செவ்வாய், 19 டிசம்பர், 2017

அருவி படம் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு ... தனது பாலக்காடு அய்யங்கார் குடும்ப...

மின்னம்பலம் :மீண்டும் `அருவி’ படக்குழுவினரைத் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாகச் சாடியிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
‘பிராமணப் பெண்’- கையிலெடுத்த புதிய ஆயுதம்!`அருவி’ படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், `சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியைக் கிண்டல் செய்திருப்பதாக லட்சுமி ராமகிருஷ்ணன் தனது எதிர்ப்பைத் தொடர்ச்சியாகப் பல்வேறு கடுமையான ட்விட்டுக்களின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
“இயக்குநர், அவர் வேலை செய்த நிகழ்ச்சியில், சேனலில் இது போன்ற விஷயங்களைப் பார்த்திருக்கலாம். ஆனால் அந்த சேனலை கிண்டல் செய்ய அவருக்கு தைரியம் இல்லை. சொல்வதெல்லாம் உண்மை புகழடைவதற்கு எளிய வழியாக இருக்கிறது. இன்னொரு பெண்ணின் மீது தனிப்பட்ட மலிவான தாக்குதலை வைக்கும் பெண்ணியத் திரைப்படம்.

உயிருள்ள பெண்களையே அவர்கள் மதிப்பதில்லை. எங்கிருந்து மத உணர்வுகளை மதிக்கப் போகிறார்கள். தனிப்பட்ட முறையில் இன்னொரு பெண்ணைத் தாக்கி ஒரு பெண்ணியப் படத்தை எடுத்தது இந்தப் படத்தின் மலிவான, ஏமாற்றம் தரக்கூடிய அம்சம். இதில் இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், இன்னொரு பெண்ணை அவமதிக்கும், தவறாகப் பேசும் படத்தை ஊடகத்தில் முக்கியமானவர்கள் பாராட்டுவதுதான்.
ஸ்லம்டாக் படம் நினைவுள்ளதா?. அது ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. படத்தில் நடக்குமாறு நிஜத்தில் அமிதாப் பச்சன் அவரது போட்டியாளர்களை அப்படி நடத்துவார் என யாரும் நினைக்கவில்லை. ஆனால் இவரைப் போன்ற முட்டாள்கள், இயக்குநரின் கற்பனைதான் நிஜத்திலும் நடக்கிறது என நம்புகிறார்கள்.
படத்தை எடுத்தவர்களுக்கு தைரியம் இருந்தால் என்னை நேரடியாக, நேரலையில், கேமரா முன் என் கேள்விகளை எதிர்கொள்ளட்டும். படத்தின் விளம்பரத்துக்கும் நல்ல வாய்ப்பு. ஏதாவது ஒரு பிரபல சேனல் இதற்கு முன்வருமா? திரைத்துறை பொறுப்பானதாக இருக்க வேண்டும். உள்நோக்கம், சொந்த லாபத்துக்காக மலிவான கிண்டல், தனிப்பட்ட தாக்குதல் ஆகியவற்றை செய்யக் கூடாது. இது போன்ற முதிர்ச்சியற்றவர்கள்தான் நம் பார்வையாளர்கள்.
நிகழ்ச்சியின் வடிவம் பற்றி யாருக்காவது பிரச்சினை இருந்தால் அதைப் பற்றி விவாதிக்க வேண்டும். கடந்த 6 வருடங்களாக நான் நிகழ்ச்சிக்கு ஆற்றி வரும் பங்கைச் சிறுமைப்படுத்துதலோ, தாழ்த்திப் பேசுவதோ, அவதூறு கூறுவதோ இருக்கக் கூடாது. நான் சமூக சேவை செய்வதில்லை. ஆனால் எனது வேலையைச் சமூகப் பொறுப்போடு செய்துவருகிறேன். திரைத்துறை என்னை மீண்டும் மீண்டும் காயப்படுத்த முயற்சிக்கிறது.
பெண்கள் தங்களுக்காக மட்டுமல்லாமல் மற்ற பெண்களுக்காகவும் பேச வேண்டும். இயக்குநர்/நடிகரான ஒரு பெண்ணின், சமூகப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் ஒரு பெண்ணின் நற்பெயரைக் குறிவைத்துத் தாக்குவது மோசமானது.
ஒரு பெண்ணாகப் பிறந்து, வெளிப்படையாகவும் பேசி, ஊடகங்களிலும் ஏதோ ஓரளவுக்கு வெற்றிகரமாக இயங்குவதும்... அதிலும் முக்கியமாக, பிராமண சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண், பாலக்காடு ஐயரை மணந்து கொண்டு தமிழ்நாட்டில் செட்டிலாகி வாழ்வது எச்.ஐ.வி பாதிப்படைந்த பெண்ணின் வாழ்வைவிடச் சவாலானது. எச்.ஐ.வி பாதிப்படைந்த பெண்ணைப் பற்றி படம் எடுக்கும் நீங்கள் ஏன் இந்த மாதிரி பெண்ணைப் பற்றிப் படம் எடுக்கக் கூடாது?”


மேலே லட்சுமி ராமகிருஷ்ணன் எழுப்பிய கேள்விகளில் ‘பிராமண சமூகத்தைச் சேர்ந்த பெண்’ என்று பதிவு செய்திருந்த ட்விட்டை டெலிட் செய்துவிட்டார். காலை முதலாகவே அருவி திரைப்படத்துக்கு எதிரான இவரது கருத்துக்களை கவனித்து வந்தவர்களில் பலர், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களையும், பிராமண சமூகத்தைச் சார்ந்த பெண்ணையும் ஒப்பிட்டுப் பேசியதில் முரண்பட்டுப் பலவித கேள்விகளை எழுப்பியது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக