ஞாயிறு, 3 டிசம்பர், 2017

தாயை கொன்றுவிட்டு நகைகளோடு தப்பி ஓடிய தஷ்வந்த்... சிறுமி ஹாசினியை கொன்றுவிட்டு விடுதலையாகிவன்

tamilthehindu :சென்னை சிறுமி ஹாசினியை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள தஷ்வந்த் என்ற இளைஞரின் தாய் இன்று (சனிக்கிழமை) மதியம் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
அவரது தலையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட காயம் உள்ளது. வீட்டிலிருந்த நகை, பணம் காணவில்லை. தஷ்வந்தும் தலைமறைவாகியுள்ளார். இதனால், தஷ்வந்த்தே சரளாவை கொலை செய்திருக்க அதிக வாய்ப்பிருப்பதாக போலீஸ் தரப்பு சந்தேகிக்கிறது. தஷ்வந்தை பிடிக்க போலீஸார் பல்வேறு பகுதிகளுக்கும் விரைந்துள்ளனர்.
அன்று ஹாசினி.. இன்று பெற்ற தாய்..
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினி திடீரென காணாமல் போனார். விளையாடச் சென்ற குழந்தை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. போலீஸ் விசாரணையில் ஹாசினியை அவரது பக்கத்து வீட்டில் வசித்த தஷ்வந்த் என்ற இளைஞரே கடைசியாக அழைத்துச் சென்றது உறுதியானது. இதன் அடிப்படையில் தஷ்வந்த்திடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், தஷ்வந்த் ஹாசினியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றது தெரியவந்தது. சிறுமி கொலை, பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் மீதான குண்டர் சட்டம் தொடர்பாக போலீஸார் விளக்கமளிக்காததால் நீதிமன்றம் குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது. இதனையடுத்து சிறையில் இருந்து வெளியேவந்த தனது பெற்றோருடன் வசித்துவந்தார்.
இந்நிலையில், இன்று மதியம் தஷ்வந்த்தின் தாய் சரளா படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது தலையில் இரும்புக் கம்பியால் தாக்கிய காயம் உள்ளது. அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். வீட்டிலிருந்த நகை, பணம் கொள்ளை போயுள்ளது. தஷ்வந்தும் வீட்டில் இல்லை. இதனால், தஷ்வந்த் மீதான சந்தேகம் போலீஸுக்கு வலுத்துள்ளது.
ஹாசினியின் தந்தைக்கு மிரட்டல்:
ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதையும் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனையும் எதிர்த்து சிறுமி ஹாசினியின் தந்தை நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அண்மையில் நீதிமன்றத்துக்கு வந்த ஹாசினியின் தந்தையை தஷ்வந்த் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இனியும் நீதிமன்றத்துக்கு வந்தால் ஹாசினியின் சகோதரரையும் கொன்றுவிடுவதாக தஷ்வந்த் மிரட்டியதாகத் தெரிகிறது. இந்நிலையில், தஷ்வந்தின் தாயாரும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
தஷ்வந்த் விடுவிக்கப்பட்டபோதே பெண்கள் அமைப்பினர், குழந்தைகள் நல ஆர்வலர்கள் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தஷ்வந்த் போன்றோர் வெளியில் இருப்பது சமூக பாதுகாப்புக்கு ஆபத்தானது என பலரும் கண்டனக் குரல்களை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக