வெள்ளி, 29 டிசம்பர், 2017

கண்ணீர் கடல் ... மக்களை உறையவைத்த... அரசுகள் அலட்சியம் காட்டிய .. கதை .. ஆவணப்படம்


ன்னியாகுமரி மீனவர்களின் வாழ்வை புரட்டிப் போட்டிருக்கிறது ஒக்கிப் புயல். இந்த புயலால் ஏற்பட்ட உயிர்ச்சேதமும், உடைமைச் சேதமும் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தில் இருந்து மீனவர்கள் மீண்டு வருவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் எடுக்கும் என்பது தெரியாது. காணாமல் போன மீனவர்கள் இன்று வருவார்கள், நாளை வருவார்கள் என அவர்களது குழந்தைகளும், மனைவியும், தாய் தகப்பனும் கதறலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
குஜராத் தேர்தல் பிரச்சாரத்திற்கு கடல் விமானத்தில் வந்து இறங்கி பவுசு காட்டினார் மோடி. ஆனால் துயரில் ஆழ்ந்திருக்கும் மீனவர்களைப் பார்க்க எந்த வாகனத்திலும் வரமுடியாதாம்.
புயலுக்கான முன்னறிவிப்பு எச்சரிக்கை கொடுப்பதில் தொடங்கி மீட்புப் பணி வரையிலான அனைத்துக் கடமைகளிலும் மெத்தனம் காட்டியது அரசு. விளைவு, 150-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மரணம் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை. கொதித்துப் போன மீனவ மக்கள் போராடினார்கள். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை.

மக்கள் துயரத்துல் அல்லல் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீனவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் திமிரோடு பதிலளித்தார்; எடப்பாடியும், பன்னீர்செல்வமும் ஆர்.கே. நகரிலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிலும் தவம் கிடந்தார்கள்; மோடி குஜராத்தில் வீதி வீதியாக ஓட்டு வேட்டை நடத்திக் கொண்டிருந்தார்.
பொதுத்தளத்தில் பலரும் கடுமையாக விமரிசித்த பின்னர் எடப்பாடி ஒரு கூட்டத்தில் பங்கேற்று விட்டு,ஒரு சில இடங்களை மட்டும் பார்வையிட்டுச் சென்றார். மீனவர்களின் பகுதிக்கு வரவே இல்லை. மோடியோ, வெறும் புகைப்படங்களில் மட்டும் பாதிப்பைப் பார்த்து விட்டு டாட்டா காட்டிச் சென்று விட்டார்.
பாதிப்படைந்த மீனவ கிராமங்களுக்குச் சென்று கள நிலைமைகளை வினவு செய்தியாளர்கள் பதிவு செய்தனர். அங்கிருக்கும் மக்களிடம் அரசின் மீட்புப்  பணிகளைப் பற்றி கேட்டறிந்தனர். அப்படி உருவானது தான் “கண்ணீர்க் கடல்” ஆவணப்படம். இந்த ஆவணப்படத்தை வெளியிடுவதோடு, ஒக்கிப் புயல் பாதிப்பு குறித்து கன்னியாகுமரி மீனவர்கள் மத்தியில் பணியாற்றிய பத்திரிக்கையாளர்கள் கலந்துரையாடல் மற்றும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களைக் காப்பாற்றச் சென்று வந்த மீனவ இளைஞர்களின் நேருரையும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது.
அதன்படி கடந்த டிசம்பர் 25 – திங்கள் கிழமையன்று சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. முன்னோட்டத் திரையரங்கில் இந்நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்து வினவு இணைய தளத்தில் கடந்த 24.12.2017 அன்று அறிவிக்கப்பட்டது.
ஓரிரு நாள் இடைவெளியில் அறிவிக்கப்பட்டாலும் திரளான மக்கள், தோழர்கள், பத்திரிகை நண்பர்கள் திரண்டு வந்தார்கள்.

அறிமுக உரை பேசிய தோழர் மருதையன் இந்த நிகழ்வு குறித்தும், அதன் அவசியம் குறித்தும் சுருக்கமாகப் பேசினார்.

தோழர் மருதையன்
அதனைத் தொடரந்து “கண்ணீர்க் கடல்” ஆவணப்படம் திரையிடப்பட்டது. சுமார் 1மணி நேரம் 20 நிமிடங்கள் திரையரங்கேறிய இந்த ஆவணப்படம் பார்வையாளர்களை உறையச் செய்தது. இளைஞர்களும், மாணவர்களும் இப்படத்தின் உதவியால் மீனவர்களின் பிரச்சினையை முழுமையாக அறிந்து கொண்டோம் என்றார்கள். தொழிலாளர்கள் சிலர் தமது பணியை விட மீனவர்களின் தொழில் எப்படி சிரமம் நிறைந்தது என்பதை அறிந்ததாக கூறினார்கள். பெரும்பாலானோர் படம் தங்களை கண்ணீர் விட வைத்ததை நெகிழ்ச்சியுடன் எடுத்துரைத்தார்கள்.
ஆவணப் பட திரையிடல் முடிந்ததும்,  மீனவர் நேருரை மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பத்திரிக்கையாளர் பாரதிதம்பி இந்நிகழ்வை நெறியாளுகை செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிளையச் சேர்ந்த மீனவ இளைஞர்களான ஆல்பர்ட் மற்றும் டிக்சன் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களோடு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலர் தோழர் மருதையனும் கலந்து கொண்டார்.
பத்திரிக்கையாளர் பாரதிதம்பி தமது கள அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு மீனவ இளைஞர்கள் இருவரிடமும் அங்கிருக்கும் யதார்த்த நிலைமைகள் குறித்துக் கேட்டார். பொறியியல் பட்டதாரியான ஆல்பர்ட்-ம், மீனவரான டிக்சனும் தங்களது அனுபவங்களையும், மீனவர்களின் யதார்த்த நிலைமைகளையும் எடுத்துரைத்தனர்.
இதில் டிக்சன், அரசின் கடலோரக் காவல் படையுடன் மீனவர்களின் தேடுதலுக்கு உடன் சென்ற இளைஞர். அவர் தனது அனுபவத்தைக் கூறுகையில், கடலோரக்காவல் படையினர் தங்களை அழைத்துக் கொண்டு வெறுமனே 25 கடல் மைல்களுக்கு மட்டுமே சென்றதாகக் குறிப்பிட்டார்.

ஆல்பர்ட்
மேலும், மீனவர்கள் பொதுவாக மீன்பிடிக்குச் சென்றிருக்கும் பகுதிகளாக மீனவர்கள் குறித்துக் கொடுத்த பகுதிகளுக்கு அவர்கள் செல்லவில்லை. அதற்கு மேல் தாங்கள் செல்வதற்கு சட்டம் அனுமதிக்காது எனக் கூறியிருக்கின்றனர். அதைத் தாண்டி மேலும் சுமார் 50 கடல் மைல்கள் சென்றிருந்தால் கண்டிப்பாக பல மீனவர்களை மீட்டுக் கொண்டு வந்திருக்க முடியும். மீனவர்களின் உயிருக்காக சட்டமா, இல்லை சட்டத்திற்காக உயிர்களை இழக்க முடியுமா எனத் தெரியவில்லை என மிகுந்த மனவருத்தத்துடன் தனது கருத்தைப் பதிவு செய்தார்.
ஆல்பர்ட் பேசுகையில், பல மீனவர்கள் 3 நாள், 3 இரவுகள் தொடர்ச்சியாக நீந்திக் கடற்கரையை நோக்கி வந்ததாகக் குறிப்பிட்டார். அப்படி வந்தவர்களை கடற்கரையில் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த பின்னர், அவர்கள் கண் விழித்துப் பார்த்த போது, அவர்களை நடுக்கடலில் இருந்து கடற்படை காப்பாற்றியதாக செய்தி வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
மேலும் பல மீனவர்கள் படகில் மீண்டு வந்தபோது அவர்களை இடைமறித்து அவர்களைக் கூட்டிக் கொண்டு போய் தாங்கள் மீட்டதாகக் கடலோரக் காவல் படையினரும், கடற்படையினரும் கூறியதாகவும் பதிவு செய்தார் ஆல்பர்ட். மேலும் முதலில் ஜப்பான் வர்த்தகக் கப்பலால் காப்பாற்றப்பட்ட 4 மீனவர்களை அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஏற்றிக் கொண்டு திரும்பிய காட்சியை மட்டுமே கடைசி வரை மீட்டதற்கான ஆதாரமாக வெளியிட்டுக் கொண்டிருந்தது அரசு. அதனைத் தவிர வேறு எந்த வீடியோவையும் வெளியிடவில்லை. அரசு தொடர்ச்சியாக பல கப்பல்களீல் தேடுதல் வேட்டை நடத்துவதாகக் கூறியது. ஆனால் 3 நாட்கள் தொடர்ச்சியாக நீந்திக் கரையேறிய மீனவர்கள், வழியில் ஒரு கப்பலையோ, மீட்புப் படகையோ பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.  நிலைமை இப்படி இருக்கையில் இந்த அரசை எப்படி நம்புவது எனக் கேள்வி எழுப்பினார்.

வல்லவிளையை சேர்ந்த  டிக்சன்
சாலையில் விபத்தில் சிக்கிய நபரைக் காப்பாற்றாமல் ஒரு தனி மனிதன் சென்றால் அவனை சுயநலவாதி எனக் கூறி ஒதுக்கிவிடலாம். ஆனால், ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுனர், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது அதனால் இப்போது போய்க் காப்பாற்ற முடியாது எனச் சொல்ல முடியுமா? இன்று அரசும் அந்த நிலையில் தான் இருந்து கொண்டு பேசுகிறது. இதனை விபத்து என்று கூறுவதா இல்லை மீனவர் படுகொலை எனக் கூறுவதாவெனத் தெரியவில்லை என்று கூறினார்
வள்ளவிளை மீனவர்கள் சுமார் 8 படகுகளில் கடலுக்குள் சென்று 11 நாட்கள் தேடி 24 மீனவர்களை மீட்டுக் கொண்டு வந்துள்ளனர். இந்தத் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு அரசு கடற்படைக் கப்பலையும் தேடுதல் பணியில் தாங்கள் காணவில்லை என்கின்றனர் மீனவர்கள். இவர்கள் தேடினோம் என்று சொல்கிறார்களே, ஒவ்வொரு கப்பலிலும் இருக்கும் வாயேஜ் டேட்டா ரிக்கார்டரின் (பயணத் தகவல் பதிவகம்) தகவலை கடற்படை பகிரங்கமாக வெளியிடத் தயாரா எனக் கேள்வி எழுப்பினார் ஆல்பர்ட்.
அவர் மேலும் கூறுகையில், இவர்கள் தேடுவதாகச் சொன்னது அனைத்தும் நாடகமாகத் தான் தெரிகிறது. படகு கவிழ்ந்ததால், கரையை நோக்கி நீந்திக் கொண்டு வந்த மீனவர்கள் 4 பேர் கைகளை அசைத்தும் கடற்படை ஹெலிகாப்டர் அவர்களை மீட்கவில்லை.

புயல் வீசிய அன்று 123 மீனவப் படகுகள் தங்களுக்கு ஆபத்துக் காலங்களில் உதவி கோருவதற்காக வழங்கப்பட்ட ஆபத்துக்கால எச்சரிக்கை ட்ரான்ஸ்மிட்டர் (Distress Alert Transmitter) பொத்தானை அழுத்தியுள்ளனர் மீனவர்கள். ஆனால் அந்தத் தகவல் தங்களுக்கு 14ம் தேதி தான் வந்து சேர்ந்ததாகக் கூறியிருக்கிறது மீன் வளத்துறை.
ஆபத்துக் காலங்களில் தங்களுக்குத் தகவல் கிடைக்கும் வகையில் செயற்கைக்கோள் அலைபேசி கொடுக்கப்பட வேண்டும் எனக் கேட்பதற்கு பாதுகாப்புக் காரணங்களை சொல்கிறது அரசு. ஆனால் மீனவர்கள் கேட்பது ஒரு வழியில் மட்டும் பேசக் கூடிய அலைபேசிகளையே, அதில் பாதுகாப்புப் பிரச்சினை வர வாய்ப்பில்லையே. என்று கூறினார்.

பத்திரிக்கையாளர் பாரதி தம்பி
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 1000 படகுகள் ஒரு மாதத்திற்கு தலா 5000 லிட்டர் டீசல் வாங்குகின்றனர். அதன் மூலம் அரசு ஈட்டும் வரி வருவாய் மட்டுமே மாதத்திற்கு சுமார் 5 கோடியே 58 இலட்சம் ரூபாய் ஆகும். இது தவிர உணவுப் பொருள் தொடங்கி பல்வேறு வகைகளில் மீனவர்கள் அதிகமாக அரசுக்கு வரிவருமானம் ஈட்டித் தருகிறார்கள். ஆனால் ஒரு புயலுக்கு முன்னரும் அவர்களுக்கு சரியான நேரத்தில் எச்சரிக்கை கொடுக்கப்படவில்லை. புயலுக்குப் பின்னரும் மீட்புப் பணியில் அரசு ஈடுபடவில்லை. இது மீனவர்களை அழிக்கும் செயல் என்று ஆல்பர்ட் கூறினார்.
அரசின் நிவாரணம் குறித்து கேட்கப் பட்ட போது அதற்குப் பதிலளித்த ஆல்பர்ட், தங்கள் மக்களை பார்க்கக் கூட வராத அரசு, தனது குடும்பத்தாரை இழந்து உண்ணாமல் தவிக்கும் மக்களைப் பார்த்து சாப்பீட்டீர்களா என்று கூட கேட்காத அரசா, நிவாரணம் கொடுக்கப் போகிறது ? எனக் கேள்வி எழுப்பினார்.
மீனவர்களை இந்த அரசு தொடர்ந்து புறக்கணிப்பதாகத் தெரிவித்த ஆல்பர்ட், கன்னியாகுமரிக்கும், இலங்கைக்கும் இடையே வெட்ஜ்பேங்க் என்ற மீன் அதிகம் கிடைக்கும் பகுதியை தற்போது அந்நிய நாட்டுக் கப்பல்கள் மீன் பிடிக்க இந்த அரசு தாரை வார்த்திருப்பதாகக் குற்றம்சாட்டினார். மற்றநாடுகள் தங்களது கடல்பரப்பையும், நிலப்பரப்பையும் விரிவு படுத்த முனையும் போது, நமது நாடு மட்டும்தான் தனது எல்லையை மற்றவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று சுட்டிக் காட்டினார்.

பத்திரிக்கையாளர் ரகுமான்
இந்தக் கலந்துரையாடலில் பேசிய தோழர் மருதையன் அவர்கள், விவசாய நிலம் – கடற்கரை, ஆகிய இரண்டையும் கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுக்க துடித்துக் கொண்டிருக்கிறது அரசு. விவசாயிகளையும், மீனவ மக்களையும் அப்புறப்படுத்துவது தான் அதன் நோக்கம். கடற்கரை நெடுகிலும், சரக்குப் பெட்டக முனையங்கள், துறைமுகங்கள், அனல் மின் நிலையங்கள், அணு மின் நிலையங்கள் என நிறுவுவது தான் அரசின் திட்டம். இதற்கு ’சாகர் மாலா’ எனப் பெயர் சூட்டியுள்ளது அரசு. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உல்லாச விடுதிகள், தீம் பார்க்குகள் போன்றவற்றை கட்டிக் கொள்ள கேரள கடற்கரைப் பகுதிகளை அவர்களுக்கு அள்ளிக் கொடுக்க திட்டமிடுகிறது அரசு. இதற்காக மீனவ மக்களை கடற்கரையை விட்டு அப்புறப்படுத்தத் துடிக்கிறது அரசு என்று கூறினார்.
நிகழ்வில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் ரகுமான் பேசுகையில், மீனவர்களின் மரணம், அரசின் மனதை உலுக்கவில்லை. அதனால் தான் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீண்டு வரவில்லை என நிர்மலா சீதாராமனிடம் மீனவமக்கள் கூறிய போது “பொய் சொல்லாதீர்கள்” என அவர்களை நோக்கிச் சொன்னார். அரசின் எண்ணத்திற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும் ? என்று கூறினார்.
சமவெளி மக்கள், மீனவ மக்களுக்காக போராட முன் வராத நிலை குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ரகுமான், சமவெளி மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்காகவே போராட முன்வராத சூழல் தான் இன்றும் நிலவுகிறது எனப் பதிவு செய்தார்.
நிகழ்வு மாலை 6:20 மணியளவில் நிறைவுற்றது. தமிழகமெங்கும் “கண்ணீர்க் கடல்” திரையிடப்படுமென தோழர் மருதையன் தெரிவித்தார். திரையிட ஆர்வமுள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

– வினவு செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக