புதன், 13 டிசம்பர், 2017

மக்களின் டெபாசிட்கள் இனி வங்கிகள் உடமை? திவாலாகும் வங்கிகளை காப்பாற்ற மக்களின் பணம்?

மின்னம்பலம் :நிதி தீர்வு மற்றும் சேமிப்புக் காப்பீடு மசோதா வரும் நாடாளுமன்றக் குளிர்காலத் தொடரில் நிறைவேற்றப்படவுள்ளது. இதனால், மக்கள் வங்கிகளில் சேமித்துள்ள பணத்தை எடுத்து, வாராக்கடனால் திவாலாகும் வங்கிகளை மீட்கும் மாற்று நடவடிக்கையில் மத்திய பாஜக அரசு இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் பெரும் முதலாளிகளோ, கோடீஸ்வரர்களோ கிடையாது. மாறாக, கிராமத்து மக்கள், கூலித் தொழிலாளர்கள், வியாபாரிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள்தான் வங்கிகளை நாடுகின்றனர். கல்வி, திருமணம், வீடு வாங்குவது போன்ற கனவுகள் இதன் பின்னிருக்கின்றன.
அப்படிப்பட்ட இந்திய மக்களுக்குச் சோதனைகாலம் வந்துள்ளது என்கிறார் ஓய்வுபெற்ற அரசு மருத்துவமனை ஊழியர் அய்யாசாமி.
“1969ஆம் ஆண்டில் ரூ.50 கோடிக்கும் மேலான உள்ள 16 தனியார் வங்கிகளை அரசுடைமையாக்கினார் இந்திரா காந்தி. 1980ஆம் ஆண்டு ரூ.100 கோடிகள் உள்ள 17 +3 தனியார் வங்கிகளை அரசுடைமையாக்கினார், படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் கொடுத்தார். ஆனால், செழுமையாகத் தழைத்து வளர்ச்சியடைந்த தேசிய வங்கிகளைத்தான், தற்போது தனியார்மயமாக்கத் துடிக்கிறது மோடி தலைமையிலான பாஜக ஆட்சி” என்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏவான விஜயதரணி.

“வங்கிகளுக்கு மறுமூலதனமாக ரூ.2.5 லட்சம் கோடி கொடுக்கப்போவதாக முழக்கமிட்டவர்கள், டெபாசிட் செய்தவர்களுக்கு வட்டியைக் குறைத்தார்கள்; பணப் பரிமாற்றத்துக்குக் கட்டணத்தை அதிகப்படுத்தினார்கள்; கடனைச் செலுத்தாதவர்களின் சொத்துகளை விற்பனை செய்து மீட்போம் என்றவர்கள், வெறும் 20% கடனை வசூலித்ததாகச் சொல்கிறார்கள். பெருமுதலாளிகளிடம் கொடுத்தக் கடனை வசூலிக்க முடியாதவர்கள், மக்கள் டெபாசிட் செய்த பணத்தை எடுத்து திவாலாகும் வங்கிகளைப் பாதுகாக்கப் போவது என்ன நியாயம்?” என்று ஆவேசப்படுகிறார் கடலூர் பிரகாசம்.
பொதுமக்களின் மனக்குமுறல் பற்றி, ஓய்வுபெற்ற இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கோவிந்தராஜிடம் கேட்டோம்.

“மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் மக்களின் சேமிப்பு அதிகம். வங்கிகளில் ஊழல் மிக மிகக் குறைவு. இந்தியா முழுவதும் 1 லட்சத்து 2 ஆயிரம் வங்கி கிளைகள் உள்ளன. சுமார் 11 லட்சத்து 75 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். புதிய சட்டம் அமலுக்கு வந்தால் இவர்களின் ஊதியம் குறையும்; வேலைவாய்ப்புகளும் குறையும்” என்றார்.
“நாடு முழுவதும் மக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள பணம் மட்டும் சுமார் ரூ100 லட்சம் கோடி இருக்கும்” என்று சிரித்தவர், ”பெருமுதலாளிகள் தேசிய வங்கிகளில் வைத்திருக்கும் வாராக்கடன் சுமார் ரூ 8 லட்சம் கோடி. எனவே, கடன் கொடுத்த வங்கிகள் நலிந்துவிடாமல் பாதுகாக்கத்தான் மத்திய அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வருகிறது. பாரத ஸ்டேட் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகள் இந்த வாராக்கடன் பிரச்னையில் சிக்கியிருக்கின்றன” என்றார் கோவிந்தராஜ்.
இதனால் தேவைப்படும் நேரத்தில் சேமிப்புக் கணக்குகளில் இருக்கும் பணத்தை எடுக்க முடியாத சூழல் உருவாகும் என்கிறார் இவர். “நிதி தீர்வு மற்றும் சேமிப்புக் காப்பீடு சட்டம் நடைமுறைக்கு வந்தால், பணமதிப்பழிப்பு சட்டத்தை கொண்டுவந்தபோது நடந்ததுபோல, மக்கள் டெபாசிட் செய்த பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு வரிசைகட்டி நிற்பார்கள். டெபாசிட் செய்த பணத்தை வங்கிகள் திருப்பிக்கொடுத்தால், தேசிய வங்கிகள் தள்ளாட்டம் போடும். கடன் வாங்கிய பெருமுதலாளிகளுக்கு, கடனைத் திரும்ப செலுத்தும் எண்ணங்கள் வராது!
அமெரிக்காவில் தனியார் வங்கிகள் திவாலானபோது, அரசு அவற்றில் முதலீடு செய்து காப்பாற்றியது. ஆனால், இந்தியாவில் அரசு சார்ந்த வங்கிகள் 75% உள்ளது. இந்தச் சட்டம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆபத்தான சட்டம்” என்றார் கோவிந்தராஜ்.
முன்னொரு காலத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தற்போது மீண்டும் பழைய பாதைக்குத் திரும்புகின்றன. மக்கள் டெபாசிட் இழப்பது, ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக