வியாழன், 14 டிசம்பர், 2017

நீதிபதி கருத்து .. உடுமலை ஆணவ கொலை'யில் அதிகபட்ச தண்டனை ஏன்?

தினமலர் :திருப்பூர் : உடுமலை சங்கர் கொலை வழக்கில், ஆறு பேருக்கு, இரட்டை துாக்கு உட்பட குற்றவாளி களுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதன் காரணம் குறித்து, தீர்ப்பில் விளக்கப்பட்டுள்ளது.<உடுமலை, 'கவுரவ கொலை'யில் அதிகபட்ச தண்டனை ஏன்? - தீர்ப்பில் நீதிபதி கருத்து முழு விபரம்" >உடுமலை சங்கர் கொலை வழக்கில், நேற்று முன்தினம், ஆறு பேருக்கு இரட்டை துாக்கு தண்டனை; ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை, மற்றொருவருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் சிறை விதிக்கப்பட்டது.
253 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், நீதிபதி, அலமேலு நடராஜன் கூறியிருப்பதாவது: குற்றம் சாட்டப்பட்டுள்ள, 11 பேரில், அன்ன லட்சுமி, பாண்டித்துரை மற்றும் பிரசன்னா மீதான குற்றச்சாட்டுகள், ஆதாரபூர்வமாக அரசு தரப்பில் நிரூபிக்கப்படவில்லை.
எனவே, குற்ற நடைமுறைச்சட்டம், 235 -1ன் படி, மூவரும் விடுவிக்கப்படுகின்றனர்.சின்னசாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய, ஆறு பேர் மீதான குற்றச்சாட்டு கள் முற்றிலும் நிரூபிக்கப் பட்டுள்ளன.இவர்கள் ஆறு பேருக்கும், கூட்டுச்சதி செய்து, கொலை செய்த குற்றத்துக்கு, துாக்கு தண்டனை மற்றும் அபராதம்; அபராதம் செலுத்த தவறினால், சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.


கொலைக் குற்றத்துக்கு, 10 ஆண்டு கடுங்காவல் மற்றும் அபராதம்; அபராதம் செலுத்த தவறினால், ஆறு மாதம் சிறை; கொலை முயற்சி குற்றத்துக்கு, மூன்றாண்டு கடுங்காவல் மற்றும் அபராதம். அதை செலுத்த தவறினால், ஆறு மாதம் சிறை; மேலும், எஸ்.சி., --- எஸ்.டி., பிரிவினர் மீதான வன்கொடுமை தடுப்பு பாதுகாப்பு சட்டத்தில், கொலைக் குற்றத்துக்கு துாக்கு தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படுகிறது.

இழப்பீடு

இவர்களில், முதல் குற்றவாளியான சின்னசாமிக்கு, இ.த.ச., 120, 'பி' பிரிவில், ஒரு லட்சம் ரூபாய்; 302 பிரிவில், 50 ஆயிரம் ரூபாய்; 307 பிரிவில், 50 ஆயிரம் ரூபாய்; வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், ஒரு லட்சம் ரூபாய் என, மொத்தம், மூன்று லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.


இதில், ஒரு லட்சம் ரூபாய் அரசுக்கும்; கவுசல்யா மற்றும் சங்கர் தந்தை வேலுசாமிக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். எஞ்சிய ஐந்து பேருக்கு, கூட்டு கொலை சதி குற்றத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய்; கொலை குற்றத்துக்கு, 50 ஆயிரம்; கொலை முயற்சி குற்றத்துக்கு, 25 ஆயிரம்; கூட்டாக வன்முறையில் ஈடுபட்டதற்காக, 10 ஆயிரம், ஆயுதங்களை பயன்படுத்தி, பொது இடத்தில் வன்முறையில் ஈடுபட்டதற்காக, 10 ஆயிரம்; வன்கொடுமை தடுப்பு பாதுகாப்பு சட்டத்தின் கீழான குற்றத்துக்கு, 10 ஆயிரம்ரூபாய் என, ஒவ்வொருவருக்கும் தலா, 1.65 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

இதில், 5,000 ரூபாய் அரசுக்கும்; எஞ்சிய தொகை, கவுசல்யா மற்றும் வேலுசாமிக்கும் சமமாக பிரித்து வழங்க வேண்டும்.வழக்கின் ஒன்பதாவது குற்றவாளியான தனராஜுக்கு, கூட்டு கொலை சதியில் ஈடுபட்ட குற்றம் மற்றும் கொலை குற்றங்களுக்கு, வாழ்நாள் முழுவதும், எந்த வொரு சிறப்பு சலுகையிலும் விடுவிக்கப்படாத வகையில், இரட்டை ஆயுள் சிறை தண்டனை மற்றும் இரு பிரிவுக்கும், தலா, 50 ஆயிரம் ரூபாய் அபராதம்.

கொலை முயற்சிக்கு இரண்டாண்டு சிறை மற்றும், 25 ஆயிரம் ரூபாய் அபராதம்; செலுத்த தவறினால், ஆறு மாதம் சிறை.வன்முறையில் ஈடுபட்டதற்கு ஐந்தாண்டு சிறை; 10 ஆயிரம் ரூபாய் அபராதம், செலுத்தா விட்டால், ஆறு மாதம் சிறை; பயங்கர ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபட்ட குற்றத்துக்கு, இரண்டாண்டு சிறை மற்றும், 10 ஆயிரம் அபராதம்; செலுத்தா விட்டால் ஆறு மாதம் சிறை.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழான குற்றத்துக்கு, இரண்டாண்டு சிறை மற்றும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம்; செலுத்த தவறினால், ஆறு மாதம் சிறை. மொத்த அபராத தொகை, 1.55 லட்சத்தில், 5 ஆயிரம் ரூபாய் அரசுக்கு; மீதம், கவுசல்யா மற்றும் வேலுசாமிக்கு வழங்க வேண்டும்.வழக்கில், 11வது குற்ற வாளியான மணிகண்டனுக்கு, குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த குற்றத்துக்காக, ஐந்தாண்டு கடுங்காவல் சிறை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம்; செலுத்த தவறினால், ஆறு மாதம் சிறை விதிக்கப்படுகிறது.

அபராதத்தில், 5,000 ரூபாய் அரசுக்கும்; மீதம்,கவுசல்யா மற்றும் வேலுசாமிக்கும் வழங்க வேண்டும். தண்டனை விதிக்கப்பட்டவர்கள், விசாரணை காலத்தில் சிறையில் இருந்த நாட்கள், தண்டனையில் கழித்து கொள்ளப்படும்.
வழக்கில், ஆறு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதால், இது குறித்த அனைத்து ஆவணங்களும், சென்னை ஐகோர்ட்டுக்கு, தண்டனையை உறுதிப்படுத்த அனுப்ப வேண்டும்.வழக்கில், கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட வழக்கு ஆதாரங்களாக, ஐந்து அரிவாள்கள், ரத்தக்கறை படிந்த உடைகள், ரத்தம் தோய்ந்த மண் உள்ளிட்டவை, மேல் முறையீடு விசாரணைக்கு பின், அழிக்க வேண்டும்.


பறிமுதல் செய்து, கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட பைக்குகள், மொபைல் போன்கள், தகுந்த ஆதாரங்கள் பெற்று, அதன் உரிமையாளர்களுக்கு, மேல் முறையீடு விசாரணை முடிவுக்கு பின், வழங்க வேண்டும்.


வழிகாட்டுதல்

இச்சம்பவம் குறித்து, அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் தெளிவாக உள்ளன. அனைவரின் சாட்சியங்களும், உரிய விவாதங்களுக்கு பின் ஏற்றுக் கொள்ளப்பட்டது.கூலிப்படை ஏற்பாடு செய்தது; கொலை செய்ய பணம் கொடுத்தது; இது குறித்து, ஆலோசனை நடத்தியது போன்ற அனைத்து குற்றங்களும் முழுமையாக நிரூபணமாகியுள்ளது.

அரசு தரப்பில், முன் வைத்த வாதங்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்கள், நான்கு காரணங்களின் அடிப்படையில், மரண தண்டனை விதிக்கலாம் எனத் தெரிவிக்கிறது.பொது இடத்தில், ஆதர வற்ற நிலையில் உள்ள தனி நபரை கொலை செய்தல்; கூலிப்படையை பயன்படுத்தி, கொலை செய்தல்.

ஜாதி பாகுபாடு காரணமாக கொலை செய்தல்; பொது இடத்தில் வன்முறையில் ஈடுபட்டு, கொடூரமாக கொலை செய்தல் போன்ற, இந்நான்கு அடிப்படைகளும், இந்த வழக்கில் பொருந்தி வருகிறது.கொலையான நபருக்கும், குற்றத்தில் ஈடுபட்டோருக்கும், எந்த நேரடி தொடர்பும் இல்லை. இறந்து போன நபரால், இவர்கள் எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை.

ஆனால், சமுதாய காரணங்களுக்காக, பொது இடத்தில், மக்களை அச்சுறுத்தும் வகையில் இது நடந்துள்ளது.இது போன்ற சம்பவங்கள், ஒரு முன்னுதாரணமாக இருந்து விடக்கூடாது என, அரசு தரப்பு வாதங்களை கோர்ட் ஏற்றுக் கொண்டது. இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக