ஞாயிறு, 31 டிசம்பர், 2017

தயாரிப்பாளர்களுக்கு அடி கொடுத்த அஜித் - விஜய் படங்கள் !

அஜித் - விஜய் படங்கள் ஏற்படுத்திய நஷ்டம்!
மின்னம்பலம்: இராமானுஜம் தமிழ் சினிமா தயாரிப்பில் 201 படங்கள் 2017இல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவருக்கும் லாபத்தைக் கொடுத்த படங்கள் வழக்கம்போல இந்த வருடமும் குறைவு.
முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் தமிழ் சினிமாவின் வியாபாரத்துக்கு ஏற்ற பட்ஜெட்டில் தயாரிக்காமல் கூடுதல் செலவு செய்யப்பட்டுத் தயாரிப்பாளர்களையும், விநியோகஸ்தர்களையும் நஷ்டத்துக்கு ஆளாக்கியுள்ளன. அளவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு திரைக்கதை சொதப்பலாகி மக்களால் நிராகரிக்கப்பட்ட படங்களும் இதுபோன்ற நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்திகளாக இருப்பவர்கள் விஜய் - அஜித். இவர்களது படத்துக்கு ஓப்பனிங் இருக்கும். படம் வெளியான முதல் வார முடிவில் அசலில் 70 சதவிகிதத் தொகை தியேட்டர் வசூல் மூலம் கிடைத்துவிடும். இந்த வருடம் அஜித் நடிப்பில் ‘விவேகம்’, விஜய் நடிப்பில் ‘பைரவா’, ‘மெர்சல்’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது.
2017இல் வெளியான படங்களில் அதிகமாக நஷ்டம் ஏற்படுத்திய படங்களில் முதலிடம் அஜித் குமாருக்குக் கிடைத்துள்ளது. இவர் நடித்த படங்களின் புரமோஷனுக்கு வர மாட்டார். பத்திரிகையாளர்களைச் சந்திக்க மாட்டார். பேசிய சம்பளத்தை முழுமையாக செட்டில் செய்தால்தான் டப்பிங் பேச வரக்கூடியவர் அஜித் குமார்.

இவர் நாயகனாக நடித்து வெளியான விவேகம் திட்டமிட்ட பட்ஜெட்டை காட்டிலும் அதிக செலவானது. சுமார் 100 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட அந்தப் படம் 118 கோடி ரூபாய்க்கு வியாபாரமானது. தமிழகத்தில் அவுட் ரேட் முறையில் விவேகம் சுமார் 55 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. தியேட்டர் வசூல் மூலம் 30 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. மோசமான திரைக்கதை என்பதால் அஜித் ரசிகர்களால்கூட படம் நிராகரிக்கப்பட்டது. சுமார் 25 கோடி ரூபாய் வரை விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்திய படம் விவேகம்.
வசூலில் முதலிடத்தில் உள்ளவர் விஜய். தன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அழகிய தமிழ் மகன் படத் தோல்விக்குப் பின் பட வாய்ப்புகள் இன்றி இருந்த இயக்குநர் பரதனுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக அவரது இயக்கத்தில் பைரவா படத்தில் நடித்தார் விஜய்.
அஜித், தனுஷ் நடித்த படங்களைத் தயாரித்ததில் பெரும் நஷ்டத்தில் இருந்த விஜயா புரொடக்க்ஷன்ஸ் பைரவா படத்தைத் தயாரித்தது. கடந்த 2016இல் விஜய் நடித்து வெளியான ‘தெறி’ படம் வசூலில் சாதனை நிகழ்த்தியிருந்தது. அதனால் வழக்கத்தைவிடக் கூடுதல் விலைக்கு ‘பைரவா’ வியாபாரமானது. போட்டிக்கு எந்தப் படமும் இல்லாமல் ஜனவரி 12 அன்று வெளியான பைரவா, தெறி போன்று கல்லா கட்டவில்லை.
சுமாரான கலெக்ஷனை செய்த இந்தப் படத்தால் விநியோகஸ்தர்களுக்கு சுமார் 13 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவேகம், பைரவா படங்களால் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைத் தயாரிப்பாளரிடம் அல்லது நடிகரிடம் வசூலிப்பதா என்பதை திரைப்பட விநியோகஸ்தர் கூட்டமைப்பு விவாதித்து வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக