சனி, 23 டிசம்பர், 2017

கலைஞருக்கு தகத்தகாய சூரியன் கடிதம் ... கோபாலபுரத்தில் ராசா கனிமொழி ..


தினமலர் :சென்னை, '2ஜி' வழக்கிலிருந்து, விடுதலை செய்யப்பட்ட பின், முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, தி.மு.க., தலைவர், கருணாநிதிக்கு, நேற்று உருக்கமான கடிதம்
எழுதியுள்ளார்.
அவரது கடிதத்தின் விபரம்: நித்திரை நிலைகொள்ளாத, இந்த நடுநிசியில், டில்லி கடுங்குளிரில், உங்கள் வார்த்தைகளின் ஒலிக்காக, என் செவிகள் உண்ணா நோன்பிருக்கின்றன.
அலைவரிசை வணிகத்தில், சிலரின் மூலதன முதலீடுகள் முற்றிலுமாய், இன்று நஷ்டத்தில் முடிந்து விட்டன.
'2ஜி வழக்கு தீர்ப்புக்காக, நான் டில்லி செல்கிறேன்; வெற்றி பெற வாழ்த்துங்கள்' என, உங்கள் காதருகில் சொல்லி வணங்கினேன். உங்கள் உதடுகள், 'சரி' என,
உச்சரித்தபோது சப்தம் வரவில்லை. என்றாலும், உங்கள் வலது கரம் உயர்த்தி, புன்னகையோடு வாழ்த்தினீர்கள். உங்களின் வாழ்த்துக்கும், புன்னகைக்கும் முன், இந்த பிரபஞ்சம் சுருங்கி விட்டதாகவே எனக்கு பட்டது.

கொட்டுகிற மழையில், வீசுகிற புயலில், சரளைக் கற்கள் நிறைந்த, மலை உச்சியை நோக்கி, நடப்பதைப் போல, அரசு மற்றும் அரசமைப்பு நிறுவனங்கள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள் தாக்குதல்கள் தொடுத்தன. அவற்றை எதிர்கொண்டு நடத்திய, அலைவரிசை பயணத்தில், நான் கரைந்து விடாமலிருக்க, 'என்னை பனிக்குடத்தில் வைத்து, பத்திரப்படுத்திய தாய், நீங்கள்' என்ற நன்றியுணர்ச்சியோடு, உங்கள் காலடியில், இந்தத் தீர்ப்பை வைத்து வணங்குகிறேன்.
மீண்டும், உங்களின் வாசகங்கள், என்னை வந்து வருடுகின்றன; உண்மையை மறைப்பது, விதையை மண்ணுக்குள் புதைப்பதைப் போன்றது.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக