திங்கள், 18 டிசம்பர், 2017

மோடிக்கு மகிழ்ச்சிதானா?: பிரகாஷ் ராஜ் கேள்வி!


மோடிக்கு மகிழ்ச்சிதானா?: பிரகாஷ் ராஜ் கேள்வி!
minnambalam :குஜராத், இமாச்சல் பிரதேசத்தின் வெற்றி பிரதமர் மோடிக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறதா என நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடே எதிர்பார்த்துக்கொண்டிருந்த குஜராத், இமாச்சல் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இரு மாநிலங்களிலும் பாஜக வென்றுள்ளது. குறிப்பாக குஜராத்தில் ஆறாவது முறையாக ஆட்சியமைக்கிறது. இருப்பினும் 150 இடங்களுக்கு மேல் வெற்றிபெறுவோம் என சூளுரைத்த பாஜக மாலை 6.50 நிலவரப்படி 95 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகம்.
இந்நிலையில், பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள பிரதமரே, வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்… ஆனால், உண்மையிலேயே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? #சும்மாகேட்கிறேன் (#justasking)” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “உங்கள் விகாஸ் (வளர்ச்சி) முழக்கத்தால் தேர்தலில் நீங்கள் அபரிமிதமான வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும் அல்லவா? 150+… என்ன ஆச்சு?” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

கௌரி லங்கேஷ் படுகொலையிலிருந்து பல விஷயங்களில் மத்திய அரசை விமர்சித்துவரும் பிரகாஷ் ராஜ் பிரிவெண்ணம் கொண்ட அரசியல் இங்கு எடுபடவில்லை என்று கூறியுள்ளார். “பாகிஸ்தான், மதம், சாதி, மிரட்டல் விடுக்கும் உதிரிக் குழுக்களை ஆதரித்தல், தனிப்பட்ட பகைமையைத் தீர்த்துக்கொள்ள முனையும் ஈகோ ஆகியவற்றை விடவும் பெரிய பிரச்சினைகள் நம் நாட்டில் இருக்கின்றன. உண்மையான பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன. புறக்கணிக்கப்பட்ட விவசாயிகள், ஏழைகள், கிராமப்புற மக்கள் ஆகியோரின் குரல்கள் கொஞ்சம் உரக்க ஒலிக்கின்றன. உங்களுக்குக் கேட்கிறதா?” என நாட்டில் உள்ள முக்கியமான சில பிரச்சினைகளை மோடிக்குக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக