வியாழன், 14 டிசம்பர், 2017

அமேஸானில் கவிஞர் பிரமிள் இன் கைப்பிடியளவு கடல் ...

எஸ்.ராமகிருஷ்ணன்: எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் முயற்சியால் கவிஞர் பிரமிளின் நூல்கள் தற்போது அமேஸானில் ஈபுக்காக விற்பனைக்கு கிடைக்கின்றன.
பிரமிள் (1939-1997), நவீன தமிழ் இலக்கியத்தின் சாதனையாளர்களில் குறிப்பிடத்தக்கவர். தருமு சிவராம் என்றும் அறியப்பட்டவர்.
காலாதீதத்திலும் இக்கணத்திலும் அலையும் அவருடைய கவிதையும் ஆய்வுக்கூர்மை, தீவிரம், பன் முகத்தன்மை நிறைந்த அவருடைய விமர்சனமும் அவரது இருபெரும் சிகரங்கள். மேலும் புனைகதை, நாடகம், ஓவியம், சிற்பம், ஆன்மீகம், மறை முக ஞானம் ஆகியவற்றிலும் அவரது ஆற்றலும் வெளிப்பாடும் உயரிய நிலையைப் பெற்றுள்ளன.
மேதமையும் மரபின் அத்திவாரமும், அறிவார்த்தச் செழுமையும் அங்கதக் கூர்மையும் ஆன்மீக விரிவும் சமூக விமர்சனமும் கவித்துவத்தின் அதிகபட்ச சாத்தியமும் பெற்று விளங்குகின்றன இவருடைய கவிதைப் பனுவல்கள்.
பிரமிளின் வாழ்நாளில் வெளியான கவிதைத் தொகுப்பு நூல்கள் கண்ணாடியுள்ளிருந்து (1972), கைப்பிடியளவு கடல் (1976), மேல்நோக்கிய பய ணம் (1980) ஆகியவை. அவரது மறைவுக்குப் பின் வெளிவந்த முழுக்கவிதைகளின் தொகுப்பு பிரமிள் கவிதைகள் (1998) என்ற நூல். இதில் பிரமிளின் பிரதான கவிதைகள், விமர்சனக் கவிதை கள், தமிழாக்கக் கவிதைகள், ஆங்கிலக் கவிதைகள் ஆகிய எல்லா கவிதைகளும் முழுமையாக அடங்கி யிருந்தன.

இவையாவும் தனித்தனி நூல்களாகவும் முழுத் தொகுப்பாகவும் வரவிருக்கின்றன. பிரமிளின் நெருங்கிய நண்பரும் ஆய்வாளரும் அவரது எழுத்துகளின் பதிப்பாளருமான கால சுப்ரமணியம் அவர்கள், பிரமிளின் அச்சுப் புத்தகங்களைக் கொண்டுவரும் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளார். ஆகவே பிரமிள் கவிதைகளின் ஆர்வலரான விமலாதித்த மாமல்லனின் முயற்சியில், அமேஸானில்  பிரமிளின் அனைத்து எழுத்துக்களும் மின்னூலாக அடுத்தடுத்து வெளிவரவிருக்கின்றன.
அந்த வரிசையில் முதலாவதாக பிரமிளின் கைப்பிடியளவு கடல் வெளிவந்துள்ளது.
இலங்கை திரிகோணமலையில் பிறந்து கடல்தாண்டி இந்தியா வந்து மகத்தான படைப்புக்கள் தந்த பிரமிள்!
‪தமிழின் மகத்தான கவிஞன் பிரமிள் இப்போது அமேஸானில்
https://www.amazon.in/dp/B077Y7DBKS
https://www.amazon.com/dp/B077Y7DBKS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக