செவ்வாய், 19 டிசம்பர், 2017

தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்!

நக்கீரன்  :சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்திய சமூக அறிவியல் அகாடமி சார்பில் நடந்த தேசிய அளவிலான ஒரு வார மாநாட்டிற்கான தொடக்க விழா இன்று காலை தொடங்கியது.இந்நிகழ்வில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்துப்பேசினார். இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால், இந்திய சமூக அறிவியல் அகாடமி தலைவர் சர்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.<">இதில் பேசிய, ஆளுநர், “சுதந்திரத்திற்கு பின்பு உலக அளவில் உயர்கல்வியில் மிகப்பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. இதுமட்டும் போதாது, வருங்காலங்களில் உயர்கல்வியில் இன்னும் நிறைய மாற்றங்களை கொண்டுவரவேண்டும். இனி வரும் காலத்தில் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். அதற்க்கான புதிய கண்டுபிடிப்புகள் தேவைப்படுகிறது. அப்போதுதான் எதிர்காலத்தில் போட்டிகளையும், சவால்களையும் சந்திக்க இந்திய இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும். வேலைவாய்ப்பையும் பெற முடியும்.
>பொருளாதார முன்னேற்றம், உலக மயமாக்கல் ஆகியவற்றை எடுத்து செல்லும் வகையில் இந்திய கல்வி முறை இருக்கவேண்டும். மனிதவள மேம்பாட்டிற்கு தமிழ்நாடு கல்வித்துறை முக்கியத்துவம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மொத்தம் 800 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில், 40 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. இங்கே 3.4 கோடி மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

;இங்குள்ள பெரியார் பல்கலைக்கழகம் நமது நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் 85-வது இடத்தில் உள்ளது. இது பெருமைப்படவேண்டிய வி‌ஷயமாகும். தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 24 பல்கலைக் கழகங்கள் உள்ளன. இந்த 24 பல்கலைக்கழகங்களும் முதல் 100 இடங்களுக்குள் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தியாவில் உள்ள 40 ஆயிரம் கல்லூரிகளில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டில் உள்ள 37 கல்லூரிகள் இடம் பெற்று உள்ளன. அதுவும் பெருமைப்படக் கூடிய வி‌ஷயமாகும். நமது பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு மனித வள மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த திட்டங்கள் மக்களை சென்றடைந்தால் தான் இந்தியா மேலும் வளமான நாடாக மாறும்...” என்றார். பின்னர், மாநாட்டு மலரையும் ஆளுநர் வெளியிட்டார்.


பின்னர் ஆளுநர், தேநீர் இடைவேளைக்காக சேலம் திரும்பினார். அஸ்த்தம்பட்டியில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் சிறிது நேர ஓய்வுக்கு பின்னர், ஓமலூர் அருகிலுள்ள திண்டமங்கலம் ஊராட்சியில் கிராமிய சுகாதாரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பசுமை இந்தியா திட்டம் குறித்து பெண்கள் வரைந்திருந்த கோலத்தை அவர் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

     அங்கே காலை முதல் சுத்தமாக கூட்டி பெருக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில், ஒரு பெண் ஆலமரத்து இலைகளை கொண்டுவந்து கொட்டிவிட்டு சென்ற பின்னர், அந்த இடத்துக்கு ஆளுனரை அழைத்துச் சென்ற சேலம் மாவட்ட ஆட்சியர், ரோகினி சுகாதார பணியாளர்கள் வைத்திருந்த துடப்பத்தை வாங்கி ஆளுநரிடம் கொடுக்க, அவரும் குப்பை கூட்டுவது போல போஸ் கொடுத்தார்.


பின்னர் வரண்டு போன ஆலமரத்து இலைகளை வாரி குப்பை வண்டியில் போடுவது போலவும், ஆளுநர் மற்றும் ஆட்சியர் இருவரும் போஸ் கொடுத்துவிட்டு, அங்குள்ள ஒரு வீட்டில் கழிவறை எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பி சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்த தானியங்கி தரை சுத்தம் செய்யும் கருவியை இயக்கி வைத்துவிட்டு, ஏற்காடு பேருந்து நிற்கும் இடத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் இருந்தபடியே அந்த பக்கம் இருந்த சிலருக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வழங்குவது போல போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதிய சாப்ட்வேர் ஒன்றையும் அவர்வெளியிட்டவர, பின்னர் ஓய்வுக்காக ஆய்வு மாளிகைக்கு கிளம்பினார்.


மாலை நான்கு மணிக்கு பொதுமக்களிடம் ஆளுநர் மனுக்களை வாங்குகிறார் என்ற அறிவிப்பை தொடர்ந்து, காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்திருந்த பெரும்பாலான மக்களை நேராக ஆளுநரிடம் மனு கொடுக்கலாம் என்று சொல்லி அதிகாரிகள் அங்கே அனுப்பி வைத்திருந்தனர். கூடவே பாரதீய ஜனதா மற்றும் இந்து முன்னணி ஆதரவாளர்கள் பலரும் மனுக்களுடன் அங்கே வந்திருந்தனர். ஒவ்வொருவரையும் தன்னுடைய அறைக்கு கூப்பிட்டு மனுக்களை வாங்கிய ஆளுநர், இரவு தொடர் வண்டி மூலம் சேலத்தில் இருந்து சென்னை செல்கிறார்.

 ஆளுநர் வருகையை முன்னிட்டு, அஸ்த்தம்பட்டி முதல் குரங்கு சாவடி வரையிலும், ஐந்து ரோடு முதல் புதிய பேருந்து நிலையம் வரையிலும் பல இடங்களில் இரவோடு இரவாக புதிய சாலை அமைக்கும் பணியும், நாறிப்போய் கிடக்கும் புதிய பேருந்து நிலையத்தின் தரையை சுத்தம் செய்யும் பணியும் கடந்த இரண்டு நாளும் நடை பெற்றது.


இன்று காலை 11.00-மணிக்கு ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மத்திய, மாவட்ட தி.மு.க. பொருளாளர் சுபாஷ் தலைமையில் தி.மு.க., கம்யூனிஸ்ட்டு மற்றும் விடுதலை சிறுத்தை உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

- பெ.சிவசுப்ரமணியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக