வியாழன், 21 டிசம்பர், 2017

"அருவி" படம் எழுப்பி இருக்கும் அரசியல் .... பேசப்படவேண்டும்... பார்க்கப்படவேண்டும்.. படிக்கப்படவேண்டும் ..

Karthikeyan Fastura " அருவி படம் குறித்து நான் பேசப்போவதில்லை. அது எழுப்பி இருக்கும் அரசியலை பேச வேண்டும்.
குடும்ப உறவுகளில் ரத்த பந்தங்களில் முகச்சுழிப்பை ஏற்படுத்துவது எய்ட்ஸ் நோய் மட்டும் தானா.. வேறு என்னெல்லாம் இருக்கிறது என்று பார்க்கலாமா
1. சாதி கலப்பு திருமணம்
2. மதக் கலப்பு திருமணம்
3. திருநங்கையாக உணர்வது
4. ஓரினசேர்க்கை
5. வேலையின்மை
6. சினிமா ஆர்வம்
7. சுயதொழில்
8. தீவிர அரசியல்
9. பகுத்தறிவு/கடவுள் மறுப்பு
10. மனநலம் பாதிப்பு
11. முதுமை
12. தீவிர ஊனம்
13. தீராத நோய்மை
14. ஐந்தாவது பெண் குழந்தை
மேற்சொன்ன சிலவற்றில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவற்றினால் பாதிக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறிய ஆண், பெண்களை சந்தித்திருக்கிறேன்.
மேற்சொன்ன எதுவும் சட்டப்படியோ, தார்மீகப்படியோ குற்றமில்லை. நம் வீடுகளில் இவை குற்றமாகவும், சகிக்கமுடியாததாகவும் பார்க்கப்படுகிறது. அதனால் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறார்கள். இன்னும் சிலர் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்கள். மேற்சொன்ன காரணிகள் சிலவற்றில் குடும்ப உறுப்பினர்களால் கொலை செய்யப்படுகிறார்கள்.
இதையெல்லாம் செய்வது யார். நாம் தான் நாமே தான். நமது அன்பில்லாத மனமும் என்பில்லாத அறிவும் தான்.

நமக்கு போதிய அறிவிருந்திருந்தால் தேவையற்ற பயமும், கோபமும் அற்றிருப்போம். இவை இரண்டுமில்லாத இடத்தில் பாரபட்சமில்லாத தூய அன்பு இயல்பாக குடியிருக்கும்.
இப்படியும் சொல்லலாம் ஆழ்ந்த அன்பிருக்கும் இடத்தில் பயமும் கோபமும் அற்று அறிவு ஒழுங்காக வேலை செய்யும்.
நிறைய படிக்க வேண்டும். குறிப்பாக அறிவியல், சமூகம் மற்றும் வரலாறு படிக்க வேண்டும். பெண்கள் அதிகமாக படிக்க வேண்டும். அப்போது தான் மனத்தடைகள் உடைக்கப்படும். உருப்படியான ஒரு வாழ்கையை வாழ முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக