புதன், 20 டிசம்பர், 2017

ஜிக்னேஷ் மேவானி குஜராத்தில் ஒரு திருமாவளவன்?

சவுக்கு :ஜிக்னேஷ் மேவானி. இவரது வெற்றி முற்போக்கு சிந்தனையாளர்க்கு புதியதோர் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.
அண்மையில் கொல்லப்பட்ட கர்நாடக மாநில செயற்பாட்டாளர் கௌரி லங்கேஷுடன் காணப்படும் புகைப்படத்தைத் தான் அவர் தனது ட்விட்டர் முகப்பாகவும் வைத்திருக்கிறார்.
குஜராத் மாநிலம் ஊனாவில் பசு வெறியர்கள் இறந்த மாடுகளின் தோலை உரித்துக்கொண்டிருந்த தலித்துக்களை சவுக்கால் அடித்த அந்த  கொடூரம் அகில இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாலு சரவையா என்பவரின் வீட்டில் நுழைந்து அவர், மனைவி, இரு மகன்கள், வேறு இரு உறவினர்கள், நண்பர் ஒருவர், ஆக ஏழு பேரை தாறுமாறாக அடித்து, 25 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்று மீண்டும் விளாசினர். இன்னமும் அந்தக் குடும்பம் பரிதவிக்கிறது.

அந்த சம்பவத்தின் போது தன் சமூகத்தினரைத் திரட்டி பேரணி நடத்தியவர் ஜிக்னேஷ். பசு மாட்டு வாலை நீங்க வெச்சிக்குங்கப்பா, எங்களுக்கு நிலம் கொடுங்க, இனி இறந்த மாடுகளைத் தொடமாட்டோம், சாக்கடைக்குள்ளும் இறங்கமாட்டோம் என அப்போது முழங்கினார். ஆனால் ஒன்றும் நிலை பெரிதாக மாறிவிடவில்லை. ’ஜிக்னேஷினால் எங்களுக்கு ஒரு பயனுமில்லையே,’ என வெதும்புகின்றது பாதிக்கப்பட்ட குடும்பம்.
அவரும் மற்ற அரசியல்வாதிகளைப் போலத்தான் வந்தார் பேரணி நடத்தினார், போய்விட்டார், என்கிறார் பாலுவின் மகன். அவருக்கு மிகக் கடுமையான காயங்கள்.  இணைப்பு
இது நமக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது ஆனாலும் ஜிக்னேஷின் கடந்த ஓராண்டு பயணத்தை நோக்கும்போது நமக்கு ஓரளவு மனநிறைவும்கூட. இவர் நம்மை ஒரேயடியாக ஏமாற்றிவிடமாட்டார் என்றே தோன்றுகின்றது.
தலித் சமூகத்தினர் வெறும் ஏழு சதம் மட்டுமே குஜராத்தில். பரவலாக வாழ்கின்றனர்,  இவர்கள் வாக்குக்கள் எங்கும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்காது. எனவேயே எந்தக் கட்சியும் அதிகமாக இவர்களைப் பற்றி அலட்டிக்கொள்வதில்லை.
பழங்குடியினருக்கு அரசியல் சட்டப்படி ஒதுக்கப்படுவது 32 தொகுதிகள். அவர்களது வாக்குக்களுக்காக இந்த முறை பாஜக சில முயற்சிகள் மேற்கொண்டு வெற்றியும் பெற்றதாக செய்திகள். ஆனால் அந்த அளவு அக்கறை கூட பட்டியலினத்தவர் மீது காட்டுவதில்லை. (அவர்களுக்கு 20 தொகுதிகள்.)
இந்த நிலையினை உணர்ந்தே ஜிக்னேஷ் அடக்கி வாசித்து, இப்போது வெற்றியும் கண்டிருக்கிறார். காங்கிரஸ் லட்சணம் எல்லோருக்கும் தெரியும், ஆனால் பாஜக பாவிகளை வீழ்த்துவது எப்படி? வேறு வழியில்லை. அவர்களுடன் கைகோர்த்தார் ஜிக்னேஷ் மேவானி.
போதாக்குறைக்கு ஆதிக்க சாதியினரான படேல்களின் வளரும் தலைவர் ஹர்திக்கின் ஆதரவு கோரி சில வாக்குறுதிகளையும் அளித்தது காங்கிரஸ். அண்மைக்காலமாக பிரபலமாகிவரும் பிற்படுத்தப்பட்டோர் இனத் தலைவர் அல்பேஷ் தாகூர் காங்கிரசிலேயே ஐக்கியமாகிவிட்டார். அத்தகைய கூட்டணியில் உயர்சாதியினராலும் பிற்படுத்தப்பட்டோராலும் ஒடுக்கப்படும்  தலித்துக்களின் பிரதிநிதிக்கு இடமேது?
ஆனாலும் யதார்த்தங்களை கருத்தில் கொண்டு, முரண்பாடுகள் இருந்தாலும் சரி, பாஜகவை வீழ்த்தியே ஆகவேண்டும் என்று ஜிக்னேஷும் காங்கிரசுடன் கைகோர்த்தார்.
முன்னர் ஆம் ஆத்மியில் இருந்தவர் தனியே தலித்துக்களுக்கென அமைப்பொன்றை நடத்தி வருகிறார்.. காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தும் தனித்தே போட்டியிட்டார். காங்கிரசும் தன் வேட்பாளரை விலக்கிக்கொண்டது. ஆம் ஆத்மியும் ஆதரவளித்தது.
துவக்கத்தில் இவருக்கு வாய்ப்பே இல்லை என்ற ரீதியில்தான் செய்திகள். காங்கிரசிலேயே ஒத்துழைப்பில்லை. மற்ற இனத்தவர் இவருக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளருக்கோ அல்லது பாஜகவிற்கோ ஆதரவளிப்பார்கள். இவருக்கு போதிய நிதி ஆதாரமுமில்லை என்றெல்லாம் செய்திகள்.
ஆனால் அனைத்து சிக்கல்களையும் சாதுர்யமாக எதிர்கொண்டு இறுதியில் பிரம்மாண்ட வெற்றியினையும் ஈட்டியிருக்கிறார் ஜிக்னேஷ்.
அதைவிட நமக்கு மகிழ்ச்சியளிப்பது அவர் இந்து மத வெறி ஃபாசிசமே என்பதில் தெளிவாக இருப்பதுதான். இன்னும் ஒரு படி மேலே சென்று, பெரும்பான்மையினரால் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டுவிட்ட முஸ்லீம்களுக்கு நேசக்கரம் நீட்டியிருக்கிறார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட ஒடுக்கப்படும் இஸ்லாமியர்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார். ஒரு பொதுக்கூட்டத்தில் அல்லா ஹூ அக்பர் என இவர் முழங்க, பதிலுக்கு மோடி மோடி என கூட்டத்தினர் கூச்சலிட, இதனால் எங்கே வாக்கு சரியுமோ என்ற பதட்டம் காங்கிரஸ் முகாமில். ஆனால் அப்படியெதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.
எப்படியும் அதன் காரணமாய் பிணக்கு ஏற்படுவதைத் தடுத்திருக்கிறார் ஜிக்னேஷ். அதைத்தான் கவனிக்கவேண்டும்.
அவர் பொதுவாக இடதுசாரிகளுடன் நல்லுறவு வைத்திருக்கிறார். அவரது பேட்டிகளில் அம்பேத்காரை மேற்கோள் காட்டுகிறார். தமிழகத்திற்கு வந்திருந்தபோது பெரியாருக்கு புகழ்மாலை சூடினார்.  இணைப்பு
அந்தப் பேட்டியில் அவர் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் எனப் பலரின் சிந்தனைகளை உள்வாங்கியே தலித் மக்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.  இப்போது காங்கிரஸ் மேடையில் அவரை சந்திக்கிறோம். வெற்றிபெற்றவுடன் ராகுல் காந்திக்கு நன்றி சொன்னார். இதுதான் அவரது தனிச் சிறப்பென நினைக்கிறேன்.
199ல் திருமாவளவனையும் கிருஷ்ணசாமியையும் ஓர் அணியில் இணைத்து போட்டியிட்டார் கருப்பையா மூப்பனார். அப்போது திருமாவளவன் சிக்கல் ஏதும் ஏற்படுத்தாமல் இயன்றவரை ஒத்துழைத்தார். கிருஷ்ணசாமி ரொம்பவே முரண்டுபிடித்தார். 1998ல் தனித்துப் போட்டியிட்டு ஏழெட்டு தொகுதிகளில் கணிசமான வாக்குக்கள் பெற்றிருந்தாரா, அந்த மமதை. அப்போது அவர் திருமாவை ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார். தானே மாநில தலித்துக்கள் அனைவர்க்கும் தலைவர் எனக் கூறிக்கொண்டார்.
அவரை கூட்டணிக்கு சம்மதிக்கவைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது மூப்பனாருக்கு. நக்கீரன் காமராஜ், நான் உள்ளிட்ட நலம் விரும்பிகள் கிருஷ்ணசாமியிடம் மன்றாட வேண்டியிருந்தது.
சக பத்திரிகையாளர் ஒருவரிடம், “என்ன இப்படி செய்கிறார் கிருஷ்ணசாமி…தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது…கூட்டணி அமைக்கவே இப்படி இழுத்தடித்தால்…” என்று நான் புலம்பினேன்.
அவரோ, “உங்களுக்குத் தெரியாது…இந்த மெயின்ஸ்ட்ரீம் தலைவர்களுக்கு தலித் என்றால் யாரென்று புரியவைக்கவேண்டும். அவர்கள் ஒன்றும் கிள்ளுக்கீரையல்ல…உரிய மரியாதை கொடுக்கவேண்டும்…திருமா ரொம்பவே அனுசரித்துப் போகிறார்…கிருஷ்ணசாமி செய்வதுதான் சரி,” என்றார்.
ஆஹா இப்படி ஒரு பார்வை நமக்கேன் தோன்றவில்லை என நான் நொந்துகொண்டேன்.   இணைப்பு
ஆனால் என்னாயிற்று? அளவற்ற சுயமோகம். அகங்காரம். யதார்த்தம் பற்றிய புரிதல்களே இல்லை. தன்  செல்வாக்கு எவ்வளவு தூரம், இனம் கடந்ததா, எத்தனை தொகுதிகளில் முடிவைத் தீர்மானிக்கமுடியும் என்றெல்லாம் அவர் சிந்தித்ததாகவே தெரியவில்லை.
தன் சமூகத்தினரையே தனது மிதமிஞ்சிய மமதையால் பகைத்துக்கொண்டார். கொடியங்குளம் மக்களுக்கு எவ்வுதவியும் செய்யவில்லை. இறுதியில் அங்கே நுழையமுடியாத நிலை ஏற்பட்டது.
இப்போது சீந்த ஆளில்லாமல், பேசி வந்த மார்க்சீய அரசியலுக்கு முற்றிலும் முரணாக, மோடியே தலைவன் என அரற்றிக்கொண்டிருக்கிறார்.
திருமாவைப் பற்றி நிறையவே சொல்லியாயிற்று இவர்களை விட்டால் வேறு தலைவர்களும் இல்லை.
தமிழ்நாட்டில் பள்ளரினத்தாரின் வாக்கு தென் மாவட்டங்களில் சில தொகுதிகளில் அடர்த்தியாக  இருப்பது உண்மையே. ஆனால் கிருஷ்ணசாமியின்  வீழ்ச்சிக்குப் பிறகு அவர்களை மையப்படுத்தும் தலைவர் எவரேனும் உருவாவார்களா, எக் கட்சியும் அவர்களைத் தேடி வருமா என்பது கேள்விக்குறியே.
பறையரினத்தாரின் வாக்குக்கள் அதிகம் ஆனால் அவர்கள் எந்தப் பகுதியிலும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவு அடர்த்தியாக வசிக்கவில்லை. மேலும் கடந்த காலங்களில் திருமா அளவுக்கு மீறி சமரசம் செய்து கொண்டுவிட்டார்.  இணைப்பு
தேர்தல் அரசியலைப் பிரதானமாக்கி, தன் சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகளையே கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டதன் விளைவாய் விடுதலைச் சிறுத்தைகள் சற்று வளம் பெற்றிருக்கலாம், தொண்டர்கள் விசுவாசம் கூடியிருக்கலாம், ஆனால் திருமாவின் செல்வாக்கு பெரிதாக வளர்ந்துவிடவில்லை.
எனக்கு கிருஷ்ணசாமி இனி தன் பாதையினை மாற்றிக்கொள்வார் என்ற நம்பிக்கை சற்றுமில்லை. ஆனால் திருமா ஜிக்னேஷின் பாதையில் செல்லமுடியும்  எனத்  தோன்றுகின்றது.
எந்த அளவு குஜராத் இளம் தலைவரால் தாக்குப் பிடிக்கமுடியும், எந்த அளவு அவர் தீவிரம் காட்டுவார் என்பதையெல்லாம் இப்போது ஊகிக்க இயலாது. ஆனாலும் அவரை அறிந்தவர்கள், ஜிக்னேஷ் ஆர்ப்பாட்ட அரசியல், ஊழல் போன்றவற்றைத் தவிர்த்து, சுயலாப நோக்கில்லாமல், அடித்தட்டு மக்கள் விடுதலைக்காக போராடுவார், அகில இந்திய அளவில் குறிப்பிடத் தகுந்த தலைவராகவும் உருவாகிவிடுவார் என்கின்றனர்.
திருமாவளவன் தமிழ்த் தேசியம் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை, ஆனால் அதற்கு ஓரளவு ஆதரவு இருக்கக்கூடும், பெரியாரியம், அவ்வப்போது மார்க்சீயம் கூட பேசுவார். அந்த அளவில் ஜிக்னேஷ் மேவானியின் வெற்றிக்கான காரணங்களை ஆய்ந்து அவர் வழியில் செல்ல முனையலாம் திருமா.
மேலே குறிப்பிட்டிருக்கும் தமிழ் இந்து பேட்டியில் தன்னை எந்த தலித் தலைவரும் தொடர்பு கொள்ளவில்லை என வருந்திருக்கிறார் ஜிக்னேஷ். இனியும் காலந்தாழ்த்தாமல் திருமா அவரைத் தொடர்புகொள்ளலாமே.
தலித் அறிவு ஜீவிகளும் தத்தம் சாதி/பிரிவுத் தலைவருக்கு வக்காலத்து வாங்குவது, வாழ்த்துப்பா பாடுவது போன்ற அரிய பணிகளுக்கப்பால் அருந்ததியரையும் இணைத்துக்கொண்டு புதிய அரசியல் பாதை உருவாக்குவதெப்படி என்பதில் மேலதிக கவனம் செலுத்தலாம்.
ஜிக்னேஷ் மேவானி, தொடருங்கள் உங்கள் போராட்டங்களை. தேர்தலுக்காக சில சமரசங்கள் செய்துகொள்ளலாம் தவறில்லை. ஆனால் மக்கள் நலனில் சமரசம் செய்துகொள்ளாதீர்கள்.
அண்ணல் அம்பேத்கரின் அடியொற்றி நீங்கள் பீடுநடை போட., புதிய வெற்றிகள் ஈட்ட, தலித் சமூகம் விடுதலை பெற, சவுக்கின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக