வியாழன், 14 டிசம்பர், 2017

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி கொலைகாரர்கள் ராஜஸ்தானில் பிடிபட்டனர்?

மின்னம்பலம்: ராஜஸ்தானில் நகைக்கடை கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொல்லப்பட்டார். இதில் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 16ஆம் தேதி சென்னை கொளத்தூர் மகாலட்சுமி தங்க மாளிகையில் மூன்று கிலோ தங்கம், நான்கு கிலோ வெள்ளி மற்றும் ரூபாய் இரண்டு லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சிசிடிவி கேமராவில் கிடைத்த அடையாளங்களின் அடிப்படையில் கொள்ளையர்களைத் தேடும்பணி தொடங்கியது. இந்த வழக்கில் கேளாராம், தன்வர்ஜி, சங்கர்லால் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, கடந்த மாதம் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நால்வரின் வாக்குமூலத்தை வைத்து முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய, மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் உட்பட எட்டு பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. டிசம்பர் 8ஆம் தேதி, கொள்ளையர்களைப் பிடிப்பதற்காகத் தனிப்படை ராஜஸ்தான் சென்றது.

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ஜெய்த்ரான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்புர்கலான் என்ற கிராமத்தில் கொள்ளையர்கள் நாதுராம் மற்றும் தினேஷ் சவுத்ரி ஆகியோர் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, நேற்று (டிசம்பர் 13) அதிகாலை தனிப்படை அங்கு சென்றது. அப்போது ஏற்பட்ட மோதலில் பெரிய பாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தத் தகவல் கேள்விப்பட்டதும், இறந்தவர் குடும்பத்துக்கு ரூபாய் ஒரு கோடி நிதியும், அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்று தமிழகக் காவலர்கள் வாட்ஸ்அப் மூலமாக முதல்வருக்குக் கோரிக்கை வைத்திருந்தனர். இதை நேற்று மதியம் மின்னம்பலத்தில் வெளியான செய்தியில், தமிழகக் காவல் ஆய்வாளர் சுட்டுக்கொலை என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.
அதற்கேற்றவாறு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மரணமடைந்த பெரிய பாண்டியன் குடும்பத்துக்கு ஒரு கோடி நிதி வழங்கப்படுமென அறிவித்திருக்கிறார். அதோடு, அவரது மகன்கள் ரூபன், ராகுல் படிப்பு செலவுகளைத் தமிழக அரசு ஏற்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். காயம் அடைந்திருக்கும் ஆய்வாளர் முனிசேகர் மற்றும் மூன்று காவலர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய பாண்டியன் கொல்லப்பட்ட விவகாரத்தில், ராம்புர்கலானில் என்ன நடந்தது என்று விசாரித்தோம். “அதிகாலை 3 மணியளவில் வறட்சியான காட்டுப்பகுதியில் நாத்துராமை பிடித்து காரில் ஏற்றும்போது, பெரிய பாண்டியனிடம் இருந்த கைத்துப்பாக்கியைப் பிடுங்கி கொள்ளையர்கள் அவரையும் முனிசேகரையும் சுட்டுவிட்டுத் தப்பித்ததாகச் சொல்கிறார்கள்.

இன்ஸ்பெக்டர் பலி: பிடிபட்ட கொலையாளிகள்!தற்போது, நாத்தூராம் குடும்பத்தாரையும் அவரது கூட்டாளிகளையும் ஜெய்த்ரான் காவல் துறையினர் பிடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் டிஜிபி கல்ஹோத்ரா, குற்றவாளிகளைப் பிடிக்க முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகச் சொல்கின்றனர் தமிழகக் காவல் துறையினர்.

பொதுவாக, தமிழகக் காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடி வேறு மாநிலங்களுக்குப் போனால், அங்குள்ள போலீஸார் அதுபற்றி முன்கூட்டியே கொள்ளையர்களுக்குத் தகவல் கொடுத்துவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில், குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் சம்மன் கொடுக்கமுடியாமல் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்தச் சூழலில், இணை ஆணையர் சந்தோஷ்குமார் ஐபிஎஸ் போன்ற அம்மாநிலம் சார்ந்த உயர் அதிகாரிகள் தலைமையில் தனிப்படையை அனுப்பியிருந்தால், இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது” என்று சில தமிழகக் காவல் துறை அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக