புதன், 13 டிசம்பர், 2017

ஜல்லிகட்டுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!
மின்னம்பலம் :ஜல்லிக்கட்டுப் போட்டியை நிரந்தரமாக நடத்தும் தமிழக அரசின் சட்டத் திருத்தத்தை எதிர்த்து, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த வழக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும்பொருட்டு, தமிழக அரசு இந்திய மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்தது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்தார். இதனால், கடந்த சில ஆண்டுகளாகத் தடை செய்யப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை தொடர அனுமதி கிடைத்தது. இதேபோல, எருதுகளைக் கொண்டு நடத்தப்படும் கம்பளா விளையாட்டை தடையின்றி நடத்த, கர்நாடகாவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து, பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. நேற்று (டிசம்பர் 12) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் நாரிமன் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, ‘மத்திய அரசின் பொது சட்டங்களை மீறும் வகையில் மாநில அரசுகள் சட்டம் இயற்ற முடியுமா?’ என்று கேள்வி எழுப்பினர் நீதிபதிகள். இதனால், ஜல்லிக்கட்டு அனுமதியை எதிர்க்கும் மனுக்கள் மீதான விசாரணையை, டெல்லி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
ஆனால், ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்கும் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர். இன்னும் ஒரு மாத காலத்தில் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக