புதன், 20 டிசம்பர், 2017

கன்னட மொழி பேசாத இளைஞர்கள் மீது தாக்குதல் பெங்களூரில் காஷ்மீரை சேர்ந்த ,...

மாலைமலர் :கன்னட மொழி பேசாததால் காஷ்மீரைச்சேர்ந்த மாணவர் மற்றும் அவரது சகோதரர் மீது பெங்களூருவில் ஒரு கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   காஷ்மீரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்த மாணவர் தனது சகோதரருடன் காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்துள்ளார். அதிகாலை வேளை என்பதால் ஆள் நடமாட்டமும் குறைவாக இருந்துள்ளது. காரில் சென்று கொண்டிருந்த போது தொலைபேசி அழைப்பு வந்ததால், காரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு, காஷ்மீர் மாணவரின் சகோதரர் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் , கன்னட மொழியில் பேச்சு கொடுத்துள்ளனர். ஆனால், தங்களுக்கு கன்னட மொழி தெரியாது என்று இருவரும் தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த கர்நாடகத்தை சேர்ந்த இருவரும் மேலும் சிலரையும் அழைத்து, இரு காஷ்மீர் இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அவர்களின் காரையும் சேதப்படுத்தியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த காஷ்மீர் இளைஞர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த வாரமே இந்த சம்பவம் நடைபெற்றுள்ள போதிலும், நேற்றுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  காஷ்மீர் இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நிகழ்த்திய மகேஷ், ஹரீஷ் என்ற இருவரை நாங்கள் கைது செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ள போலீஸ் அதிகாரி சேதன் சிங் ரதோர், கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார். காஷ்மீர் இளைஞர்களை தாக்கிய மகேஷ் என்பவர் பேஷன் டிசைனராகவும் ஹரிஷ் என்பவர் ஓட்டுநராகவும் பணி புரிந்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக