செவ்வாய், 19 டிசம்பர், 2017

ஜிக்னேஷ் மேவானி :தமிழக தலித் இயக்கத் தலைவர்கள் மவுனம் காக்கிறார்கள்

tamilthehindu :ஜிக்னேஷ் மேவானி குஜராத் மக்களின் மனங்களில் ஆழ, அகல பதிந்துவிட்ட ஒரு பெயர். செத்த மாட்டை சுத்தம் செய்ய மாட்டோம், 'மாட்டின் வாலை நீங்கள் வைத்துக் கொண்டு 5 ஏக்கர் நிலத்தை எங்களுக்கு கொடுங்கள்' என்று குஜராத்தின் உனாவில் லட்சக்கணக்கான தலித் மக்களை ஒன்று திரட்டிய எழுச்சியின் நாயகன். சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் சொற்பொழிவில் கலந்து கொள்ள வந்திருந்த அவரை காலைப் பொழுதில் சந்தித்து உரையாடியதிலிருந்து….
குஜராத்தில் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக உனாவில் மிகப்பெரிய எழுச்சியை நீங்கள் நடத்தியிருந்தீர்கள், இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவு என்று பேசப்பட்டது, ஆனால் அதன் பின்னர் நடந்த உ.பி. தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதே, உத்தரப் பிரதேசத்தில் 21 சதவீத தலித் மக்கள் இருக்கிறார்கள் , ஆனால் அவர்கள் மத்தியில் உனா எழுச்சி எந்தத் தாக்கத்தையும் உருவாக்கவில்லையா?"> தேர்தல் அரசியலில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது என்பது உண்மைதான். உனா எழுச்சி என்பது தேர்தல் அரசியலுக்கானது அல்ல, இது ஒரு சமூக மாற்றத்துக்கான நிகழ்வு. இதனால் தேர்தல் அரசியலில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நான் நம்பவில்லை. தேர்தல் அரசியல் தனக்கென்று ஒரு வடிவத்தைக் கொண்டிருக்கிறது.

உ.பி.யில் தலித் அமைப்புகளின் கடந்த கால செயல்பாடுகள், தவறுகள் ஆகியவையும் ஒரு தாக்கத்தை உருவாக்கியிருக்கின்றன. பாஜக வெற்றி பெற்று விட்டது என்பதற்காகவே, உனா எழுச்சி போன்ற நிகழ்வுகளின் தாக்கத்தை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஆனால் ஒன்றை உறுதியாகக் கூறுகிறேன், உ.பி.யில் பாஜக பெற்றிருக்கும் வெற்றியால் அரசியலமைப்புச் சட்டத்திற்கே பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது போன்ற ஆபத்துகள் வரும் போது அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள், அப்படி நிகழும் போது இயல்பாகவே தலித் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
தலித்துகளுக்கான நில அதிகாரத்தில்தான் உங்களின் முழுக் கவனமும், செயல்பாடும் இருக்கிறது. நில அதிகாரத்தை நீங்கள் வலியுறுத்துவதன் தேவை எங்கிருந்து எழுகிறது?
நில அதிகாரம் என்பதை மட்டும் நான் வலியுறுத்தவில்லை, வேறு பல்வேறு உரிமைகள் குறித்து பேசி வருகிறேன். ஆனால் இந்தியாவில், யாரிடம் நிலம் இருக்க வேண்டும், யாரிடமும் இருக்கக் கூடாது என்பதை தீர்மானிப்பது சாதிய அமைப்பு முறை. சாதிய சமூக அமைப்பு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென்றால் நிலச் சீர்திருத்தம் தேவை, தலித்துகள் கையில் நிலம் வரும்போதே இந்த அமைப்பு முறை தகரும்.
நகரமயமாக்கல் மிக வேகமாக நிகழ்ந்து வரும் இந்தியா போன்ற நாட்டில், தலித்துகளுக்கு நிலம் வழங்குதல் என்பது மட்டும் போதுமானதா?
இல்லை, நிச்சயம் இல்லை நிலம் மட்டும் போதாது. தலித்துகளுக்கான நில உரிமை என்பது சாதிய ஒழிப்பின் ஒரு முக்கிய அங்கமே. நிலம் மட்டுமே போதும் என சொல்ல மாட்டேன். விவசாயம் தீவிரமான சரிவை சந்தித்து வரும் நிலையில் நிலம் மட்டும் போதாது, தலித்துகளுக்கு நிலம் கொடுப்பதோடு, விவசாயம் செய்வதற்கான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தர வேண்டும், அப்போது தான் சாதிய அடுக்குகளை ஒழித்துக் கட்ட முடியும். மேலும் தலித்துகளைப் பொறுத்தவரை 75% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். கிராமப்புறங்களில் யாரோ ஒருவரின் வயலில் மணிக் கணக்கில் உழைக்கும் தலித்துகள், தங்களுக்கு என்று நிலம் வழங்கப்பட்டால் உழைக்க மாட்டார்களா? இதனால்தான் தலித்துகளுக்கான நில அதிகாரத்தை வலியுறுத்துகிறேன்.
தலித்துகளின் நில உரிமை போன்றே, வளர்ந்து வரும் பொருளாதார யுகத்தில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்கிற கோரிக்கையும் முக்கியத்துவம் பெறுகிறது. அது பற்றிய உங்கள் கருத்து என்ன?
தனியார் துறை என்பது மிக சொற்பமான வேலைவாய்ப்பையே வழங்கி வருகின்றன. மோடி, தான் பிரதமரானால் அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்று பெரிய அளவில் முழக்கமிட்டார். ஆனால் நடந்திருப்பது என்ன ? வேலையிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் நாம் வலியுறுத்த விரும்புவது அரசுத் துறை முதலீடுகளையும் அரசுத் துறை வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்க வேண்டும் என்பதைத்தான். மேலும் அம்பேத்கர் சொல்வது போன்று சாதி என்பது உழைப்புச் சக்தியை மட்டுமல்ல, உழைப்பாளர்களையும் பிளவுபடுத்துகிறது. இதனால் இன்றைய சூழ்நிலையில் தனியார் துறையில் தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு கோருவதை விட அரசுத் துறைக்கு முன்னுரிமை என்ற கோரிக்கையைதான் வலியுறுத்த வேண்டும். நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் தலித்துகளுக்கான தனியார் இட ஒதுக்கீடு குறித்து நான் மேலும் படிக்க வேண்டும், அதுவரை தனியார் துறை இட ஒதுக்கீடு குறித்த எனது கருத்து மாற்றத்துக்குட்பட்டதுதான். அதனால் இப்போதைக்கு ஒரு இறுதி கருத்தை என்னால் கூற முடியாது.
தமிழகம் போன்ற மாநிலங்களில் சமூக நீதி என்பது ஓரளவு நல்ல அளவிலேயே செயல்படுத்தப்பட்டுள்ளது, குஜராத்தில் இருந்து வரும் நீங்கள் தமிழக சூழலில் தலித்துகளின் நிலையையும், சமூக நீதியையும் எப்படி பார்க்கிறீர்கள் ?
தமிழகத்தைக் குறித்து எனக்கு அதிக தரவுகள் தெரியாது. ஆனால் சமீப வருடங்களில் நிகழ்ந்து வரும் நிகழ்வுகள் கவலையளிக்கிறது. ராமசாமி பெரியார் போன்ற மாபெரும் தலைவர்களை தந்த ஒரு மாநிலத்தில் கௌரவக் கொலைகள், தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெறுகிறது என்பதை அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தோடுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால் ராமசாமி பெரியாரின் தாக்கம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தை சமூக நீதித் தளத்தில் ஒரு படி மேலேதான் நிறுத்தியுள்ளது. சமூக நீதி என்பது சாதி ஒழிப்பின் தவிர்க்க முடியாத ஒரு அங்கம். ஆனால் முற்போக்கு சக்திகளாகிய எங்களிடம் சாதி ஒழிப்புக்கான ஒரு தெளிவான திட்டம் இல்லை. தெளிவான திட்டத்தோடு சாதியை ஒழிக்காமல் நிஜமான சமூக நீதி உருவாக வாய்ப்பில்லை, ஆனால் ராமசாமி பெரியார் போன்ற தீரர்களைப் பெற்றதற்கு நாம் பெருமைப் பட வேண்டும். அம்பேத்கரை விட மிகப் பெரிய பகுத்தறிவுவாதியாக பெரியார் இருந்திருக்கிறார் என்று அறிய முடிகிறது. பெரியாரை ஆழ்ந்து படிக்க வேண்டும் என எண்ணுகிறேன். ஆனால் போதுமான அளவு பெரியாரின் எழுத்துக்கள் இந்தி போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
உங்களுக்கு முன் வந்த பல்வேறு தலித் தலைவர்கள், சோஷலிஸத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருந்துள்ளார்கள், ஆனால் நீங்கள் நேரடியாக மார்க்சியத்தை தழுவி, அதுவே தலித் விடுதலைக்கான தீர்வு என்கிறீர்கள்? தலித் விடுதலையில் மார்க்சியத்துக்கான தொடர்பு எது?
மனித குல விடுதலை என்ற போராட்டத்தில் காரல் மார்க்ஸ், யாரும் தீர்மானித்து விட முடியாத தொட்டு விட முடியாத உயரத்தில் நிற்கிறார். அவர் ஒரு மிகப் பெரிய தத்துவ ஞானி. சாதி என்பது வர்க்கத்தால் சூழப்பட்டது என்று பாபாசாகேப் அம்பேத்கர் கூறுகிறார். சாதியையும் வர்க்கத்தையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க முடியாது. இரண்டின் எதிரிகளும் ஒன்றுதான். சாதிக்கும் வர்க்கத்துக்கும் எதிரிகள் சாதியவாதமும், முதலாளித்துவமும்தான். இந்த இரண்டையும் எதிர்கொள்ள அம்பேத்கரையும் மார்க்ஸ்ஸையும் இணைந்து படிக்க வேண்டும். அம்பேத்கரை பின்பற்றுபவர்கள் மார்க்ஸை படிப்பதில்லை, தலித்துகள் தங்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் முதலாளித்துவத்தையும் எதிர்க்க வேண்டும்.
ஆனால் நீங்கள் சொல்வது போன்று இடதுசாரி அமைப்புகளும் தலித் அமைப்புகள் பெரும்பாலும் ஒன்றாக இணைந்து பயணிப்பதில்லையே?
அதைத்தான் நானும் கவலையோடு பார்க்கிறேன். இந்த இரு தரப்பும் ஒன்றிணையாமல் இருப்பதே சாதியவாதத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் சாதகமான ஒன்றாக உள்ளது. தலித் அமைப்புகளும் இடதுசாரிகளும் ஒன்றாக வேண்டிய தருணம் இப்போது அதிகம் தேவைப்படுகிறது. அம்பேத்கர் ஒரு முறை கூறினார் “ BLUE IS ORIGINALLY RED “ செம்புரட்சி உடன்தான் நீலப்புரட்சியும் நிகழும். மார்க்சியத்தைக் கைவிட்டு விட்டு தலித் விடுதலையும் சாத்தியமில்லை, தலித் விடுதலையைக் கைவிட்டு விட்டு வர்க்கப் புரட்சியும் சாத்தியமில்லை. இன்றைய கால கட்டத்தில் இவர்கள் இருவரும் இணைய வில்லையென்றால் வரலாறு தலித் அமைப்புகளையும் இடதுசாரி அமைப்புகளையும் மன்னிக்காது.
ஒப்பீட்டளவில் கேரளாவில் நில சீர்த்திருத்தம் என்பது நல்ல அளவில் நடந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன, ஆனால் உங்கள் சமீபத்திய பேச்சில் கேரள இடது முன்னணி அரசை விமர்சித்து உள்ளீர்கள், கேரளாவின் நிலச் சீர்திருத்தம் குறித்த உங்கள் கருத்து என்ன?
தோழர் ஈஎம்எஸ் நம்பூதிர்பாட் அரசும் அதற்கு பின்பு வந்த இடதுசாரி அரசுகளும் நில சீர்திருத்தங்களை முழு வீச்சில் மேற்கொண்டார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஒப்பீடு என்பது மற்ற மாநிலங்களில் உள்ள இடதுசாரி அரசோடு அல்லவே, மற்ற மாநில அரசியல் கட்சிகளின் கொள்கைகளில் நில சீர்திருத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லையே, ஆனால் நில சீர்திருத்த்தை கட்சியின் கொள்கை திட்டமாக கொண்டுள்ள இடதுசாரி அரசு, அதை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்று உரிமையோடு வலியுறுத்துகிறேன். குஜராத்தில் எங்களோடு உனா பேரணியில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் தோழர்கள் 'மாட்டு வாலை நீ வைத்துக் கொள் 5 ஏக்கர் நிலத்தை எங்களுக்கு தா' என்று கோஷமிட்டார்கள் அதைத்தான் நான், கேரளாவில் கேட்கிறேன்.
இந்திய அளவில் தலித் அமைப்புகளோடு அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்க முடியும் என்று நம்புகிறீர்களா ?
நம்புகிறேன், அதற்கு முயற்சிக்கிறேன். ஆனால் இப்போதைக்கு நிலைமை வெறிச்சோடி உள்ளது. சிக்கல் என்னவென்றால் தலித்துகள் அடையாள அரசியலில் சிக்கியிருக்கிறார்கள். ஒரு மாநிலத்தில் எங்களை பட்டியல் இனத்தவர் என்று அழையுங்கள் எனப் போராடுகிறார்கள், ஒரு மாநிலத்தில் ஆதிவாசி என்று சொல்லுங்கள் என்கிறார்கள், ஆனால் நான் கூறுவது, என்ன பெயர் சொல்லி அழைத்தால் என்ன? சமூக அடுக்கில் நாம் கீழே தானே வைக்கப்பட்டுள்ளோம் அதற்கு எதிராகத் தானே போராட வேண்டும். அதை விடுத்து அடையாள அரசியலை நடத்தினால் எப்படி தீர்வு கிடைக்கும்.
அம்பேத்கரை ஒரு தீவிர புத்தமதவாதியாகவும், சில இடங்களில் கடவுளாகவும் பார்க்கிறார்கள், தலித் எழுச்சிக்கு இதற்கும் ஏதாவது தொடர்பை பார்க்கிறீர்களா ?
இது அடிப்படை முட்டாள்தனம், அம்பேத்கரை கடவுளாகப் பார்ப்பதை விட முட்டாள் தனம் வேறு ஒன்றில்லை. அம்பேத்கரை விமர்சிக்க வேண்டும் என்பதே என் கருத்து. அதையே அவர் விரும்புகிறார். அம்பேத்கர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரல்லர். அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் அவர் தலித்துகளுக்கு ஆற்றிய சேவையை, செய்ய தவறியவற்றை ஆய்வு செய்ய வேண்டும் விமர்சிக்க வேண்டும் என்று நானே தீவிரமாக சிந்தித்து வருகிறேன். விமர்சிக்காமல் எதையும் ஏற்கக் கூடாது.
இறுதியாக ஒரு கேள்வி, உனா எழுச்சிக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த தலித் அமைப்புகளின் தலைவர்கள் யாரேனும் உங்களை தொடர்பு கொண்டார்களா?
(சிரிக்கிறார்) நீங்கள் கேட்காமல் போயிருந்தாலும் சொல்லியிருப்பேன். இதுவரை யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை, நான் அவர்களுடன் பேச விரும்புகிறேன். தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறேன். ஆனால் அவர்கள் தரப்பில் மவுனம் மட்டுமே நீடிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆனால் அதற்காக நான் அமைதியாக இருக்க மாட்டேன். நான் சென்று அவர்களை சந்தித்து அவர்களுடன் பேசுவேன் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
தொடர்புக்கு: thiyagachemmelst@thehindutamil.co.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக