வியாழன், 28 டிசம்பர், 2017

அழகிரி :ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக ஜெயிக்காது! ..திமுக பதில்...

மின்னம்பலம் :திமுகவில் ஏதோ ஒரு மாற்றம் தேவை என்பதுதான் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எதிரொலித்துள்ளது என்று திமுக முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி கூறியுள்ளார். அழகிரி தன் இருப்பைக் காட்டவே இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று அவருக்கு உடனடியாக திமுக சார்பில் பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் வெற்றிபெற்றார். திமுக வேட்பாளர் மருது கணேஷ் உள்ளிட்ட 57 வேட்பாளர்களுக்கு டெபாசிட்கூடக் கிடைக்கவில்லை. தோல்வி குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அளித்த விளக்கத்தில் இது திமுகவுக்குக் கிடைத்த தோல்வி அல்ல, தேர்தல் ஆணையத்துக்குக் கிடைத்த தோல்வி என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று (டிசம்பர்-27) மு.க.அழகிரி தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில், "தோல்வியை யாரும் தோல்வியென்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கட்சி ஓட்டைப் பணம் சாப்பிட்டுவிட்டது என்று துரைமுருகன் கூறுகிறார். அவர் இப்படிக் கூறலாமா, கட்சியினருக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்? திமுகவினரை இப்படி கூறினால் எப்படி வருங்காலத்தில் திமுக நிலைத்திருக்கும்?” என்று கேள்விஎழுப்பினார்.
தொடர்ந்து அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:

ஸ்டாலினுடன் உங்களுக்கு பல ஆண்டுகளாக முரண்பாடுகள் உள்ளதே?
அது நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்தது. அதைப் பற்றித் தற்போது பேச வேண்டாம். கட்சியினருக்காக நான் கேள்விகள் கேட்டேன். அதனால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டேன். நியாயத்திற்கு அங்கு மரியாதை இல்லை. ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தேர்தலில் திமுக வெற்றிபெறாது. மாறுதல் தேவை. தம்பி வா தலைமை ஏற்க வா என்று ஒருவர் கூப்பிட்டால் மட்டும் தேர்தலில் வெற்றிபெற முடியாது. வேனில் செல்லாமல் திமுக தலைவர் கருணாநிதியைப் போல வீதியில் இறங்கிச் சென்று களப் பணியாற்ற வேண்டும்.
ஆட்சி மாற்றத்தைக் கொடுக்கக் கூடிய சக்தி திமுகவிடம் தான் உள்ளது என்று ஸ்டாலின் கூறியுள்ளாரே?
திமுகவால்தான் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பல மாநிலங்களில் ஆட்சி மாற்றம் என்பது ஏற்பட்டுக்கொண்டுதான் உள்ளது.
தினகரன் கடந்த இடைத் தேர்தலிலிருந்து களப்பணி ஆற்றியுள்ளார். அதனால்தான் அவர் வெற்றிபெற முடிந்தது. குக்கர் என்பது ஒரு குறுகிய கால சின்னம். உதயசூரியன், இரட்டை இலை என இரண்டு பழமையான கட்சிகளின் சின்னங்களுக்கு இடையில் 33ஆவது இடத்திலுள்ள குக்கர் சின்னத்தில் வாக்களிக்கிறார்கள் என்றால் திமுக, அதிமுக என இரு தரப்பு மீதும் மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது. எனவே திமுகவில் ஏதோ ஒரு மாற்றம் தேவை என்பதுதான் ஆர்.கே.நகரில் எதிரொலித்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் அழைத்தால் கட்சியில் இணைவீர்களா?
நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், நான் மன்னிப்பு கேட்டால் கட்சியில் இணைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். நான் தவறே செய்யவில்லை, பிறகு எப்படி மன்னிப்புக் கேட்க முடியும்.
பணம் கொடுக்கவில்லை, தேர்தலை நியாயமாக சந்தித்தோம். எங்களுக்கு இவ்வளவு வாக்குகள் கிடைத்ததே மகிழ்ச்சிதான் என்று திமுகவினர் கூறுகின்றனரே?
யார் அப்படி சொன்னது,அப்படியென்றால் இதற்கு முன்பு நடந்த இடைத் தேர்தல்களில் திமுக பணம் கொடுத்துதான் வெற்றிபெற்றதா? தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி பணம் ஒரு அளவுக்குத்தான் செலவு செய்ய முடியும். திருமங்கலத்தில் கட்சியினர் எப்படி உழைத்தார்கள் என்பது அங்கு இருந்திருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். திருமங்கலம் பார்முலா என்பது களப்பணிதானே தவிர, பணமிருந்தால் மட்டும் யாரும் வெற்றிபெற முடியாது. உழைப்பைப் பெறுகின்ற அந்தத் தன்மை தலைமை ஆசிரியருக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் மற்ற ஆசிரியர்களை வழிநடத்த முடியும்.
திமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
புதிதாய் வந்தவர்களுக்கு எப்போது பதவி கொடுப்பதை நிறுத்துவீர்களோ அப்போதுதான் கட்சிக்கு எதிர்காலம். துரோகிகளுக்குப் பதவியைக் கொடுத்துப் பழைய கட்சிகாரர்கள் எப்போது மறந்துவிட்டீர்களோ அதுவரை ரொம்ப கஷ்டம். ஆர்.கே.நகர் என்றல்ல, இனி எந்தத் தேர்தலிலும் திமுக வெற்றிபெறாது. செயல் தலைவர் இருக்கும் வரை அதற்கான வாய்ப்பே இல்லை. அவர் ஆக்டிவாக இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது’’ என்று கூறியுள்ளார் அழகிரி.
திமுக உடனடி பதில்!
அழகிரி, இப்படி அதிரடி பேட்டிகள் அளித்துக் கொண்டிருந்த நிலையிலேயே கட்சி சார்பில் அழகிரிக்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் பதில் அளித்துள்ளார்.
"அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். அவருடைய வார்த்தைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மன்னிப்பு கேட்டால் கட்சியில் இணைத்துக்கொள்வோம் என்று
கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். யாரும் அவருக்கு அப்படி சொல்லவில்லை. தனது இருப்பை வெளிக்காட்டவே அவர் இவ்வாறு கூறியுள்ளார், பணத்துக்கு விலை போயுள்ளனர் என்றெல்லாம் துரைமுருகன் கூறவில்லை. நிருபரின் கேள்விக்கு அப்படி இருந்தால் பார்க்கலாம் என்றுதான் கூறியுள்ளார். எங்களுக்குள் சிண்டு முடியப் பார்க்கிறார் அழகிரி. அவர் யார் இதைக் கூறுவதற்கு?’’ என்று கேட்டுள்ள ஜெ.அன்பழகனிடம்,
’’89 பேர் எம்.எல்.ஏ.க்கள் ஆவதற்குக் காரணம் திமுக தலைவர் கருணாநிதி முதல்வர் ஆவார் என்பதற்காகவே தவிர, ஸ்டாலினுக்காக அல்ல’ என்று அழகிரி கூறியுள்ளது பற்றி கேட்கப்பட்டபோது, “அப்படியென்றால் பாராளுமன்றத் தேர்தலில் மதுரையில் போட்டியிட்ட அழகிரிக்கு ஸ்டாலின் பிரச்சாரம் எதற்காக தேவைப்பட்டது?” என்று பதிலுக்கு ஒரு கேள்வியைக் கேட்டார் அன்பழகன்.

நக்கீரன் ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை எந்தத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற முடியாது என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள மு.க.அழகிரி, இந்த செயல்தலைவர் இருக்கும் வரை திமுக ஆர்.கே.நகர் தேர்தல் மட்டுமல்ல, வேறெந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெற முடியாது. அவர் ஆக்டிவா இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. அவர் உடல்நலக்குறைவில் இருக்கிறது என தெரிவித்திருந்தார். இதுகுறித்து காட்சி ஊடகம் ஒன்றிற்கு விளக்கம் அளித்த மு.க.அழகிரி, ‘அவர் ஆக்டிவாக இல்லை என்று நான் கூறவில்லை. ஆனால், அவர் இருக்கும்வரை எதுவும் சரியாக இருக்காது; அதுமாதிரியான ஆட்களை தன்னுடன் வைத்துள்ளார் அவர். தேர்தலில் தோற்பவர்கள் சொல்வதைப் போல ஸ்டாலின் சப்பைக்கட்டு கட்டுகிறார். தேர்தலில் முறையாக வேலை செய்யவேண்டும். வேனில் ஏறி நின்று வெறும் பிரச்சாரம் செய்தால் மட்டும் போதாது. கலைஞரைப் போல களப்பணி செய்யத் தெரியவேண்டும். தினகரன் தொடக்கத்தில் இருந்தே களப்பணி செய்திருக்கிறார். அதனால்தான் அவர் வெற்றி பெற்றார். பணம் இருந்தால் மட்டும் ஒரு வேட்பாளர் ஜெயித்து விட முடியாது. திருமங்கலம் பார்மூலா என்கிறீர்கள்.. திருமங்கலத்தில் கட்சிக் காரர்கள் எப்படி உழைத்தார்கள் என்பதை நேரில் இருந்து பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக