வியாழன், 28 டிசம்பர், 2017

சசிகலா அடுத்த மாதம் முழுவதும் மௌன விரதம் ?

டிஜிட்டல் திண்ணை!

மின்னம்பலம் : “சின்ன ப்ளாஷ்பேக்...கடந்த நவம்பர் 29ஆம் தேதி சசிகலாவை சந்திக்க பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றார் தினகரன். அப்போது சிறைக்குள் நடந்தவற்றை நாம் டிஜிட்டல் திண்ணையில் சொல்லி இருந்தோம். அதில் ஒரு பகுதி மட்டும் நினைவூட்டலுக்காக...
‘இரட்டை இலையை எதிர்த்து நீ தேர்தலில் நின்றால் அது அக்காவை எதிர்த்து நிற்கிற மாதிரி. அதனால்தான் நான் வேண்டாம்னு சொல்றேன். நாம ஜெயிச்சாலும் இரட்டைஇலை தோற்பதுபோல ஆகிவிடும். இதுக்காகவா அக்கா பாடுபட்டாங்க?அது அவங்க நின்ற தொகுதி. அங்கே அவங்க போட்டியிட்ட இரட்டை இலை தோற்கக் கூடாது என்பதால்தான் சொல்றேன். அடுத்த தேர்தல் வரும்போது பார்த்துக்கலாம்... நீ அமைதியாக இரு!’ என்று சொல்லி இருக்கிறார் சசிகலா.
அதற்கு, ’ அடுத்த எலெக்ஷன் வரும்போது பார்த்துக்கலாம்னு விட்டுட்டா அதுக்குப் பிறகு கட்சி இருக்காது. தேர்தலில் போட்டியிடப் போறோம்னு சொல்லிட்டு இப்போ நாம பின் வாங்குறது சரியா இருக்காது. நீங்க சொல்ற மாதிரி இரட்டைஇலையை மீட்க வேண்டும் என்றாலும் அதுக்கு நாம நம்ம பவரை காட்டித்தான் ஆகணும். அதுக்கு தேர்தல்தான் ஒரே வழி...’ என தினகரன் சொன்னாராம். ஆனால், சசிகலாவும், இளவரசியும் சமாதானம் ஆகவே இல்லையாம்.

புகழேந்தியும் சசிகலாவை சமாதானப்படுத்தும் விதமாக சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். கடைசியில் தெளிவான ஒரு முடிவுக்கு வராமல்தான் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார்கள்.
- இதுதான் நாம் அப்போது சொன்ன தகவல்.
அதன் பிறகுதான், ஆர்.கே.நகரில் போட்டியிட்டார் தினகரன். வெற்றியும் பெற்றார். இன்று சிறையில் சசிகலாவைச் சந்திக்கப் போனார். சந்தித்துவிட்டு வெளியே வந்தவர், ‘சின்னம்மாவைச் சந்தித்தேன். தேர்தலில் வெற்றி பெற்றதை அவரிடம் சொன்னேன். அவர் மௌன விரதத்தில் இருப்பதால் பேசவில்லை. அடுத்த மாதம் முழுவதும் அவர் மௌன விரதத்தில் இருக்கப் போகிறார் ‘ என்று மட்டும் சசிகலா தொடர்பாகப் பேசினார்.
உள்ளே என்ன நடந்தது, சசிகலா திடீரென மாதக்கணக்கில் மௌன விரதம் இருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது, அப்படி என்ன வேண்டுதல்… இப்படிப் பல கேள்விகளுக்கு பதில் கேட்டு விசாரித்தோம்.
‘தினகரன் இன்று சின்னம்மாவை பார்க்கச் சிறைக்குள் போனார். தினகரன் மீது சின்னம்மா கடுமையான கோபத்தில் இருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே இரட்டை இலைச் சின்னத்தை எதிர்த்துப் போட்டியிடுவதில் அவருக்கு உடன்பாடு இல்லை. அதை தினகரனையே அழைத்து நேரடியாக சொன்னார். ஆனாலும் தினகரன் கேட்கவில்லை. தேர்தலுக்கு முதல் நாள், அவர் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அம்மா மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை, வெற்றிவேல் மூலமாக மீடியாவுக்கு கொடுத்ததை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.
‘இதுக்காகவா நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன்... எல்லாத்தையும் தினகரன் உடைச்சுட்டான்...’ என சிறையில் புலம்பியபடியேதான் இருந்தார். ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்ற தகவல் அவருக்கு தெரிந்தபோதுகூட, அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை. ‘இது அவனுக்கு கிடைச்ச ஓட்டு இல்லை. அம்மா வீடியோவுக்கு கிடைத்த ஓட்டு. அம்மாவை வெச்சு ஆர்.கே.நகரில் வியாபாரம் பண்ணிட்டான்...’ என்று கோபத்தில் சொல்லிக்கொண்டிருந்தார்.
இன்று தினகரன் ஜெயிலுக்கு வந்து சசிகலாவை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தும், சசிகலா ஒரு வார்த்தைகூடப் பேசவே இல்லை. பார்வையாளர்கள் அமரும் வரவேற்பு அறைக்குச் சென்று சசிகலா, இளவரசி இருவரும் காத்திருந்தார்களாம். தினகரன் உள்ளே வந்து இருவருக்கும் வணக்கம் சொல்லியிருக்கிறார். இருவரிடமிருந்தும் எந்த ரியாக்ஷனும் வரவில்லையாம்.
தினகரன் எவ்வளவோ தன்னிலை விளக்கம் கொடுத்துப் பார்த்திருக்கிறார். சசிகலா வாய் திறக்கவே இல்லையாம். கடைசியில் கிளம்பும்போது, ‘இது உங்களோட வெற்றி. உங்களால் கிடைத்த வெற்றி’ என சசிகலாவைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார். சசிகலா முகத்தில் அப்படி ஒரு கோபம் தெறித்திருக்கிறது. ஆனாலும் சசிகலா பதில் எதுவும் சொல்லாமல் விறுவிறுவென வெளியேறிவிட்டாராம். கடைசிவரை சசிகலா தினகரனுடன் பேசவே இல்லையாம்.
அதனால்தான் என்ன சொல்வதென யோசித்த தினகரன், வெளியே வந்ததும் மீடியாவிடம், சசிகலா மௌன விரதம் என்று மட்டும் சொல்லியிருக்கிறார்...’ என்று சொன்னார்கள் விவரமறிந்தவர்கள் ” என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக