சனி, 16 டிசம்பர், 2017

ஆர்.கே.நகர் தேர்தலை நடத்த தனி தேர்தல் அதிகாரி நியமனம்,,,, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை

தினகரன் :சென்னை: ஆர்.கே. நகர் தேர்தலை நடத்த தனி தேர்தல் அதிகாரியை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அவரே இனி அனைத்து தேர்தல் பணிகளையும் கவனிப்பார் என்றும் ஆணையம் அறிவித்துள்ளது.ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடக்கிறது. எந்த இடைத்தேர்தலிலும் இல்லாத அளவில் 8 தேர்தல் பார்வையாளர்கள் வந்துள்ளனர். இதில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், வேட்பாளர்களின் செலவு கணக்கு மற்றும் வேட்பாளர்களுக்கு எந்த வகையில் பணம் வருகிறது என்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள்.பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் வேட்பாளர்களின் பிரசாரம் உள்ளிட்ட பணிகளை கவனிப்பார்கள். போலீஸ் பார்வையாளர்கள் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை கண்காணிப்பார்கள். 30க்கும் மேற்பட்ட பறக்கும் படையினரும் ஆர்.கே.நகரில் வாகன சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.


வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால், தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் அதிகப்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.அதன்படி, இந்திய தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தேர்தலை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் செலவு கணக்குகளை தணிக்கை செய்யும் பிரிவின் இயக்குநராக உள்ள ஐஆர்எஸ் அதிகாரி பாத்ரா என்ற அதிகாரியை நியமித்து நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர், இன்று காலை சென்னை வருகிறார். இதையடுத்து சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு, ஆர்.கே.நகர் தேர்தல் பணியை தொடங்க உள்ளார். பின்னர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு தனி தேர்தல் அதிகாரி பாத்ரா நேரடியாக சென்று, தேர்தல் முன்னேற்பாடு உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்கிறார்.தலைமை செயலகத்தில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்தபடி, ஆர்.கே.நகரில் பணியாற்றும் அனைத்து பிரிவு தேர்தல் அதிகாரிகளையும் கண்காணிக்க இவருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவர்தான் இனி ஆர்.கே.நகர் தேர்தலை நடத்துவார். தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரி, மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இனி ஆர்.கே.நகர் தொகுதி தொடர்பான புகார்களையும் அவரே கவனிப்பார். தனது அறிக்கையை இனி நேரடியாக டெல்லிக்கே அனுப்பி அவரே தனியாக முடிவு எடுப்பார்.ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலின்போதும், தேர்தல் தனி அதிகாரியாக பாத்ராவை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மூலம் ஆர்.கே.நகர் தேர்தலை நடத்த தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூடுதல் பார்வையாளர்
ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இன்று வரை வெளி மாநிலத்தை சேர்ந்த 7 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி 3 செலவின பார்வையாளர்கள், 2 பொது பார்வையாளர்கள், 2 போலீஸ் பார்வையாளர்கள் ஆர்.கே.நகர் வந்து தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கூடுதலாக ஒரு தேர்தல் செலவின பார்வையாளராக மன்வெந்ரா கோயல் (ஐஆர்எஸ்) என்பவரை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி மன்வெந்ரா கோயல் வருகிற 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்குகளை ஆய்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிப்பார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக