புதன், 13 டிசம்பர், 2017

கௌசலயா சங்கர் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

தண்டனைப் பெற்ற பின்னர் வந்த குற்றவாளிகள்விகடன் தி.ஜெயப்பிரகாஷ் ரமேஷ் கந்தசாமி   : தமிழகத்தையே பதற்றத்தில் உலுக்கிய உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று திருப்பூர் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டு வந்த இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி அலமேலு நடராஜன், கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்ளிட்ட 6 பேருக்குத் தூக்குத் தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் மேலும் ஒருவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
தீர்ப்பு அறிவிப்பும்…. குற்றவாளிகளின் ரியாக்ஷனும்:
முன்னதாக காலை 11 மணியளவில் கூடிய நீதிமன்றத்தில் வழக்கத்துக்கும் மாறாக அதிகப்படியான கூட்டம் காணப்பட்டது. தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, கெளசல்யாவின் தாயார் அன்னலட்சுமியின் கண்களில் நீர் வர, லேசான சத்தத்துடன் அவர் அழத் தொடங்கினார். அடுத்த சில நிமிடங்களில் நீதிபதி அலமேலு நடராஜன், “குற்றவாளிகளை ஒவ்வொருவராக அழைத்து, நீங்கள் தண்டனை குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
முதலில் பதிலளித்த கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி, “இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை” என்றவாறு பதிலளித்தார். அப்போது பேசிய நீதிபதி, “உங்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது. எனவே சம்பந்தம் இல்லை என்றெல்லாம் சொல்ல வேண்டாம். தண்டனை தொடர்பாக மட்டும் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்” என்றார். அப்போது, “எனக்குப் பள்ளிக்குச் செல்லும் மகன் இருக்கிறான். அவனைப் படிக்க வைக்க வேண்டும். எனவே குறைந்தபட்ச தண்டனையை வழங்க வேண்டுகிறேன்” என்று முடித்துக்கொண்டார் சின்னச்சாமி. அடுத்ததாக வந்த ஜெகதீஷனும், இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்றுகூற, உடனே சற்று கடுகடுத்த நீதிபதி, “உங்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு, சம்பந்தமில்லை என்று கூறவேண்டாம்” என மீண்டும் அறிவுறுத்தினார். அதன்பிறகு ஜெகதீஷனும் தனக்குக் குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கூறிவிட்டு நகர்ந்தார். பின்னர் அடுத்தடுத்து வந்த அனைவரும் தங்களுக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார்கள். அதில் மதன் என்கிற மைக்கேல் மட்டும் நீங்கள் சொல்வதால், எனக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டுகிறேன் என்று நீதிபதியிடம் பதில் அளித்து குறிப்பிடத்தக்கது.

பின்னர் நீதிபதி, மதியம் 12:50 மணியளவில் வழக்கின் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்று கூறியதையடுத்து, சில மணி  நேரங்கள் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 1 மணிக்கு மேல் மீண்டும் நீதிமன்றம் கூடிய பின், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை வாசிக்கத் தொடங்கினார் நீதிபதி.
பதற்றமடைந்த வளாகம்:
தண்டனை விவரங்கள் அனைத்தும் அறிவிக்கப்பட்ட பிறகு, நீதிமன்ற வளாகப் பகுதியில் மாதர் சங்கத்தைச் சேர்ந்த அமிர்தம் என்பவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துக்கொண்டிருந்தார். தீர்ப்பை வரவேற்றுப் பேசிய அவரை, அங்கு நின்றுகொண்டிருந்த மதுபோதை ஆசாமி ஒருவர், “நீங்கள் என்ன சாதி ஒழிப்புப் போராளியா?” என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார். அப்போது சுற்றியிருந்தவர்கள் அவரை தாக்க, தள்ளுமுள்ளு ஏற்பட்டு அடுத்த சில நிமிடங்களுக்கு நீதிமன்ற வளாகம் பதற்றமுடன் காட்சியளித்தது.
அடி வாங்கும் குடிபோதை ஆசாமி
அதனைத்தொடர்ந்து அடுத்த சில நொடிகளில், அப்பகுதிக்கு ஸ்கார்பியோ காரில் வந்திறங்கிய அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகி கர்ணன், திடீரென தன் ஆள்களுடன் தீர்ப்பை எதிர்த்து ஆக்ரோஷமாக முழக்கமிடத் தொடங்கினார். உடனே சுதாரித்துக்கொண்டு ஓடிவந்த காவல்துறையினர், அவரை சமாதானப்படுத்தி அனுப்பிவைப்பதற்குள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ஆதித் தமிழர் பேரவை அமைப்பினர் உள்ளே புகுந்து நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகப் பேசிய கர்ணனை கைதுசெய்ய வேண்டும் என்று கூறி தங்கள் பங்குக்கு ஆக்ரோஷத்துடன் முழக்கமிட்டார்கள். பின்னர் அவர்களையும் சமாதானப்படுத்தினர் காவல்துறை அதிகாரிகள். பின்னர் நீதிமன்ற வளாகத்துக்குள் இருந்த பலரையும் வெளியேற்றிவிட்டு, வளாகத்தின் வாயிலை மூடினர்.
அதன்பிறகு நீதிமன்ற ஊழியர்கள், வக்கீல்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மட்டுமே நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். பின்னர் மாலை 7 மணிக்குப் பிறகு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கான தீர்ப்பு நகல்களை வழங்கியவுடன் அவர்கள் அனைவரும் கோவை மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக