடிப்படையில் கணிசமான வருமானத்திற்கு வழி ஏற்படுத்தியும்... இன்னபிற வழிமுறைகளிலும் கூட நேர்த்தியாக வாக்காளர்களுக்கு அன்பளிக்கப்பட்டு (!?) குக்கருக்குள் வேக வைக்கப்படுகின்றனர்...!
இதைக் கண்டு மிரண்டு போயிருக்கும் ஆளுந்தரப்பு இலை மட்டும் வேலைக்குதவாது என்பதைப் புரிந்து கொண்டு..., நான்காயிரம் என்ற நம்பரை உடைத்து வெற்றி காண... அதை விட பெரிய நம்பரான ஐந்தாராயிரம் மந்திரத்தை ஜெபிக்கப்போவதாக தொகுதி முழுக்க செய்திகள் பரவி... மந்திரத்தில் மாக்களை... மன்னிக்கவும்... மக்களை பழுக்கவைக்க ஆரம்பித்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

இந்நிலையில்.. தமிழக மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது இருக்கும் வரலாறு காணாத வெறுப்புணர்ச்சி.., ஆட்சி என்ற ஒன்றே இல்லாத நிலை, வராலாறு காணாத ஊழல், பொறுப்பற்ற அரசு நிர்வாகம், சசிகலா அண்ட் கோவின் இமாலய ஊழல் மற்றும் சொத்துக்குவிப்புக்கள்... இப்படியாக எதிர்த்தரப்பு இரண்டுமே மக்களின் அதீத வெறுப்பினை சம்பாதித்தும்..., அதே சமயம் திமுகவின் செயல் தலைவருடைய அதீத உழைப்பும், நேர்மையும், சுறுசுறுப்பும், கரை படியாத கரங்களும், மக்களோடு மக்களாகவே இணைந்து பணியாற்றும் பாங்கும், மக்கள் நல பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து போராடுகின்ற வே....
என்ற பலமான பாஸிடிவ் காரணிகளோடு மிகுந்த நம்பிக்கையுடன் களத்தில் இறங்கிய திமுகவினர்....
இந்த பதிவின் ஆரம்பத்தில் சொல்லியுள்ளது போல ஆளுந்தரப்பு மற்றும் அதன் பங்காளி தரப்பின் அதிரி புதிரியான வாக்காளர் கவனிப்பு செயல்பாடுகளில் மெர்ஸலாகிப் போனாலும்...
அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காமல், பூத் வாரியாக பெரிய கமிட்டி அமைத்து அதில் 200 வாக்காளருக்கு ஒரு ஒன்றிய/நகர கழக செயலாளரையோ அல்லது ஒரு எம் எல் ஏவையோ பொறுப்பாளராக்கி... ஒவ்வொரு வாக்காளரையும் கடந்த பத்து தினங்களாக தனித்தனியாக சந்தித்து திமுகவுக்கு ஆதரவான பிரச்சாரங்களை மிகத் துள்ளியமாக முன்னெடுத்தாலும்...
அவ்வாக்காளர்கள், நோட்டிஸ் எல்லாம் கொடுக்குறீங்க சரி... நல்லா பேசுறீங்க... அதெல்லாம் உண்மையுங் கூட... ஆனா நோட்டை எப்ப கண்ணுல காட்டுவீங்க?! என்று கண்ணைச் சிமிட்ட... இவர்களோ ஆடிப்போய் செய்வதறியாமல் தங்களுக்கு மேலே உள்ள பொறுப்பாளர்களிடம் புலம்புவதும், சிலர் முகநூலிலேயே கூட பதிவு செய்வதுமாக இருக்கின்றனர்.
இது தான் கள யதார்த்தம். இதை திமுக எப்படி எதிர்கொள்ளவது? இது என்ன தீர்க்கப்பட முடியாத அல்லது வெற்றி கொள்ள முடியாத பிரச்சினையா என்ன?!
நிச்சயமாக அப்படியெல்லாம் எதுவுமில்லை..!
ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன்.... நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் ஒரு மூவாயிரம் ஓட்டுக்கள் அங்கே வாங்குவார் தானே?! அதேப் போன்று பாஜகவின் கரு. நாகரஜன் கூட ஒரு இரண்டாயிரம் ஓட்டு வாங்குவார் தானே?! அதெல்லாம் போகட்டும்.., நோட்டா கூட சீமான் கட்சிக்கு இணையாக சில ஆயிரம் ஓட்டுக்களை வாங்கும் தானே..?!
இவை அனைத்தையுமே கூட்டினால் ஏழாயிரத்திலிருந்து பத்தாயிரம் வாக்குகள் விழும் என்றால்.... இந்த வாக்காளர்களுக்கு அந்த மேல் சொன்ன புண்ணியவான்கள் படியளக்காமலா இருந்திருப்பார்கள்?! அவர்கள் பண மழை அனைவருக்கும் பொதுவானதாகத்தானே பெய்கிறது?!
அதையும் மீறித்தானே... இந்த பத்தாயிரம் வாக்காளர்களும் தான் சார்ந்த ஒரு கட்சிக்காகவோ, தலைவனுக்காகவோ, கொள்கைக்காகவோ அல்லது யார் மீதும் நம்பிக்கையற்ற வெறுப்பின் காரணமாகவோ.... இந்த பண மழைக்கெல்லாம் நனைந்து கொடுக்காமல் உறுதியோடு வாக்களிக்கவிருக்கின்றார்கள்..?!
அதேப் போன்று தானே, திமுகழக கொள்கைகளின் பாற் ஈர்க்கப்பட்டவர்களும், தலைவர் கலைஞரின் தொண்டர்களும், கட்சி உறுப்பினர்களும், ஆட்சியாளர்கள் மீது உள்ள அதிருப்தியால் இனி திமுக மட்டுமே தமிழகத்தை காக்க இயலும் என்று நம்புகின்ற உண்மையான நடுநிலையாளர்களும், புதிதாக வந்து சேர்ந்துள்ள கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களும், ஆதரவாளர்களும்... இவை அனைத்திற்கும் மேலாக... உண்மையான நடுநிலையாளர்களாகவும், நாட்டின் வளர்ச்சி மற்றும் அமைதியின் மீது நேர்மையான விருப்பம் கொண்டோரும் இனி இந்த தமிழகத்தை காக்க திமுகவின் செயல்தலைவர் திரு. ஸ்டாலின் அவர்களை விட்டால் வேறு நாதியே இல்லை... ஆகையால் அவர் கரங்களை வலுப்படுத்த கிடைத்த வாய்ப்பினை நழுவ விடக் கூடாது என்று நம்புகின்றவர்களும்....
மேற் சொன்ன அந்த புண்ணியவான்களின் பண மழைக்கு நனைந்து விடுவார்களா என்ன?!
சில திமுக தோழர்கள் சொல்லுவது போல, நாமும் கொஞ்சமாச்சும் பணம் கொடுத்தால் வென்றுவிடலாம் என்பதை ஏற்றுக்கொண்டு ஐயாயிரம், பத்தாயிரம் அவர்களைப் போன்று கொடுக்க முடியாவிட்டாலும், குறிப்பிட்ட சிலருக்கு ஆயிரம் ரெண்டாயிரம் கொடுத்தால்.....
பணத்துக்காகத்தான் வாக்களிப்பேன் என்று உறுதியாக இருப்பவர்கள்... தன்னை யார் அதிக விலைக்கு ஏலம் எடுத்து அடிமையாக்கிக் கொள்கின்றானோ அவனுக்குத்தானே வாக்களிப்பார்கள். பணத்திற்கு விலை போகின்ற அடிமைகளிடம் நாம் நேர்மையை எதிர்பார்க்க முடியுமா என்ன?!
ஒரே ஒரு முறை இந்த கேவலமான யுக்தியை திருமங்கலத்தில் கையாண்டு, அதனால் அந்த ஒரே ஒரு இடைத்தேர்தல் வெற்றி என்பதைத் தவிர வேறு எந்த பலனையும் அனுபவிக்காமல், இன்று வரையிலும் மக்களிடம்.... நேர்மையான, பொதுவான, நடுநிலையான மக்களிடம் நம்பிக்கையை ஈட்டமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் திமுக இப்பொழுது அந்த பாவக்கரையை கழுவிக்கொண்டு, நேர்மையான, நடுநிலை வாக்காளர்களின் வாக்குகளை மீண்டும் நிரந்தரமாகப் பெறுவதற்கான வாய்ப்பாகவே இத்தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
திமுகவின் செயல் தலைவரும் இதையேத்தான் விரும்புகிறார். அவர் இதுவரையிலும் கரை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரரான அரசியல் வாதியாகவும், நேர்மையான, நாகரீகமான அரசியவாதியாகவும் தான் மக்கள் தன்னைப் பற்றி உணரும் அளவிற்கு செயல்பட்டு வந்திருக்கின்றார். அவரது இந்த மாதிரியான செயல்பாடுகள் தான் கட்சிகளைக் கடந்து பொதுவான மக்களின் வாக்குகளை அவருக்கு பெற்றுத்தருகிறது... பெற்றுத்தரவிருக்கிறது..!
அவரும் இந்த இடைத்தேர்தலின் வெற்றி தோல்வியை தனக்கானதாகவோ அல்லது திமுகழகத்திற்கானதாகவோ ஏற்றுக்கொள்ளாமல் அது மக்களுக்கான வெற்றி தோல்வியாக பார்ப்பதாகவே தான் தோன்றுகிறது. இது தவறென்றால் இந்நேரம் திமுகவும் எவ்வளவு பணம் கொடுக்கின்றது என்ற பட்டியல் ஊடகங்களில் வந்திருக்கும்...!
ஓக்கே... அதெல்லாம் சரி.... பணம் கொடுக்காமல் திமுகவால் இந்த இடைத்தேர்தலில் வெல்லவே முடியாதா என்றால்... அதற்கான பதில்... நிச்சயமாக முடியும் என்பதே...!
தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் வரும் 17ஆம் தேதி தேர்தல் களத்திற்கு வருகின்றார். அவரை அங்கு செயல்படுகின்ற திமுக பொறுப்பாளர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவர் தான் திமுகவின் துறுப்புச் சீட்டு. அவர் தான் திமுக போராளிகளின் வெற்றி ஆயுதம்..!
தளபதியார் வரும் பொழுது, அந்தந்த பகுதிக்கு பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களிலிருந்து தருவித்த தங்களது ரத, கஜ, துரத பதாதிகளை அங்கே நிறுத்தி, பல்வேறு வாண வேடிக்கைகள், கரகாட்டம், ஒயிலாட்டம் எல்லாம் போட்டு அவரிடம் நல்ல பெயரை மட்டும் வாங்கினால் போதும் என்று எண்ணி செயல்படாமல்...
தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதியைச் சார்ந்த வாக்காளர்கள் அனைவரையும்.... அது சாத்தியமில்லாமல் போனாலும் அந்த அனைத்து வாக்காளர்களின் குடும்பத்திலிருந்து ஒருவரையாவது அழைத்து வந்து அவர்கள் தளபதியாரைப் பார்ப்பதும் அல்லது அவரோடு கை குலுக்க வைப்பது, அவரது உரையினைக் கேட்க வைப்பதுமாக.... தளபதியாருக்கும் அம்மக்களுக்குமான தொடர்பினை உறுதி செய்தாலே போதுமானது...!
வெற்றி நிச்சயம்...!
தினகரனின் தனம் செய்யாததை...
தளபதியின் முகம் செய்யும்...!
அதையும் மீறி பண பலம் தான் வெல்லும் என்றால்...
வீழ்ந்தாலும் வாலி வீரனன்றோ... வென்றாலும் சுக்ரீவன் கோழை தானே...?!
தலைவர் சொல்லித்தந்திருக்கிறார் நமக்கு..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக