வியாழன், 28 டிசம்பர், 2017

தேயிலை பணியாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கை

ஊதிய உயர்வு கோரும் தேயிலைப் பணியாளர்கள்!
மின்னம்பலம் ": மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத்தில் உள்ள 11.1 லட்சம் தேயிலைத் தோட்டப் பணியாளர்களின் ஊதியங்களை உயர்த்தக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கணக்குப்படி மேற்கு வங்கத்திலுள்ள 4,30,000 தேயிலைத் தோட்டப் பணியாளர்களும், அசாமில் 6,80,000 தேயிலைத் தோட்டப் பணியாளர்களும் உள்ளனர். 2015ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி இப்பணியாளர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால் 2 ஆண்டுகள் கடந்தும் இன்னும் செய்யப்படவில்லை. 1951ஆம் ஆண்டு தோட்டப் பணியாளர் சட்டத்தின் அடிப்படையில் ஊதிய மாற்றம் உள்ளிட்ட தேயிலைத் தோட்டப் பணியாளர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படுகிறது.
தேயிலை உற்பத்தியைப் பொறுத்தவரையில் தொழிலாளர் செலவுகள் 60 சதவிகிதமாக உள்ளது. ஊதியத்தில் 10 ரூபாய் உயர்த்தினால் உற்பத்திச் செலவு ரூ.6 உயரும் என்றும், இதனால் நிறுவனங்கள் நேரடியாகப் பாதிக்கப்படும் என்றும் ரோசெல் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.எஸ்.பேடி பிசினஸ் ஸ்டேண்டர்டு ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
ரயில்வே மற்றும் ராணுவத்திற்கு அடுத்தபடியாக நாட்டின் மூன்றாவது பெரிய வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக தேயிலை துறை விளங்குகிறது. இத்துறையைப் பொறுத்தவரையில் 12 லட்சம் பேர் நேரடியாகவும், 30 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.
அனைத்திந்திய தேயிலை கூட்டமைப்பின் தலைவர் அசாம் மோனெம் பிசினஸ் ஸ்டேண்டர்டு ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ”மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் உள்ள தேயிலை உற்பத்தியாளர்கள் தற்போது ஊழியர்களுக்கு ரூ.138 என்றளவில் வழங்கி வருகின்றனர். ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டுமென்றும், அதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டுமென்றும் மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.
தேயிலை உற்பத்தி அதிகரித்திருந்தாலும், பணியாளர்களுக்கு இதுவரையில் ஊதியம் உயர்த்தப்படவில்லை. 2015ஆம் ஆண்டு ஊதிய மாற்றத்திற்கான பரிந்துரை கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில தேயிலை தோட்டப் பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக