வெள்ளி, 15 டிசம்பர், 2017

அதிமுகவினர் ஊடகங்களில் தலைகாட்டத் தடை? விவாதங்களில் மானம் போவதால்...


அதிமுகவினர் ஊடகங்களில் தலைகாட்டத் தடை?minnambalam :ஊடக நிகழ்ச்சிகளில் அதிமுக கட்சி சார்பில் பங்கேற்க எந்த ஒரு நபருக்கும் அனுமதியோ, ஒப்புதலோ அளிக்கப்படவில்லை என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் அரசியல் விவாதம் என்பது இப்போது பரவலாகி வருகிறது. ஒவ்வொரு கட்சி சார்பிலும் இந்த விவாதங்களில் கலந்துகொள்வதற்கென்று, சிறப்பு பேச்சாளர்கள் அடங்கிய செய்தித் தொடர்பாளர்கள் குழு தனியாக உள்ளது. தினசரி விவாதங்கள் ஊடகங்களில் பெருகிவரும் நிலையில், ஒவ்வொரு கட்சியும் குறிப்பிட்ட பிரச்சனைகளில் தங்களது நிலைப்பாடுகள் என்னவென்பதை தெரியப்படுத்த, இந்த செய்தித் தொடர்பாளர்கள் குழுவைப் பயன்படுத்தி வருகின்றன.
கடந்த நவம்பர் 28ஆம் தேதியன்று, இது தொடர்பாக அதிமுக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. இதில், விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துகளை அதிகாரப்பூர்வமாக எடுத்துரைப்பதற்கென புதிய செய்தித்தொடர்பாளர்கள் குழு விரைவில் அமைக்கப்படும் என்றும், அக்குழுவில் இடம்பெறுவோர் மட்டுமே அரசியல், சமூக, பொருளாதார விவகாரங்கள் குறித்த கழகத்தின் நிலைப்பாடுகளை எடுத்துக்கூறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று (டிசம்பர் 15) மீண்டும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ”அதிமுக ஆதரவாளர்கள், கழகத்தின் தோழமைக் கட்சியினர் என்று சிலர் ஊடகங்களில் கூறிவரும் கருத்துகள் கழகத்தின் அதிகாரப்பூர்வ கருத்துகள் அல்ல. அவ்வாறு ஒரு அடையாளத்தை கூறிக்கொண்டு, தங்கள் கருத்துகளை கழகத்தின் கொள்கை நிலைப்பாடாக எடுத்துரைக்க, எந்த ஒரு நபருக்கும் அனுமதியோ, ஒப்புதலோ தரப்படவில்லை என்பதையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் கருத்துகளைக் கூற யாரும் நியமிக்கப்படவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபகாலமாக, தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றிய கேள்விகளுக்கு, அதிமுக சார்பில் விவாதங்களில் கலந்துகொள்பவர்கள் மழுப்பலான பதில்களைக் கூறுவது மற்றும் பதில் சொல்ல முடியாமல் திணறுவது தொடர்ந்து வருகிறது. இதனால், விவாதத்தின் போக்கு திசைமாறுவதும் தொடர்கிறது. இதிலிருந்து தப்பும்பொருட்டு, அதிமுகவினர் ஊடகங்களில் பங்கேற்க மறைமுக தடை விதிக்கவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்ப்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக